லவ் செக்ஸ் அவுர் தோகா 2 – மாறிவரும் ரசனையைத் தோலுரிக்கும்!

சமூகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் திரைப்படங்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படலாம். ‘அப்பவே சொல்லியிருக்காங்க பாருங்க’ என்று சிலாகிக்கப்படலாம். ஆனால், முதல்முறை வெளியாகும்போது அவற்றில் பல ரசிகர்களின் பார்வையில் இருந்து விடுபடவே வாய்ப்புகள் அதிகம்.

ஷாங்காய், கோஸ்லா கா கோஸ்லா படங்களை இயக்கிய திபாகர் பானர்ஜி தற்போது தந்திருக்கும் ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’ படமும் அந்த வரிசையில் சேரும்.

ரியாலிட்டி ஷோக்களில் வெளிப்படும் பிரபலங்களின் இன்னொரு முகம், செய்தித் தொலைக்காட்சிகளின் பரபரப்பு பசி, சமூக வலைதளப் பிரபலமாக ஆவதற்காக மேற்கொள்ளப்படும் ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’ ஆகியவை குறித்து பேசுகிறது இப்படம். அதனாலேயே, குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கத்தகாத படமாகவும் உள்ளது.

சரி ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’ தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டது?

உடனடிப் புகழின் பின்னே..

காதலும் காமமும் துரோக மனப்பான்மையும் சமகாலச் சமூகத்தில் எந்த அளவுக்கு மோசமான கட்டத்தை எட்டியுள்ளன என்பதைச் சொன்னது, 2010-ல் வெளியான ‘லவ் செக்ஸ் அவுர் தோகா’.

கிட்டத்தட்ட 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அதே பாணியில் மூன்று கதைகளை இதில் தந்திருக்கிறார் திபாகர் பானர்ஜி.

லைக், ஷேர், டவுன்லோட் என்ற பெயரில் அவை திரையில் விரிகின்றன.

முதல் கதை நூர் எனும் திருநங்கை பற்றியது. முழுக்கப் பெண்ணாக மாறத் துடிக்கும் அவர், தன்னுடைய அறுவை சிகிச்சை செலவுகளுக்காக ‘ட்ரூத் யா நாச்’ எனும் ரியாலிட்டி – டான்ஸ் ஷோவில் பங்கேற்கிறார்.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக நூர் உடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் அவரது தாயை நிகழ்ச்சிக்கு அழைத்து வருகின்றனர் அதனை நடத்துபவர்கள். கேமிராவுக்கு பின்புறம் நூரின் செய்கைகள் உக்கிரமாக இருக்கின்றன.

அவற்றைச் செயற்கையாக, கேமிராவுக்கு முன்பாகவும் மீண்டும் ஒருமுறை நிகழச் செய்கின்றனர் அந்த நிகழ்ச்சியில் பணியாற்றுபவர்கள்.

அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் நூர் குறித்த அவதூறுகளும் வேகமாகப் பரவுகின்றன. ஒருகட்டத்தில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்று நூர் செய்யும் ஒரு செயல், அவரை அந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றுவதோடு அக்கதை முடிவடைகிறது.

மெட்ரோ ரயில் நிலையமொன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் குலு எனும் திருநங்கை பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவத்தில் இருந்து இரண்டாவது கதை தொடங்குகிறது.

அது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று குலுவை வற்புறுத்துகிறார் மேலாளர் லவினா சிங். விசாரணையின்போது, குலு பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வருகிறது.

திருநங்கைகளைப் பணியில் அமர்த்துவதை ஒரு திட்டமாகச் செயல்படுத்தி வரும் அந்த தனியார் நிறுவனம், குலுவின் வழக்கை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறுகிறது. அதோடு, லவினா சிங்கின் சிந்தனைகளும் பழமையில் ஊறியதாக உள்ளது.

தன்னையும் நிறுவனத்தையும் அவதூறுகளில் இருந்து காப்பதற்காக, குலுவைப் பலி கொடுக்கத் தயாராகிறார் லவினா.

குலுவின் காதலர் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். வாடகை வீட்டில் இருந்து அவர்களது உடைமைகள் வீசியெறியப்படுகின்றன. தங்க இடமில்லாமல் நிர்க்கதிக்கு ஆளாகும் குலு, மெட்ரோ ரயில் நிலையத்தில் தர்ணா செய்கிறார். அதன்பிறகு என்னவானது என்பதோடு அக்கதை முடிவடைகிறது.

கேமர் உலகில் ‘கேம் பாப்பி’ என்றழைக்கப்படும் சுபம் எனும் பதின்ம வயதுச் சிறுவனைப் பற்றிப் பேசுகிறது மூன்றாவது கதை.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான சுபம், சமூக வலைதள உலகில் ஒரு ‘இன்ப்ளூயன்ஸர்’ ஆக வளர்கிறார். அவருக்கென்று ரசிகர்களும் ஹேட்டர்களும் பெருகுகின்றனர்.

தன்னை மேலும் வளர்த்தெடுக்க சுபம் முயலும்போது, ஹேக்கர்களின் புண்ணியத்தால் அவரைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியாகின்றன. அவற்றால் அவரது பிரபல்யம் இன்னும் அதிகமாகிறது.

ஒருகட்டத்தில், தான் என்ன தவறு செய்கிறோம் என்றறியாதவாறு அந்த மாய உலகில் சிக்கிக்கொள்கிறார் சுபம்.

உடனடிப் புகழை விரும்புகிற அந்த இளம் மனது இறுதியில் என்னவானது என்பதோடு அக்கதை முடிவடைகிறது.

மூன்று கதைகளிலும் சில பாத்திரங்கள் பொதுவானதாக உள்ளன. இன்றைய சூழலில் மாற்றுப் பாலினத்தவரைச் சமூகமும் கார்பரேட் நிறுவனங்களும் எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பேசுகின்றன.

நடிகர்களின் துணிவு!

சுபம், பிரதீக் வாட்ஸ் உடன் இணைந்து ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’ வின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தித் தளங்கள், யூடியூப் வீடியோக்கள், வீடியோ கேம் வேட்கை, சமூக வலைதள பிரபலங்களின் குயுக்திகள் போன்றவை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் இப்படத்தில் அதே பாணியில், தொனியில் இடம்பெறுவதே இதன் சிறப்பு.

அதற்காகப் பெரும் உழைப்பு இதில் கொட்டப்பட்டிருக்கிறது. ஏஐ, டீப் பேக் தொழில்நுட்பங்களும் கூட இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பரிதோஷ் திவாரி போனிடா ராஜ்புரோகித், அபிநவ் சிங் முதன்மை பாத்திரங்களில் தோன்றிய இப்படத்தில் அனு மாலிக், துஷார் கபூர், சோபியா சவுத்ரி, மௌனி ராய், ஸ்வாஸ்திகா முகர்ஜி, பியூஷ் குமார் என்று பல சினிமா பிரபலங்கள் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கின்றனர்.

எதிர்மறை விமர்சனங்கள் குவியும் என்ற தடுமாற்றத்தை மீறி, இப்படத்தில் தோன்றத் தனியாகத் தைரியம் வேண்டும். அது இதில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரிடமும் இருந்துள்ளதைப் படத்தின் உள்ளடக்கம் நிரூபிக்கிறது.

ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, பரந்து விரிந்த திரையில் முழுக்கப் பிம்பம் தெரிய வேண்டும் என்ற சிந்தனை மாறியிருக்கிறது. போலவே, அழகியல் மிக்க ஓவியம் போல ஒவ்வொரு பிரேமும் அமைய வேண்டும் என்ற எண்ணமும் மாற்றம் கண்டுள்ளது.

அதற்கேற்ப, காட்சிகளின் தன்மையை முன்னிறுத்தி அமைந்துள்ளது ஆனந்த் பன்சால், ரிஜு தாஸின் ஒளிப்பதிவு.

தியா தேஜ்பாலின் தயாரிப்பு வடிவமைப்பு, அதற்கேற்ற களத்தைக் கண் முன்னே காட்டுகிறது.

பர்மிதா கோஷின் படத்தொகுப்பு செறிவாக அமைந்துள்ளது; சில நேரங்களில் ‘சப்டைட்டில்ல என்ன இருந்தது’ என்று யோசிப்பதற்குள் இன்னொரு விஷயத்தை அவர் நம் மூளைக்குள் திணிக்கிறார்.

இவற்றோடு திபாகர் பானர்ஜி, தன்மய் சாட்டர்ஜி, நிம்ரித் ஷாவின் பின்னணி இசை வேறு நம்மை உலுக்கியெடுக்கிறது.

ஆகியவற்றோடு ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ், ஏஐ, டீப் பேக் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மிகச்சரியாக ஒன்றிணைந்து ‘எல்எஸ்டி 2’ உலகத்தை நமக்குக் காட்டுகின்றன.

‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வின் மிகப்பெரிய பலமே, கதையில் பிரதானப்படுத்தப்படும் உலகத்திற்குள் நாமே சென்ற உணர்வை உருவாக்குவதுதான்.

சிசிடிவி பார்வையில் விரியும் ‘பிக்பாஸ்’ டைப் நிகழ்ச்சியானாலும் சரி; நொடிக்கு நொடி தங்களது பர்சனல் வாழ்வைப் பகிரும் ‘விளாக்கர்களின்’ மனநிலையைக் காட்டுவதானாலும் சரி; வீடியோ கேம் எனும் மாய உலகினுள் சிக்கிக்கொள்வதாக இருந்தாலும் சரி; அவற்றின் வேரைத் தொட்டுப் பார்க்கும் உணர்வைத் தருகிறது இப்படம்.

பொதுமக்களின் ரசனையை ஏதோ ஒரு திசையில் திட்டமிட்டுத் திருப்பும் வேலையைச் சிலர் ‘கள்ளத்தனமாக’ச் செய்ய, அதற்கு அவர்கள் பலியாவதைத் தோலுரிக்கிறது ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’.

சமூகத்தின் மீதான விமர்சனம்!

தொண்ணூறுகளில் தண்ணீர் பாட்டில் வாங்குபவரைக் கிண்டலாகப் பார்த்தது அப்போதைய சமூகம். இன்றைய சூழலில், தண்ணீர் கேன் வியாபாரம் என்பது படு சூடான வர்த்தகங்களில் ஒன்று. வெறுமனே முப்பதாண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் அது.

அதை ‘அலேக்’காக தாண்டும் வகையில் சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன.

’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும் விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

இதில் அவர் காட்டும் உலகங்கள் நமக்கு அருவெருப்பைத் தரலாம். ‘ச்சீ..’ என்று வெறுப்பை உமிழ வைக்கலாம்.

’இப்படியெல்லாமா படம் எடுப்பாங்க’ என்று விமர்சிக்கச் செய்யலாம்.

அனைத்தையும் தாண்டி, இது சமூகத்தின் மீது இப்படைப்பு முன்வைக்கும் விமர்சனம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

முக்கியமாக, மக்களின் மனநிலையைச் சீரழிப்பதன் வழியாகப் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ’கார்பரேட்’ அசுரத்தனத்தை இது அம்பலப்படுத்துகிறது.

எல்லா தரப்பு ரசிகர்களும் ஏற்கும்படியாக, மென்மையாக, பெரிதாக அருவெருப்பூட்டாத வகையில் இந்த விஷயங்களைச் சொல்லியிருக்க முடியும்.

ஆனால், சொல்ல வந்த விஷயத்தில் எந்தச் சமரசமும் கூடாது என்ற நோக்கோடு மிகத்தீர்க்கமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’. அதனை எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள், இப்படத்தைத் தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்!

– மாபா

You might also like