தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், “மக்களவைத் தேர்தல் நடந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை. அரசு செயல்படுத்திவரும் திட்டங்களைத் தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளது.
எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை. கலைஞர் மகளிர் உரிமை தொகை எப்போதும் போல் இந்த மாதம் 15 ஆம் தேதி வழங்கப்படும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 4.36 கோடி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் தேர்தல் அலுவலர்கள் பூத் சிலிப் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கும் விரைவு தபால் மூலம் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
சி-விஜில் ஆப் மூலம் இதுவரை 3,605 புகார்கள் வந்துள்ளது. இதில் 32 புகார்கள் மீது மட்டுமே இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றியுள்ள ரூ.305 கோடியில் வருமான வரித்துறையினர் மட்டும் ரூ.74.15 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். பறக்கும் படையினர் ரூ.70.29 கோடி ரொக்கம் பிடித்துள்ளனர்” என்று கூறினார்.