பலமிக்க கூட்டணியுடன் களம் இறங்கும் ஓபிஎஸ்!

ராமநாதபுரம் தொகுதி நிலவரம்

“வானம் பார்த்த பூமி” என காலம் காலமாக அழைக்கப்படுகிறது, ராமநாதபுரம்.

‘தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்’ என சினிமாக்களில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டுப்படும், தண்ணீர் இல்லாத காடு ‘சாட்ஜாத்’ ராமநாதபுரம் தான்.

ராமேசுவரம் ராமநாதசாமி கோயில், தேவிபட்டினம் நவக்கிரக கோயில், உத்தரகோச மங்கை, ஓரியூர் தேவாலயம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் இங்குள்ளன.

இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலமான பாம்பன் ரோடு பாலம், பாம்பன் ரயில் பாலம், தனுஷ்கோடி, குந்துக்கால் போன்ற கடற்கரை சுற்றுலா தலங்களும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அழகிய அடையாளங்கள்.

குடியரசு தலைவராகப் பதவி வகித்த அப்துல் கலாம், இந்தத் தொகுதியின் ராமேஸ்வரத்தில் பிறந்தவர் என்பது கூடுதல் பெருமை. கடலோரப் பகுதியை அதிகளவில் கொண்டுள்ளதால், மீன்பிடித்தல் முக்கியமான தொழிலாக உள்ளது. விவசாயமும் உண்டு. பரமக்குடியில் நெசவுத்தொழிலும் ஓரளவு பிரபலம்.

மழை இன்மை, தொழில்கள் இல்லாதது போன்ற காரணங்களால், இந்தத் தொகுதி இளைஞர்கள், வேலைதேடி, வெளி மாநிலங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் நிலைமை நீண்ட காலமாக நீடிக்கிறது.

எல்லா கட்சிகளும் வென்றுள்ளன

ராமநாதபுரம் தொகுதி இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதிக பட்சமாக காங்கிரஸ் கட்சி 5 முறை வாகை சூடியுள்ளது. அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளது.  பார்வர்டு பிளாக், தமாகா, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. ஒரு தடவை சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ராமநாதபுரம்,பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடாணை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.

ஓபிஎஸ் போட்டி

இந்த முறை, பாஜக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வேட்பாளராக அவர் களம் இறங்குகிறார்.

திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக நவாஸ்கனி நிறுத்தப்பட்டுள்ளார். இவர், கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அதிமுக, ஜெயபெருமாள் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சந்திர பிரபா, போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நிற்பதால், ராமநாதபுரம் நட்சத்திர தொகுதியாக ஜொலிக்கிறது.

வாக்காளர்களை குழப்பும் வகையில், அவரது பெயருள்ள மேலும் ஐந்து பன்னீர்செல்வங்கள் சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளனர். அதாவது மொத்தம் பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 6 பேர் ராமநாதபுரம் தேர்தல் களத்தில் உள்ளனர்.

செல்வாக்கு எப்படி?

தேமுதிக மட்டுமே, இந்தத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியாகும். அந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியில் பெரிதாக வாக்குகள் இல்லை.

நவாஸ்கனிக்கு, திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு உள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரிக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நவாஸ்கனி, 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் வாங்கி வென்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், இந்த மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.

இதை எல்லாம் பார்க்கும் போது, நவாஸ்கனிக்கு வெற்றி, எளிதாக இருப்பது போல் தோன்றும்.
ஆனால் தேர்தலில் வேறு கணக்குகளும் உண்டல்லவா?

ஓபிஎஸ்சை இந்த முறை ஆதரிக்கும் பாஜக, கடந்த தேர்தலில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஆயிரம் வாக்குகளை அள்ளி இருந்தது.

அதேபோல், அமமுக வேட்பாளர் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ்சை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்துள்ளார்.

ஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு இங்கு கணிசமான ஒட்டுகள் உண்டு.
”அண்ணன் ஓபிஸ் முதலமைச்சராக இருந்ததால், தொகுதியில் எல்லோருக்கும் அவரை நன்கு தெரியும் – கூட்டணி ஓட்டுகளும் சாதகம் – அவரது எளிமையான பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது – எளிதாக அண்ணன் ஓபிஎஸ் வெல்வார்” என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதற்குள் என்னென்ன மாயங்கள் நிகழப்போகிறதோ?

– பி.எம்.எம்.

#ராமநாதபுரம்_மக்களவைத்_தொகுதி #அப்துல்_கலாம் #காங்கிரஸ் #அதிமுக #திமுக #பாஜக  #ஓ_பன்னீர்செல்வம் #ஓபிஎஸ் #இந்திய_யூனியன்_முஸ்லிம்_லீக் #நவாஸ்கனி #ஜெயபெருமாள் #நாம்_தமிழர் #டாக்டர்_சந்திர_பிரபா #தேமுதிக #Lok_Sabha_Election_2024 #Ramanathapuram_Lok_Sabha_Constituency #Ramanathapuram_Constituency #jayaperumal #dmdk #admk #dmk #navaskani #ops #chandra_prabha #congress

You might also like