எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!

டாக்டர்.க. பழனித்துரை

தமிழக பொதுப்பள்ளிகளில் ஆறாவது வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள், பல மாவட்டங்களிலிருந்து ஒரு திறன் கூட்டும் பயிற்சிக்காக சென்னை வந்தனர். அப்போது என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் வாக்காளர்கள் அல்ல.

ஆனால் எங்கள் எதிர்காலம் கருதி வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கென்று ஒரு கருத்து இருக்கிறது. அதை பொதுவெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அதற்காக ஒரு மூன்று மணி நேர கருத்தரங்கம் ஒன்று நடத்த வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறோம்.

அதற்கு தலைமை தாங்க ஒரு ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையரை அழைத்தோம். அவர் உடல்நிலை சரியில்லை, வேண்டுமானால் காணொளிக் காட்சி மூலம் வருகிறேன் என்றார்.

ஆகையால் எங்கள் நிகழ்வுக்கு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எவரையும் அழைக்க வேண்டாம் என எண்ணுகின்றோம். உங்களால் எங்களுடன் அமர்ந்து அந்த கருத்தரங்கில் வழிகாட்டு உரை நிகழ்த்த முடியுமா என்று என்னிடம் கேட்டனர். இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.

ஆகையால் உடனே வருகிறேன் என்று கூறி சென்னையில் நடந்த அந்த நிகழ்வில் பங்கேற்றேன். வந்திருந்த முப்பது எட்டு மாணவர்களில் பதிமூன்று பேர் உரையாற்றினர்.

என்னுடைய தலைமை உரையை தொகுப்புரையாக வைத்துக்கொண்டு கடைசியில் பேசுங்கள் என்று வேண்டினர். அந்த நிகழ்வு மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்த காரணத்தால் பொதுமக்களுக்கு பெருமளவு அழைப்புக் கொடுக்கவில்லை. ஒரு சிலர் வாட்சப் பதிவின் மூலமாக கேள்விப்பட்டு வந்திருந்தனர்.

அந்த மாணவர்களில் எவரும் பெரும் பணக்காரர் வீட்டைச் சார்ந்தவர்களில்லை. சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அந்த மாணவர்கள்.

அவர்கள் இன்றுள்ள சூழலை எப்படிப் புரிந்துள்ளனர், அவர்கள் வேண்டுவது என்ன, அவர்கள் செய்யப்போவது என்ன என்பதனை ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்களில் எடுத்து வைத்த கருத்துக்களின் சுருக்கமே இந்தக் கட்டுரை.

எங்களுக்கு வயது குறைவாக இருப்பதால் வாக்குச் செலுத்தும் உரிமை இல்லை.

ஆனால் எங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது, அத்துடன் நாங்களும் குடிமக்கள் என்ற வகையில் எங்களுக்கும் கனவு காணும் உரிமை இருக்கிறது.

எனவே எங்கள் எதிர்காலத்தையும் கருதி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிக்கும்போது நாடு எப்படிப்பட்ட மனிதர்கள் கையில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும்.

எவர் மக்களைப் பற்றி அக்கறை கொண்டு தொடர்ந்து மக்களுடன் பயணிக்கின்றார் என்பது அறிந்து வாக்குச் செலுத்த வேண்டும்.

உலகிற்கு புதிய மக்களாட்சிக்கான அடித்தளமிட்ட அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 200 ஆண்டுகள் கழித்துத்தான் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது.

ஆனால் நம் நாட்டில் சுதந்திரம் அடைந்து அரசியல்சாசனம் உருவான அன்றே 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது என்பது ஒரு புதிய உலக வரலாறு.

அந்த உரிமையின் மகத்துவத்தை நாம் மக்களுக்கு இன்றுவரை எடுத்துச் சென்று விளக்காததன் விளைவு, இன்று அது ஒரு தட்டுப் பிரியாணிக்கும், ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு குவாட்டருக்கும் விலை போவதை பார்த்து நாம் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளோம்.

பொதுவாக எந்தச் செயலுக்கும் அதன் முழு விளைவு கிடைக்க வேண்டுமென்றால் அந்தச் செயல் பற்றிய புரிதல் அந்தச் செயலை நிறைவேற்றுபவருக்கு வேண்டும்.

ஆனால் ஒரு வாக்காளனாக ஒருவன் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது அவன் முழுப் புரிதலுடன் சென்று வாக்குச் செலுத்துகின்றானா என்றால் இல்லை என்பதைத்தான் நாம் இன்று நம் நாட்டில் பார்க்கின்றோம்.

அவனை ஒரு மயக்க நிலையில்தான் அந்தப் பணியை செய்ய வைக்கின்றனர். ஒரு வாக்காளனை எந்த வழியிலெல்லாம் ஏமாற்ற முடியுமோ அத்தனை வழிகளிலும் ஏமாற்றித்தான் வாக்குகளைப் பெறுகின்றன அரசியல் கட்சிகள்.

அந்த வாக்காளனும் எப்படி வாக்குச் சாவடிக்குச் செல்கின்றான் என்றால், மாணவர்கள் தினந்தோறும் படிப்பதற்குப் பதிலாக தேர்வு வரும்போது மட்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதுபோல் சென்று வாக்குச் செலுத்துகின்றார்கள்.

அதன் விளைவை இன்று நம் அரசியலில் ஆட்சியில் நிர்வாகத்தில் பார்த்து வருகின்றோம். எங்கும் நியாய உணர்வு அற்று செயல்படுவது கலாச்சாரமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் நம்மிடமிருந்த ஒரு மக்களாட்சி நன்னடத்தை கொண்டவர்கள், ஒழுக்கசீலர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அடிப்படை விதிகளை வைத்து இயங்கிய இடத்தில் இன்று குற்றப்பின்னணி கொண்டவர்களின் கூடாரமாக மாறியிருப்பது நம் வாக்காளர்கள் பொறுப்பற்று இயங்கியதன் விளைவுதான் என்பதை இன்றாவது புரிந்து கொண்டு நம் மகா பொது ஜனங்கள் வாக்கினைச் செலுத்த வேண்டும்.

இந்தத் தவறுக்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. படித்த நடுத்தர வர்க்கம் அவர்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அதைச் செய்ய தவறியதன் விளைவுதான் நாம் பார்க்கும் ஒரு சுய நல அரசியல்.

145 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் முடிவுகளை எடுக்க நாம் நம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கின்றோம் என்ற ஆழமான பார்வையற்று செயல்படுவதற்குக் காரணமே மக்களை மக்களாட்சிக்கான புரிதலை, உணர்வினை முறையாக ஏற்படுத்தாது, மக்கள் அறியாமையில் வைத்திருப்பதுதான்.

இன்று எந்த அரசியல் தளத்திலாவது மக்கள் பிரச்சினையை மையப்படுத்தி தேர்தல் பரப்புரை நடக்கிறதா என்று வினவினால் நமக்குக் கிடைப்பது, துர்நாற்றமெடுக்கும் அரசியல் விவாதங்கள்.

மக்கள் சேவை செய்ய இவ்வளவு பணத்தைக் கொண்டு வந்து கொட்டி, வன்முறையைத் தூண்டி, சமூகத்தைப் பிரித்து வைத்து ஓர் அரசியலை தேர்தலின்போது கட்டமைத்து விடுகின்றனர்.

இதைக் காணும் நம் இளைய தலைமுறை, இதுதான் அரசியல் என்று புரிந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட ஆபத்து காத்திருக்கிறது என்பதை நம்மால் அனுமானிக்க முடியும்.

நம் அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தைவிட, மக்களின் அரசியல் அறியாமைதான் மூலதனமாக இருக்கிறது.

அதை வைத்துத்தான் ஒட்டுமொத்த தேர்தலை நடத்தி அதிகாரத்தைப் பிடிக்கின்றன அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள் இலவசங்களை அள்ளி வீசுகின்றன தேர்தல் அறிக்கைகள் மூலம்.

இலவசம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. மக்கள் கேட்பது அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள்.

அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசால் இயலவில்லை என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து. அந்தத் தோல்வியை மறைக்கத்தான் நம் கட்சிகள் இலவசங்கள் தருவதாக மக்களை ஏமாற்றுகிறது.

இன்று நடக்கும் கட்சி அரசியல் என்பது கட்சிக்காரர்கள் நலம் பேணும் ஒரு சுயநல அரசியல். இதற்காகவே இந்த அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் நலன் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களாட்சியை நன்கு புரிந்தவர்களுக்குத் தெரியும், மக்களை யார் மேய்க்க விரும்புகிறார்கள், யார் வழிகாட்டி மேம்படுத்த விரும்புகிறார்கள் என்பது.

இன்று நடப்பது ஒரு மேய்ப்பு அரசியல். அது வழிகாட்டும் அரசியல் அல்ல. மக்களும் மேய்ப்பவனைத்தான் தேடுகின்றார்கள்.

வழிகாட்டியை அல்ல. இந்தச் சூழலில் நாம் தேட வேண்டியது நமக்கு வழிகாட்டும் ஒரு மக்கள் தலைவனை அல்லது தலைவியை. அதற்கான அடிப்படை விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. அதை எந்த அரசியல் கட்சியும் உருவாக்கப்போவது கிடையாது.

மக்களாட்சியில் வாக்கு என்பது ஒரு மகத்தான சக்தி. அதைப் பயன்படுத்த பொதுமக்களுக்குத் தேவை ஒரு விழிப்புணர்வு, அறிவு, ஆற்றல், கடப்பாடு. அதுதான் பொதுமக்களை மக்களாட்சிக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளும் தயாரிப்பு.

அது எப்படி நடைபெற வேண்டுமென்றால் எப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் அடிமை உணர்விலிருந்து சுதந்திர உணர்வுக்கு மக்களைத் தயார்ப்படுத்தினார்களோ அதேபோல் புதிய அரசியலை நோக்கி நம் அரசியலைக் கட்டமைக்கத் தேவையான ஒரு சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும்.

ஒரு மாபெரும் மாற்றம் என்பது உளவியலில் உணர்வில் ஏற்பட வேண்டும். அப்படித்தான் மாற்றங்கள் உலகில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இன்றைய சூழலை மாற்றியமைக்கத் தேவையான ஒரு உளவியலை நம் மக்களிடம் உருவாக்க வேண்டும். அது ஒரு சாதாரணப் பணி அல்ல. அது வாக்குச் சேகரிப்பது அல்ல. அது வாக்கைப் பயன்படுத்தும் வழிமுறை. அது ஒரு அரசியல் வாழ்வியலுக்கான கல்வி.

அடுத்த மக்களாட்சிக்கான ஒரு விழிப்புணர்வு “மக்களாட்சிக் கல்வி” என்ற தலைப்பில் ஒரு ஐந்தாண்டுகாலம் மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு, நடைபெற வேண்டும். அந்தப் பணி எல்லாப் பள்ளிகளிலும் கல்லூரிகளும் நடைபெற வேண்டும்.

அதை நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம். எங்களுக்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிறைவு செய்தனர்.

மாணவர்களின் கருத்துரை முடிந்தவுடன் பார்வையாளர்களிலிருந்து ஒருவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். இன்றுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கிறது என்பதை மாணவர்கள் மிக அருமையாக எடுத்து வைத்தனர்.

பொதுமக்களின் அறியாமையும் தயக்கமும்தான் இன்றைய அரசியல் கட்சிகளின் மூலதனமாக இருக்கிறது. அடுத்து ஆட்சியாளர்களை கேள்வி கேட்க தயங்குவது மட்டுமல்ல அச்சப்படுகின்றனர்.

இந்த தயக்கத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்பதுதான் இந்த மாணவர்கள் பேசியதன் சாரம். இதை உடைக்க ஒரு செயல் திட்டம் கொண்டு வந்து வாக்காளர் விழிப்புணர்வு என்ற நிலையிலிருந்து மக்களாட்சிக்கான கல்வி இளைஞர்களிடம் போய்சேர திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பாராட்ட வேண்டியது ஒரு அம்சம் என்று குறிப்பிட்டார்.

நிறைவாக என் தொகுப்புரையில் ஒரு சில கருத்துக்களை முன் வைத்தேன். இந்திய மக்களாட்சி என்பது அகிம்சையின் மீதும், உண்மையின் மீதும், நேர்மைமீதும் கட்டமைக்கப்படல் வேண்டும் என்பதைத்தான் போராட்ட காலத்தில் மக்களுக்கு உறுதிமொழியாகத் தந்தனர் நம் தலைவர்கள்.

மக்களாட்சி என்பது ஒரு கருத்தியல், ஒரு தத்துவம், ஒரு கருவி, ஒரு வழிமுறை. அதை எந்த அளவுக்கு மக்கள் புரிந்து கொண்டு களமாடுகின்றோமோ அந்த அளவுக்கு அது வியாபிக்கும் சக்தி பெற்ற தன்மை கொண்டது.

ஆனால் இந்தியாவில் இன்று அதிகாரத்தைப் பிடிக்க பயன்படுத்தும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவது என்பதுதான் ஒரு துரதிஷ்டம். மக்களாட்சியை எந்த அளவுக்கு திறனுடன் பயன்படுத்துகின்றார்களோ பொதுமக்கள் அந்த அளவுக்கு மாபெரும் சமூக பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்துவிடும் ஆற்றல் மிக்கது.

இன்று இந்த மக்களாட்சியின் ஆற்றலில் பத்து சதம்கூட பயன்படுத்தவில்லை என்பதுதான் நாம் பார்க்கும் ஒரு பரிதாபம். அதே நேரத்தில் நம் மக்களாட்சி தேர்தலில் தேங்கி, அது துர்நாற்றமெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இதிலிருந்து இந்த அரசியலை விடுவிப்பதற்கு மிகப்பெரிய மக்கள் சக்தியைக் கட்ட வேண்டும். இன்றைய மக்களாட்சியின் தாழ்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இதை எப்படிச் செய்வது என்பதில்தான் பலருக்குத் தயக்கம். சிலருக்கு குழப்பம். பலர் நினைக்கலாம் சட்டத்தின் மூலம், ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வினைக் கொண்டு வந்துவிடலாம் என்று.

மக்களாட்சியில் மக்களுடன் இந்தச் சூழலை மாற்ற நடக்கும் நிகழ்வுகளும்கூட சடங்குகளாகவே நடைபெறுகின்றன.

மக்களுடன் இணைந்து, உரையாடி, மக்களின் நம்பிக்கைப் பெற்று செயல்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் என்பது சாத்தியப்படும். மக்களாட்சி என்பது சந்தையில் விற்கும் பொருள் அல்ல. அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கூர் தீட்டப்பட்ட கருவி. அந்தக் கருவியை பயன்படுத்தும் ஆற்றல் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். அதை இன்று களப்பணியால் மட்டுமே செய்திட முடியும்.

இன்று இதற்கான எந்தக் களப்பணியும் நடந்திடவில்லை. இதற்கு குறுக்கு வழி இல்லை. களத்தில் மக்களுடன் இருந்த அரசியல் கட்சிகளும் அதன் செயல்பாடுகளை தேர்தல் நேரத்தில் வாக்குச் சேகரிக்கச் செல்வதைத் தவிர, மக்களை அரசியல்வயப்படுத்த எந்தச் செயலையும் செய்யவில்லை.

அதேபோல் குடிமைச் சமூக அமைப்புக்களும் இந்தச் செயல்பாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு ஒதுங்கி விட்டன. இதன் விளைவு இன்று களம் காலியாக இருக்கின்றது. களமாட ஆட்கள் இல்லை.

எனவே, இந்தச் சூழலை மாற்றிட மக்களாட்சிக்கான கல்வி என்று ஒரு களச் செயல்பாட்டை ஒரு இயக்கம்போல் எடுத்துச் செயல்படுவோமேயானால் இந்த தாழ்நிலையை மாற்றமுடியும் என்ற கருத்துடன் நிறைவு செய்தேன்.

இந்த நிகழ்வின் சிறப்பே இந்த நிகழ்வை மாணவர்களே வடிவமைத்து அவர்களே நடத்தியது. அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் கலைந்தனர்.

#வாக்காளர்கள் #மாணவர்கள் #அமெரிக்கா #சுதந்திரம் #மக்களாட்சி #வாக்கு #மக்களாட்சிக் கல்வி #Democratic Education #voters #students #usa #freedom #democracy #education

You might also like