அரசியல் கருத்துகளுக்கு அப்பாலும் சில மாவீரர்கள் மக்கள் மனதில் வீற்றிருக்கும் மகத்தான மனிதர்கள்.
அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரு மகத்தான மாவீரனைப் பற்றி வார இதழ் ஒன்றில் மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் எழுதிய நினைவு குறிப்பு இது.
“திடீரென்று ஒரு அழைப்பு. தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச் சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள்.
அங்கேயிருந்து 1996 என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996-ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.
சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள்.
அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு.
உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார்.
தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன்.
உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.
சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று. போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன்.
நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.
அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு.
வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.
என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார்.
என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர்.
உருகிக்கரைந்து உள்ளே போய்க் கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி. சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை.
இதுதான் ஒரு நல்ல மனிதனின் பண்பாடு. எவரோடு என்ன பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது எனும் கட்டுக் கோப்பு. நல்லதொரு பயணம்.
தென்னிந்தியாவின் சத்யஜித்ரே என்று அழைக்கப்படும், காலம் கடந்தும் கொண்டாடப்படும் இயக்குனர்களில் திரு.மகேந்திரன் மிக முக்கியமானவர்.
- பாலு