தமிழ்நாடு – இந்தியாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

நெல்லை - கோவை பிரச்சாரத்தில் ராகுல் பெருமிதம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர், திமுக வேட்பாளர் கனிமொழி (தூத்துக்குடி) காங்கிரஸ் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை) விஜய் வசந்த் (கன்னியாகுமரி ) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் உரை நிகழ்த்திய ராகுல், ’’தமிழக மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நான் நேசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்த ஒன்று.

நான் எப்போதெல்லாம் இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்.

தமிழகத்தின் கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, அற்புதமான கவிஞர்கள், அவர்களுடைய சிந்தனையின் தாக்கம், தமிழ் மொழியை நான் படிக்கவில்லை என்றாலும், அவர்களின் வரலாற்றை நான் படித்த காரணத்தால், இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக தமிழகத்தை நான் பார்க்கிறேன்’’ எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சார மேடையில், தமிழக தலைவர்கள் பலருக்கும் ராகுல் புகழாரம் சூட்டினார்.

“பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற பேராளுமைகளைத் தமிழகம் தந்துள்ளது. அவர்களைப் பற்றி இந்தக் கூட்டம் முடியும் வரை பேசிக் கொண்டே இருக்கலாம்.

சமூக நீதியின் பாதையில் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு தமிழகம்தான் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.

எனவே தான் இந்திய ஒற்றுமை யாத்திரையை தமிழகத்தில் இருந்து தொடங்கினேன். இந்த மாபெரும் தலைவர்களின் தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கி.மீ தூரம் நடந்தேன்” என்று ராகுல் காந்தி, உணர்ச்சி வசப்பட்டார்.

இது குடும்ப உறவு

இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து தான் பல்வேறு செய்திகளையும், பண்பாட்டுத் தரவுகளையும் கற்றுக்கொள்ள முடியும்.

தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள மக்கள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அளவற்ற அன்பு காட்டுகிறீர்கள்.

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அருமையான உறவு. தமிழக மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் சார்ந்த உறவல்ல, அது ஒரு குடும்ப உறவு” என்று நெகிழ்ச்சியுன் கூறினார் ராகுல்.

தமிழகத்துடனான தனது பிணைப்பு, தமிழக தலைவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவு கூர்ந்த ராகுல், அதன் பின்னர், அரசியலை கையில் எடுத்தார். ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளை, அக்னி வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார்.

“இந்தியாவில் இன்று கருத்தியல் போர் நடந்து வருகிறது. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், விடுதலை ஒருபுறம். பிரதமர் மோடி போன்றவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தூக்கிப் பிடிக்கும் வெறுப்பும் துவேஷமும் மறுபுறம்.

’ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர்’ என்று கூறி வருகிறார் மோடி. இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும், பண்பாடும், மொழியும் புனிதமானதாக கருதுகிறோம். ஆனால், பாஜகவினர் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்” என்று விமர்சித்தார்.

இந்தியாவின் அனைத்து மத்திய அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சியினரை அழிக்கும் ஆயுங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது.

முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் இருக்கும் இரண்டு, மூன்று தொழிலதிபர்கள் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் கொள்ளை அடிப்பதற்காவே, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று குறிப்பிட்ட ராகுல், பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கினார்.

கோவையில் ஸ்டாலினுடன் ராகுல்

நெல்லை பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, ராகுல் காந்தி, கோவை சென்றார்.

செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை இந்தக் கூட்டத்தில், பொது மக்களுடன் ராகுல் பகிர்ந்து கொண்டார்.

’’இப்போது நடப்பது, நரேந்திர மோடியின் அரசு அல்ல. இது அதானியின் அரசு. பிரதமர் மோடி அனைத்தையும் அதானிக்காகவே செய்து கொண்டிருக்கிறார்.

சாலைகள், துறைமுகம், விமான நிலையம் உள்பட எதுவாக இருந்தாலும், அதானி விரும்பினால், அதை உடனே பிரதமர் மோடி அவருக்குக் கொடுத்து விடுவார்.

அதானி, மத்திய அரசு மூலம் எப்படியெல்லாம் சலுகைகளைப் பெறுகிறார் என்று நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். உடனடியாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களில் என்னுடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

நான் அதானி குறித்து பேசிய உடனே, என்னுடைய எம்.பி. பதவியையும், நான் குடியிருந்த வீட்டையும் என்னிடம் இருந்து பறித்தனர்.

உண்மையில் அந்த வீட்டை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி. எனக்கு அது தேவை இல்லை. எனக்கு இந்தியாவில் வாழும் மக்களின் மனங்களில் லட்சக்கணக்கான வீடுகள் இருக்கின்றன.

லட்சக்கணக்கான தமிழக மக்கள் எனக்காக தங்களது வீட்டைத் திறந்து வைப்பார்கள். காரணம் தமிழக மக்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, குடும்ப ரீதியிலான உறவு’ என்று ராகுல் குறிப்பிட்டபோது கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது.

ஸ்டாலினுக்கு ’ஸ்வீட்‘ வாங்கிய ராகுல்

கோவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல்காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளில் என்ன உள்ளது?

சிங்காநல்லூர் பகுதியில், சாலைத் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ’ஸ்வீட் ’ கடைக்குள் நுழைகிறார் ராகுல் காந்தி.

கடையின் உரிமையாளர் அவரை, கை குலுக்கி வரவேற்கிறார்.

அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் ’இனிப்பு கொடுங்கள்’ என்று கேட்கிறார்.

“யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார்?” என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்க, அவரிடம் “என் சகோதரர் ஸ்டாலினுக்காக” என்று பதிலளிக்கிறார் ராகுல்.

கடை ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெறும் ராகுல் காந்தி, கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

கடையில் ராகுல் ‘ஸ்வீட்’ வாங்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

– பி.எம்.எம்.

You might also like