‘மின்னல் முரளி’, ‘ஹனுமன்’ பாணியில் இந்தியாவில் இருந்து மற்றுமொரு சூப்பர் ஹீரோவை உருவாக்கும் நோக்கோடு வெளியாகியிருக்கிறது ‘ஜெய் கணேஷ்’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் ரஞ்சித் சங்கர். ‘பாசஞ்சர்’ என்ற முதல் படம் தொடங்கி ‘ஆண்டி மோலி ராக்ஸ்’, ‘புண்யாளன் அகர்பத்திஸ்’, ‘ராமண்டே எடந்தோட்டம்’, ‘ஞான் மேரிகுட்டி’ என்று 15 மலையாளப் படங்களை வெவ்வேறு வகைமைகளில் தந்திருக்கிறார். அந்த வரிசையில், அவர் தந்திருக்கும் சூப்பர் ஹீரோ படமே ‘ஜெய் கணேஷ்’.
ஜெய் கணேஷ் வருவார்!
விபத்தொன்றில் கால்களை இழந்து மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வருகிறார் கணேஷ் (உன்னி முகுந்தன்). ஒரு தொலைக்காட்சியில் கிராபிக் டிசைனர் ஆக வேலை செய்கிறார். பகலில் அந்த வேலையைச் செய்தாலும், இரவில் ‘ஹேக்கிங்’கில் ஈடுபடுவது அவரது வழக்கம்.
கேரளாவில் மிக முக்கியக் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு உதவிகரமான தகவல்களை ‘சைபர் திருட்டின்’ மூலமாகத் திரட்டுகிறார் கணேஷ். அந்த அனுபவங்களைக் கொண்டு ‘ஜெய் கணேஷ்’ என்ற பெயரில் ஒரு காமிக்ஸ் ஹீரோவை உருவாக்கிக் கதைகளை ஆக்குகிறார்.
அதை பதிப்பிப்பதற்கான முயற்சிகளில் இறங்கும்போது, நிதி (மஹிமா நம்பியார்) உடன் பழக்கம் ஏற்படுகிறது. முதலில் அந்த கதைகளில் அவர் விருப்பம் காட்டவில்லை என்றபோதும், பின்னர் அது ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக மாறும் என்று நம்புகிறார்.
ஒருநாள் அவர்கள் ‘டெவலப்’ செய்யும் ஒரு செயலி தொடர்பாகப் பெரும் தொழிலதிபர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்கு முந்தைய நாள், மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் கணேஷ். அவர் தனது ‘ஹேக்கிங்’ திறனைப் பயன்படுத்தித் தந்த ஒரு தகவலால், போலீசில் ஒரு அப்பாவி மாட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில், உண்மையாகத் தன்னுடன் நட்பு கொள்ள ஒருவரும் இல்லை என்ற வருத்தத்தில் கணேஷ் இருக்கிறார்.
அன்றைய தினம், கணேஷின் அபார்ட்மெண்டில் வசிக்கும் அயன் எனும் சிறுவனுக்குப் பிறந்தநாள். அவனது தந்தை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.
இரவு வேளையில் அந்த பிறந்தநாள் விழாவில் கணேஷ் கலந்து கொள்கிறார். கணேஷ் இருவாக்கிய ‘ஜெய் கணேஷ்’ எனும் சூப்பர் ஹீரோ பாத்திரத்தை ரசிப்பவர் அயன். ஆனாலும், அவருக்கு கணேஷ் தான் ‘ரியல் லைஃப்’ ஹீரோ. அதனாலேயே, தனக்கிருக்கும் ஒரே நண்பனாக அந்தச் சிறுவனைக் கருதுகிறார் கணேஷ்.
அப்படிப்பட்ட அயனைக் கணேஷ் கண் முன்னே ஒரு நபர் கடத்திச் செல்கிறார். அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
அடுத்த நாள், அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டுபிடிப்பதற்குள் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால், அயனை ஒரு தனியறையில் அடைத்து வைத்து, நச்சு வாயுவை பரவச் செய்து, அவரைக் கொல்லும் திட்டத்தை அதற்கு முன்னரே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.
பன்னிரண்டு மணி நேரம் கழித்து அயன் இறந்துவிடுவார் என்ற இக்கட்டான நிலையில், அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் கணேஷ்.
தான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற கவலையும் வருத்தமும் கொண்ட கணேஷ், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் அயனை உயிருடன் மீட்டாரா, இல்லையா என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
‘ஜெய்கணேஷ் வந்து என்னை மீட்பார்’ என்று அந்தச் சிறுவன் நம்புவதால் இக்கதை ‘சூப்பர் ஹீரோ’ கதை ஆகிறது. அதற்கேற்ப, உடல் சக்தியைப் பயன்படுத்தாமல் மனதின் ஆற்றலை அசாதாரணமான முறையில் கணேஷ் பயன்படுத்துவதைச் சொல்கிறது இப்படம்.
இன்னொரு வெற்றி!
‘மாளிகாபுரம்’ படத்தில் ஐயப்பனாகத் தோற்றம் தந்து நம்மை மகிழ்வித்திருந்தார் உன்னி முகுந்தன். அந்த திரைப்படம் ஒரு பக்திப் படமல்ல என்றபோதும், அது போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும். கூடவே, நல்லதொரு த்ரில்லர் ஆக அமைந்திருக்கும்.
அதேபோல, ஒரு சூப்பர் ஹீரோவின் ஆக்ஷன் எபிசோடை சொல்வது போன்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி, அதற்குப் பதிலாக ‘த்ரில்’ ஊட்டியிருக்கிறது ‘ஜெய் கணேஷ்’ திரைப்படம்.
அதேநேரத்தில், ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்த்த உணர்வையும் மீடியம் பட்ஜெட் ஆக்கத்தின் வழியே ஏற்படுத்தியிருக்கிறது. அதுவே ரஞ்சித் சங்கரை கொண்டாட வகை செய்திருக்கிறது.
உன்னி முகுந்தன், மஹிமா நம்பியார் இதில் பிரதான பாத்திரங்களாகத் தோன்றியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து ஜோமோள், அசோகன், ஹரீஷ் பேரடி, ரவீந்திரா விஜய், நந்து என்று பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் எம்.எல்.ஏ. பிரசாத் ஆக ஸ்ரீகாந்த் கே.விஜயனும் அவரது மகனாக வரும் ரயான் கைமலும் நடித்துள்ளனர். அனைவரும் நம் மனதைக் கவரும் விதமான ‘பெர்பார்மன்ஸ்’ தந்துள்ளனர்.
சந்துரு செல்வராஜின் ‘ரியாலிட்டி’ பாணி ஒளிப்பதிவு, சங்கீத் பிரதாப்பின் செறிவுமிக்க ‘படத்தொகுப்பு’, சங்கர் சர்மாவின் பரபரப்பூட்டும் பின்னணி இசை, யதார்த்தம் சொரிகிற சூரஜ் குருவிலங்காடுவின் தயாரிப்பு வடிவமைப்பு உட்படப் படத்தில் தொழில்நுட்பப் பணிகள் நன்றாக அமைந்துள்ளன.
குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு காட்சியனுபவத்தை தர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் ரஞ்சித் சங்கர்.
ரஞ்சித் சங்கரின் மேதைமை!
எந்தவொரு மாற்றுத்திறனாளியும் தன் மீது கொட்டப்படும் பரிதாபத்தை உள்ளூர விரும்பமாட்டார். ஆனால் இந்த உலகம் அதைத்தான் அவர்களுக்குப் பரிசாகத் தந்து கொண்டிருக்கிறது. அதனால், அவர்களது மனம் அடையும் அருவெருப்பை கணேஷ் பாத்திரம் வழியே நமக்கு உணர்த்தியிருக்கிறார் ரஞ்சித் சங்கர். அதனை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
போலீஸ் விசாரணை முறைகளைச் சொல்லும்போதோ, ஒரு புதிரை விடுவிக்கும்போதோ, மிகச்சரியானதை மட்டுமே ஒருவரால் தீர்மானித்துவிட முடியாது. இடையில் நிறைய சொதப்பல்களும் இருக்கும்.
அவையனைத்தையும் இதில் சேர்த்துக் காண்பித்திருக்கிறார் ரஞ்சித் சங்கர். அதுவே, இந்த திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகிறது. அதனைப் பலவீனமாக நினைப்பவர்கள், இந்த படத்தை நிச்சயம் முழுமையாகப் பார்க்க மாட்டார்கள்.
இடைவேளைக்குப் பிறகு, ரவீந்திரா விஜய் பாத்திரம் என்னவெல்லாம் செய்தது என்பதை நாயகனின் அனுமானங்களின் வழியே நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். அவற்றில் சில நமக்குப் புரிவதில்லை.
காரணம், அவற்றில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதுதான். ஆனால், அதுவே ‘க்ரிஞ்ச்’ என்று ஒதுக்காமல் இளைய தலைமுறையினர் கவனத்தைத் திருப்பவும் வழி வகுத்திருக்கிறது.
ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தந்துவிட்டு, அதற்கு ‘ப்ரிக்யூல்’ தருவது சில இயக்குனர்களின் வழக்கம். இதில் ‘ஜெய் கணேஷ்’ என்ற சூப்பர்ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பான கதையைச் சொல்லியிருக்கிறார் ரஞ்சித் சங்கர்.
அது, அடுத்தடுத்து இந்த பாத்திரத்தை முன்வைத்து நிறைய பேண்டஸி படங்கள் வருமென்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருக்கிறது.
மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டு தனியறையில் அடைக்கப்பட்ட சிறுவனை மாற்றுத்திறனாளி நாயகன் தனது சிந்தனைத்திறனைக் கொண்டு காப்பாற்றினாரா என்பதுதான் ‘ஜெய் கணேஷ்’ படத்தின் யுஎஸ்பி. அது மிகச்சரியான அளவில், மிகப்பொருத்தமாகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறது.
ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம் படங்களின் வெற்றி அலைகளுக்கு நடுவே காணாமல் போயிருக்க வேண்டிய படம் இது. ஆனாலும், தனது திறன் காரணமாக நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆராதனைகளைப் பெற்று வெற்றிப்படிகளில் ஏறக் காத்திருக்கிறது. வாழ்த்துகள் ‘ஜெய் கணேஷ்’ டீம்!