டாக்டர் அம்பேத்கர் புத்தகங்களோடு வாழ்ந்தவர், பல்லாயிரம் பக்கங்களை ஆவணங்களாக எழுதிக் கொடுத்தவர்.
புத்தகங்களைச் சேகரிப்பதில், எழுதுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை விளக்கும் சுவையான நிகழ்வுகளை அவரது உதவியாளர்களின் அனுபவப் பதிவுகளைக் கொண்டு விளக்கும் நூல்.
மதமாற்றத்திற்கு அம்பேத்கர் கூறிய காரணங்களையும், பௌத்தத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் விளக்குவதுடன், டாக்டர் அம்பேத்கரின் வள்ளல் தன்மையையும் இந்நூல் விளக்குகிறது.
****
புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கர் அவர்களைப் பற்றி நான் வாசித்த முதல் புத்தகம். முப்பது வருடம் ஆகிவிட்டதே அம்பேத்கர் அவர்களை வாசிக்க என்ற வெட்கம் ஒரு புறம் இருக்க, ‘Better late than never’ என்ற பொன்மொழிக்கேற்ப இப்புத்தக வாசிப்பு தொடங்கியது.
அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவினார் என்பது நான் அறிந்த ஒன்றாக இருந்தாலும், இந்து மதம் என்ற பேரில் அறிவிற்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் போட்டிருந்த விலங்குகளை உடைத்துத் தகர்த்துவதற்கு என்னவெல்லாம் கரணங்களாக இருந்தது என்பதை அறிவதற்கு கி.வீரமணி அவர்கள் எழுதிய இப்புத்தகம் உதவியாக இருந்தது.
இந்து மதத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பகுத்தறிவு நெறியைப் போதிக்கும் புத்த மார்க்கத்தினை அவர் பின்பற்றியது பற்றி விளக்குகிறது இப்புத்தகத்தின் முதல் பாகம்.
தன்னுடைய விடுதலை மற்றும் தன்னைப் போல இருக்கும் மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே அண்ணல் அவர்களின் சிந்தனையில் ஊறிப்போன ஒன்றாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கின்றது.
அந்த சிந்தனைத் தீ கொழுந்து விட்டு எறிவதற்குப் புத்தகங்களே அவருடைய தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஆகவே புத்தகங்களின் மீது அவர் கொண்ட காதலைச் சொல்கிறது இப்புத்தகத்தின் இரண்டாம் பாகம்.
சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality), சகோதரத்துவம் (Fraternity) இம்மூன்றினை தன் வாழ்க்கை தத்துவமாகப் புத்தரின் போதனைகளிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார் டாக்டர். அம்பேத்கர்.
பௌத்தம் போதிக்கும் பகுத்தறிவு, கருணை, சமத்துவம் என்னும் கொள்கையில் நாம் வாழும் சனநாயகம் அமைந்திருக்கவில்லை என்ற தெளிவு கொண்டு எல்லோருக்குமான சமத்துவ உலகத்தைப் படைக்க, அறிவு புரட்சியைத் துணிச்சலாக மேற்கொண்டிருக்கிறார் என்பதனை அறியமுடிந்தது.
டாக்டர். அம்பேத்கர் அக்டோபர் 14, 1956 அன்று பௌத்த சமயத்தைத் தழுவியபோது அவர் எடுத்த 22 உறுதிமொழிகள் கூறப்பட்டிருக்கிறது இந்நூலில். அவரின் வாழ்க்கை வரலாறு (Dr. Ambedkar Life and Mission by Dhananjay Keer) புத்தகத்தில் அவரிடம் கேட்கப்பட்ட மதம், சமத்துவம் சார்ந்த சில கேள்விகள், அவற்றின் பதில்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் 60,000 புத்தகங்களைத் தனது தனியார் நூலகத்தில் வைத்திருந்திருக்கிறார். அவற்றை வாங்குவதற்கு லட்சங்களை வைத்துக் கொண்டு நிறையப் பேர் இருந்தாலும், தான் ஆரம்பித்த சித்தார்த்தா கல்லூரிக்கே அவற்றை அளித்திருக்கிறார்.
புத்தக காதலர்களுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இருக்கும் நிறைய ஒற்றுமைகளை இப்புத்தகத்தில் காணலாம்.
குறிப்பாக, வித்தியாசமான எழுதுபொருட்களில் அவர் கொண்டுள்ள ஆர்வம், இரவு முழுவதும் விழித்திருந்து புத்தகங்களை வாசிப்பது, புத்தகங்களைப் பராமரிக்கும் விதம் போன்ற செய்திகளை வாசிக்கும்போது ஆசையாகவும், வியப்பாகவும் இருந்தது.
சில புத்தங்களைப் பற்றிய குறிப்புகளும் இப்பாகத்தில் அடங்கியுள்ளது. அவை:
✨️In the Tiger’s shadow (The autibiography of an Ambedkarite) by Namdeo Nimgade
✨️Growing up untouchable in India by Vasant Moon
நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நம் சுற்றத்திலும் இருக்கும் இருளை மறையச் செய்து வெளிச்சத்தை மீட்டெடுக்கும் வலிமை புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே சாட்சி.
****
நூல்: டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்
நூலாசிரியர்: கி. வீரமணி
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியீடு
பக்கங்கள்: 80
விலை: ரூ.72/-