பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!

ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்

அழகான இடமொன்றைப் பார்த்தால் நாம் மெய் மறந்து நிற்பது இயல்பு. அது இயற்கையின் விளைச்சலாக இருந்தாலும் சரி; மனித உழைப்பில் உருவானதாக இருந்தாலும் சரி; அதன் பழமையும் நிலைத்தன்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்போது வேறெதுவும் மனதில் நிற்காது.

அது போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்கும்போது, அடுத்த தலைமுறைக்கு இது கிடைக்குமா என்ற கேள்வி தோன்றும்; அவ்வாறு கிடைக்கச் செய்வதுதானே நமது கடமை என்ற நினைப்பும் உள்ளுக்குள் உருண்டோடும்.

அப்படிப்பட்ட எண்ணங்களின் தொகுப்பாகவே, ‘உலக பாரம்பரிய தின’க் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டும்.

சர்வதேச நினைவுச் சின்னங்கள், நினைவுத் தலங்கள் தினம் என்ற பெயரில் தொடங்கிய இந்தக் கொண்டாட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது.

பொங்கும் பாரம்பரியம்!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களில் இருந்து வேறுபட்டவர்கள். அந்த தனித்தன்மையை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் தம்மில் இருந்து வேறுபட்டிருக்கும் மக்களின் பழக்க வழக்கங்களை, கலாசாரங்களை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள்.

உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவருமே மொழி, இனம் மற்றும் இன்ன பிற வேறுபாடுகள் சார்ந்து தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றனர்.

தினசரி வாழ்விலுள்ள உணவு, உடை, தங்குமிடம் தொடங்கி பிறப்பு, இறப்பு வரையிலான சடங்குகள் வரை அனைத்தும் வேறுபட்டதாக இருந்து வருகிறது.

அந்த வகையில் உலகிலுள்ள பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக இருந்து வருகிற, கொண்டாடப்படுகிற, போற்றப்படுகிற, ரசிக்கப்படுகிறது இடங்களும் உண்டு.

சில நூறாண்டுகளுக்கு முன்னால் காலனி ஆதிக்கம் செலுத்திய நாடுகள் விட்டுச் சென்ற எச்சங்கள் தொடங்கி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் இப்பூமிப் பந்தில் பதித்த தடங்கள் வரை அனைத்துமே அவற்றில் அடங்கும்.

நம்மூரில் இருந்துவரும் கல்விக்கூடங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களில் பல பாரம்பரியத் தலங்களுக்கு ஈடானவை தான்.

அவற்றின் கட்டுமான உள்ளடக்கம் முதல் வடிவமைப்பு வரை அனைத்துமே இன்றிருக்கும் ட்ரெண்டில் இருந்து வேறூபட்டதாகவே இருக்கும். அவற்றைப் பாதுகாப்பதும், அப்படியே பராமரிப்பதும், அடுத்த தலைமுறை ரசிக்கும்படி ஆக்குவதும் நமது கடமை ஆகும்.

அழகான சில இடங்கள்!

நம்மில் பலருக்குப் பல நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அங்கிருக்கும் மக்களின் கலாசாரத்தை அறிவதில் அலாதி பிரியம் இருக்கும்.

அதன் வழியே மீதமுள்ள வாழ்வுக்கான உற்சாக ஊற்றை உள்ளுக்குள் ஊறச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் இருக்கும்.

ஆனால், கையில் இருக்கும் பணம் என்ற வஸ்து அதனை நிறைவேற்ற அனுமதிக்காது.

அப்படிப்பட்டவர்களை இன்று ‘யூடியூப்’ உள்ளிட்ட காணொளித்தளங்கள் நிறையவே திருப்திப்படுத்துகின்றன.

அவை மட்டுமல்லாமல் சுற்றுலா குறித்த நூல்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அங்கு சென்ற வந்த அனுபவத்தின் நிழல் போல அமைகின்றன. வெளிநாட்டுத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதற்கும் கூட, அது போன்றதொரு காரணத்தைச் சிலர் குறிப்பிடுவதுண்டு.

எந்திரன் படத்தில் வந்த ‘மச்சுபிச்சு’, ஜீன்ஸ் படத்தில் வந்த ஏழு அதிசய தலங்கள், இந்தியனில் வந்த சிட்னி ஓபரா ஹவுஸ் என்று சில படங்களின் பாடல்களைப் பார்த்தால் அவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒருவேளை இந்த எண்ணத்தை மனதில் வைத்தே, 2000களில் வந்த பல படங்கள் வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டனவா என்று தெரியவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லோரா குகைகள், தாஜ் மஹால், சரவணபெல கோலா கோமதீஸ்வரர் சிலை, தஞ்சை பெரிய கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால், குதூப் மினார், டெல்லி செங்கோட்டை என்று பல இடங்கள் பல்லாண்டு காலப் பாரம்பரியத்தைக் கொண்டவை.

இது போன்று இந்தியாவில் சுமார் 3,700 தலங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது சர்வதேச நினைவுச்சின்னங்கள், தலங்களுக்கான கவுன்சில்.

இவற்றில் சிலவற்றை உலகப் பாரம்பரியத் தலங்களாக அறிவித்திருக்கிறது யுனொஸ்கோ. சிக்கிமில் உள்ள காஞ்சன்தொங்கா தேசியப் பூங்கா போன்றவையும் கூட அதில் அடக்கம்.

பார்ப்போம்; ரசிப்போம்!

ஒரு பாரம்பரியத் தலம் என்பது மிகப்பெரிய பரப்பில் பிரமிக்க வைக்கும் பிரமாண்டத்துடன் பல்லாண்டு காலப் பழமையைத் தாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை. ஆற்றங்கரையோரம் இருக்கும் ஒரு படித்துறைக்கும் கூட நிச்சயம் ஒரு பாரம்பரியம் இருக்கும்.

சில நூறாண்டுகளுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள், மருத்துவமனைகள், பழைய வீடுகள், வனப்பகுதியில் உள்ள கல் அடுக்குகள் என்று பலவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியும்.

நாம் வாழும் பகுதியில் இப்படிப் பல இடங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றைப் பார்க்கவோ, ரசிக்கவோ பெரும் பணமோ, நேரமோ செலவழிக்க வேண்டியதில்லை.

1982-ம் ஆண்டு முதல் சர்வதேச நினைவுச்சின்னங்கள், தலங்கள் தினம் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

பாரம்பரியத் தலங்களை அடையாளம் காண்பதும், அவற்றைக் காப்பதும், அது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதும் இத்தினத்தின் நோக்கமாக உள்ளது.

அந்த வகையில், ‘பன்முகத்தன்மையைக் கண்டறிந்து அனுபவிப்பது’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்கள், மொழிகள், இனங்கள், குழுக்கள், அவற்றுக்கு இடையிலான கலாசாரம் சார்ந்த வேறுபாடுகள் என்று நம் நாடு பன்முகத் தன்மைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அதனைப் பலவீனமாகக் கருதுபவர்களுக்கு மத்தியில், அது ஒரு பலம் என்பதை உணர்த்தும் தருணங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

‘உலக பாரம்பரிய தினம்’ கொண்டாடப்படுவதன் மூலமாக, அதனை எதிர்காலத் தலைமுறையினர் உணர்வதற்கும், அனுபவிப்பதற்கும் ஒரு வாய்ப்பு உருவாகும்.

மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின் சிறப்புகளை அறியச் செய்வோம்!

– மாபா

You might also like