தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா கச்சத்தீவு சர்ச்சை!

வீழ்த்தப்படவே முடியாத தலைவர்கள், ஏதாவது ஒரு விவகாரத்திலோ, சர்ச்சையிலோ மாட்டிக்கொள்ளும்போது எதிரிகளிடம் எளிதாக தோற்றுப்போகிறார்கள்.

காமராஜர், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் போன்ற பெரும் தலைவர்களால், இந்திரா காந்தியை தோற்கடிப்பது அசாதரணமான காரியமாக இருந்தபோது, ‘மிசா’ எனும் அவசரநிலை பிரகடனம், அவரை தோல்வி காணச்செய்தது. போபார்ஸ் பீரங்கி ஊழல் ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பியது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் கட்சியை வனத்துக்கு அனுப்பி திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் தலைவர்கள் பிரச்சாரம் செய்துவரும் சமயத்தில் திடீரென உருவெடுத்துள்ள கச்சத்தீவு விவகாரம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது, மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற வினாக்களையும் எழுப்பியுள்ளது.

கச்சத்தீவு வரலாறு..

வங்காள விரிகுடாவின், பாக் நீரிணை பகுதியில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது, கச்சத்தீவு.

இந்தத் தீவு, ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  17-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது இந்த தீவு. கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என ஆவணங்கள் சொல்கின்றன.

1822-ம் ஆண்டு, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, ராமநாதபுரம் சமஸ்தானத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, கச்சத் தீவு உட்பட ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நிலபரப்பை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது.

1858 ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இங்கிலாந்து ராணியின் ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது.

அந்த சமயத்தில், கச்சத் தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, அவர்கள் சொத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது, கச்சத்தீவும், நாட்டுடமை ஆனது. ஆம், இந்திய அரசுக்கு சொந்தமான பகுதியானது, கச்சத்தீவு.

எனினும், தங்களுக்கு எந்த விதத்திலும் சம்மந்தப்படாத கச்சத்தீவை, 1921 முதல் இலங்கை சொந்தம் கொண்டாடி வந்தது. கச்சத் தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை அவ்வப்போது முளைத்தாலும், அதனை இருநாட்டு மீனவர்களும் பயன்படுத்தி வந்தனர்.

1971-ம் ஆண்டு, பாகிஸ்தானுடன் போரிட்ட இந்தியா, வெற்றி பெற்று பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கியது.

அப்போது முதல் சீனாவும், பாகிஸ்தானும், இலங்கையை தங்கள் நட்பு நாடாக மாற்றிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

இந்தியாவின் நட்பு நாடாகத் தொடர்வதற்கு கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமர் பண்டார நாயக வலியுறுத்தினார்.

பூகோள மற்றும் அரசியல் ரீதியாக இலங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திரா காந்தி, அதற்கு ஒப்புக் கொண்டார்..

1974-ம் ஆண்டு ஜூன் மாதம், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தில் இந்திரா கையெழுத்திட்டார்.

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது இந்த விவகாரம், அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் மையப்பொருள் ஆகியுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் கையெழுத்தானபோது தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி.

இந்த ஒப்பந்தம் குறித்து கருணாநிதிக்கு எதுவும் தெரியாது என திமுக சொல்லி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாக சில தகவல்களை அண்மையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார். இதுவே, இப்போது அணுகுண்டுவாக வெடித்துள்ளது.

தான் பிரச்சாரம் செய்யும் அனைத்துக் கூட்டங்களிலும், கச்சத்தீவு விவகாரம் குறித்தே அண்ணாமலை பேசிவருகிறார்.

’கச்சத்தீவை தாரை வார்த்தது, காங்கிரசும் திமுகவும் சேர்ந்து செய்த சதி, கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும், கச்சத்தீவை எப்படியும் திரும்பப் பெறுவோம்’ என்கிறார் அண்ணாமலை.

பிரதமர் மோடி கருத்து

பிரதமர் மோடியும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில், “யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது-

இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக் கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” எனப் பதிவிட்டிருந்தார், மோடி.

கடந்த சில நாட்களாக அனைத்துக் கட்சித் தலைவர்களும், தங்கள் பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரத்தையே கையில் எடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘மோடி ,பிரதமரானதும் ’’கச்சத்தீவை மீட்க வேண்டும்’’ என எங்கள் தலைவர் ஜெயலலிதா கடிதம் எழுதினார் – ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை – இப்போது கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் தகுதி இல்லை – வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர், கச்சத்தீவு பற்றி பேசுகின்றனர்’’ என்கிறார்.

நிர்மலா சீதாராமன் நீண்ட விளக்கம்

ஆனால், எடப்பாடி பழனிசாமி, கருத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்னையில் நேற்று பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், கச்சத்தீவு விவகாரம் குறித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

அதன் சாராம்சம்:

‘’தேர்தலுக்காக நாங்கள் கச்சத்தீவு பற்றிப் பேசவில்லை. பிரதமராக இருந்த நேரு, ‘’கச்சத்தீவு ஒரு நச்சரிப்பு, தொல்லை. அதனை, விரைந்து மற்றவர்களிடம் கொடுத்து விட வேண்டும்’’ என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தியோ, ’’கச்சத்தீவு வெறும் கற்பாறைகள் கொண்டது” என்று சொன்னார். அப்போது அவர்களை எதிர்த்து திமுக போராடவில்லை.

1974-ம் ஆண்டு, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் கச்சத்தீவு குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு கூறி விட்டனர்.

திமுகவுக்கு தெரியாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக 50 ஆண்டுகளாக பொய்ப் பிரச்சாரம் நடந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் என்ன செய்தோம் என கேட்கிறார்கள். கச்சத்தீவு குறித்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு ‘ரிட்’ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது விசாரணைக்கு வரும்போது மத்திய அரசின் நிலைப்பாடு தெரியும்’ என்பது நிர்மலா சீதாராமனின் வாதம்.

கச்சத்தீவு அருகே உள்ள ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வமும், இந்த பிரச்சினையில் மனம் திறந்துள்ளார்.

‘’கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் சொத்து – அதனை காங்கிரஸ் அரசு தாரை வார்த்து விட்டது – எனவே மீனவர்கள் உரிமை பறிபோய் விட்டது-கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்- நானும் தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்’ என்கிறார், ஓபிஎஸ்.

எல்லா கூட்டங்களிலும், எல்லா தலைவர்களாலும் கச்சத்தீவு கையில் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களவைத் தேர்தலில், இந்த விவகாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என தெரியவில்லை.

– பி.எம்.எம்.

You might also like