தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்குகிற இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு நாயகனாகவும் நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் ‘அடியே’ வெளியானது. இந்த ஆண்டில் ரெபல், கள்வன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘டியர்’ வெளியாகியுள்ளது.
முதலிரண்டு படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன; அப்படியிருக்க, இப்படம் ரசிகர்களிடத்தில் எத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளது? ‘ரொமான்ஸ் காமெடி டிராமா’ வகைமையில் அமைந்துள்ள ‘டியர்’ சுவாரஸ்யமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதா?
ஒரே ஒரு பிரச்சனை!
தாய் லட்சுமி (ரோகிணி), அண்ணன் சரவணன் (காளி வெங்கட்), அண்ணி கல்பனா (நந்தினி), அவர்களது மகனோடு வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ் குமார்). அண்ணனுக்குச் சொந்தமான ஆலை நிர்வாகத்தைக் கவனிக்காமல், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதே அவருக்குப் பிடித்தமான பணியாக இருக்கிறது.
பெரிய செய்தி நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்து, நிதி அமைச்சரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்பது அவரது கனவுகளில் ஒன்று. அதனால் திருமணம் போன்ற கமிட்மெண்ட்களில் சிக்கக் கூடாது என்று விரும்புகிறார்.
அந்த நேரத்தில், குடும்பத்தினரோடு சேர்ந்து தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போது, அவரது தாயும் (கீதா கைலாசம்) அர்ஜுனின் தாயும் பள்ளித்தோழிகள் என்று தெரிகிறது.
அதன்பிறகு, அவர்களது திருமணம் கிட்டத்தட்ட உறுதி என்ற நிலை உருவாகிறது. ஆனாலும், அர்ஜுனைச் சந்தித்து தனியே பேசுவதில் ஆர்வம் காட்டுகிறார் தீபிகா.
காரணம், அவரிடம் இருக்கும் குறட்டை பிரச்சனை. தனது கணவராக வரப்போகிறவருக்கு அது குறித்த உண்மை தெரிய வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.
ஏற்கனவே பல வரன்கள் தட்டிப்போன காரணத்தால், இப்போது வேண்டாமே என்று சொல்லி தீபிகாவை அழைத்துச் சென்று விடுகிறார் அவரது தாய். அதன்பிறகு, ஜோடிகள் இருவரும் அந்த பிரச்சனை குறித்து உரையாடவே இல்லை.
முதலிரவின் போது அந்த உண்மை தானாகத் தெரிய வருகிறது. அர்ஜுனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், சிறிதாகச் சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து அலறியடித்துக்கொண்டு எழுந்திரிக்கும் வழக்கம் கொண்டவர் அவர்.
இரு வேறு திசைகளில் பயணிப்பது போல, வெவ்வேறு பிரச்சனைகள் கொண்ட இவ்விருவரும் மாறி மாறித் தூங்குவது என்று தற்காலிகமாக அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மனைவியின் குறட்டை குறித்து தாயோ, சகோதரனோ அறிய வேண்டாம் என்று நினைக்கிறார் அர்ஜுன்.
ஆனாலும், தம்பதியர் இருவரும் முட்டிக்கொள்ளும் தருணமொன்று ஏற்படுகிறது. ஒருநாள் நிதியமைச்சரைப் பேட்டி காணும் வாய்ப்பு அர்ஜுனுக்குக் கிடைக்கிறது.
முந்தைய தினம் தூங்காத காரணத்தால், அதற்காகத் தயாராகும்போது அவர் அயர்ச்சியடைகிறார். அதிலிருந்து விடுபட எண்ணி பாத்ரூம் செல்பவர், அங்கேயே தூங்கிவிடுகிறார்.
அவரைக் காணாமல், வேறொரு செய்தி வாசிப்பாளரை வைத்து அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அது, அர்ஜுனின் கேரியரில் ஒரு கரும்புள்ளியாக மாறுகிறது. வேலையில் இருந்து அவர் நீக்கப்படுகிறார்.
அனைத்தையும் மீறித் தனது கனவு மெய்ப்படாமல் போனதற்கு மனைவி தீபிகாவின் குறட்டை பிரச்சனையே காரணம் என்று நினைக்கிறார் அர்ஜுன். அவரைப் பிரிய முடிவு செய்கிறார். அது, அவரை மட்டுமல்லாமல் இருவரது குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கிறது.
அதன்பிறகு என்னவானது? இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா என்று சொல்கிறது ‘டியர்’.
இந்தக் கதையில் நாயகி குறட்டை விடுவார் என்பதைத் தவிர, தம்பதியருக்குள் வேறு எந்தப் பிரச்சனைகளும் இல்லை. ஆனால், அதைத் தாண்டி அவர்களைச் சார்ந்தவர்களிடையே இருக்கும் குறைகளையும் பேசுகிறது இத்திரைப்படம்.
அதுவே, கடந்த ஆண்டு குறட்டை பிரச்சனையைக் கொண்ட நாயகனைக் காட்டிய ‘குட்நைட்’ படத்தில் இருந்து இதனை லேசாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
ரொம்பவும் ‘ஸ்லோடிராமா’!
முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞனாகத் தோன்றியிருப்பதோடு, அதற்குப் பொருத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். உணர்ச்சிகரமான காட்சிகளில் அடக்கி வாசித்திருக்கிறார்.
‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படம் போலவே, இதிலும் புதிதாய்த் திருமணமான பெண்ணாகத் தோன்றியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காட்சிகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது அவரது நடிப்பு. ஆனால், அவரது உடல்வாகு கொஞ்சம் கட்டுப்பாட்டை மீறியிருப்பது திரையில் நன்றாகத் தெரிகிறது. அதில் அவர் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.
காளி வெங்கட் – நந்தினி ஜோடி கொஞ்சம் புதிதாகத் தெரிகிறது.
அவர்களுக்கு இடையிலான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என்று எண்ண வைத்திருக்கின்றனர்.
போலவே, இளவரசு – கீதா கைலாசம் ஜோடியின் நடிப்பும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது.
ரோகிணி, தலைவாசல் விஜய் இருவரும் தனிமையின் வலியைச் சொன்ன வகையில் நம்மை ஈர்க்கின்றனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் அப்துல் லீ, அவர்களது பெண் தோழியும் லேசாக நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.
வழக்கறிஞராக வரும் படவா கோபி, நீதிபதியாக நடித்துள்ள நக்கலைட்ஸ் தனம் என்று இப்படத்தில் நமக்குத் தெரிந்த முகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
குளுமையான வட்டாரத்தில் நிகழ்வதாகக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனைக் காட்டும்விதமாக அமைந்துள்ளது ஜகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு.
ஒவ்வொரு ஷாட்டையும் அவர் அழகியலோடு படம்பிடிக்க உதவியிருக்கிறது பிரகதீஸ்வரனின் கலை வடிவமைப்பு.
ருகேஷின் படத்தொகுப்பில் கதை சீராக விரிகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் வெறுமையை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘மஜா வெட்டிங்’ பாடல் சட்டென்று ஈர்க்கிறது. ’தலைவலி’ பாடல் ஓகே ரகம். காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பின்னணி இசையைத் தந்து, நம்மை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.
‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தில் ஷாட்களை நீளமாக அமைத்து நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். இதிலும் அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.
முந்தைய படம் அளவுக்கு இக்கதை வறட்சியானதாக இல்லை. ஆனால், முழுக்க கமர்ஷியல்மயமாக அமையவில்லை.
‘ஸ்லோட்ராமா’ ட்ரீட்மெண்ட்!
மெலோட்ராமா ஆக நகரும் திரைக்கதைகளில் கதாபாத்திரங்கள் தனித்துவமானதாகவும் ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
‘டியர்’ படத்தில் மிகச்சில பாத்திரங்களே வருவதால், அவற்றை மையப்படுத்தியே திரைக்கதை உள்ளது. ஆனாலும், இதில் நகைச்சுவையோ, காதல் உணர்வோ பொங்கி வழியவில்லை.
குறட்டை பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று இயக்குனர் சொல்லவில்லை. அதனால், ‘குட்நைட்’ பட திரைக்கதையின் வலுவான பகுதி இதில் பிரதியெடுக்கப்படவில்லை.
அதேநேரத்தில், நாயகியின் குறட்டை பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னதாக, இதர பாத்திரங்களின் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று முடிவுசெய்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர்.
நாயகனாக வரும் ஜி.வி.பி, அவரது சகோதரராக வரும் காளி வெங்கட், தந்தையாக வரும் தலைவாசல் விஜய் பாத்திரங்களின் நடத்தை வழியேச் சமகால இல்லற வாழ்வில் ஆண் – பெண் நிலை குறித்த சுருக்கமான சித்திரத்தை நமக்குக் காட்டுகிறார் இயக்குனர்.
அந்தக் காட்சிகள் முடிவடையும்போது, கிட்டத்தட்ட படம் முக்கால் கிணறைத் தாண்டிவிடுகிறது. ஆனால், கதை ரொம்பவே ‘ஸ்லோ’ ஆக நகர்கிறது.
நாயகன் நாயகி பெயர்களின் ஆங்கில எழுத்துகளில் உள்ள முதலிரண்டை எடுத்துக்கொண்டு, இப்படத்திற்கு டைட்டில் யோசித்திருக்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.
அப்படியே, கதையின் மையப் பிரச்சனையைச் சொல்லும் காட்சிகளைச் சிரிக்கச் சிரிக்கத் திரையில் காட்டியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். அந்த ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ அமையாததே இப்படத்தின் மைனஸ்.
‘இல்லை, என்னோட ஸ்டைல் இதுதான்’ என்று இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் பதில் சொல்லக்கூடும். அவரது ஸ்டைல் படம் பார்க்க வரும் ஜோடிகளிடையே புரிதலை அதிகப்படுத்தினால் நமக்கு மகிழ்ச்சி தான்..!
– உதய் பாடகலிங்கம்