கோரிக்கைகள் நிறைவேறவில்லை: தேர்தலைப் புறக்கணித்த கிராமங்கள்!

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

1. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவலூர் ஊராட்சியில் இருந்து தங்களது கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து தரக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், தங்களது வீடுகள் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி, கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வாக்களிக்க வராமல், தேர்தலை

2. விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி அவியூர் ஊராட்சிக்குட்பட்ட விற்பட்டு கிராம மக்கள் தனி பஞ்சாயத்து கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்,ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. மேலும், கருப்புக் கொடிகள் கட்டப்பட்டு, தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.

3. திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை வருவாய் கிராமம் என்பதை எர்ணாகுப்பம் என்று வருவாய்த் துறையினர் தங்களது பதிவேட்டில் மாற்றினர். இதனால் தந்தை பெரியார் நகர்,வடமதுரை பெரிய காலனி, காட்டுக்கொள்ளி ஆகிய கிராம மக்கள் தங்களுக்கு பிறப்பு,இறப்பு சான்றிதழ் பெறுவதிலும், நிலம் வாங்குவது,விற்பதில், வேலை வாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்டவைகள் பெரும்போது இந்தப் பெயர் மாற்றத்தால் தங்களது பணிகள் நடைபெறவில்லை என்று கூறினர். இதனைக் கண்டித்து கடந்த மாதம் 3 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று நடைபெற்ற தேர்தலில் மூன்று கிராம மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குசெலுத்தாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

4. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இந்த கல்வாரிகள் வைக்கும் வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகும், இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் கற்களை ஏற்றி செல்வதால் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறி, கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து கிராம நுழைவாயில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

5. சேலம் மாவட்டம் ஏற்காடு செங்களத்துப்பாடி கிராம பகுதியில் மயனாத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லைக்கூறி, கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து அப்பகுதி முழுவதும் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், இந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், இந்த கிராமத்தை சேர்ந்த ஒரே ஒரு கிராம நிர்வாக உதவியாளர் மட்டும் வாக்களித்துள்ளார்.

6. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் திட்டமிட்டப்படி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். இதனால், வாக்குசாவடி மையம் வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

#the_villagers_boycotted_the_elections #தர்மபுரி_நாடாளுமன்ற_தொகுதி #சேலம் #செங்கல்பட்டு #விழுப்புரம்   #திருவள்ளூர் # கடலூர் #dharmapuri #salem #chengalpattu #vilupuram #thiruvallur #cuddalore

You might also like