வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் நூல்!

நூல் விமர்சனம் 

இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தத்துவ ஞானிகளில் முதல் பத்து இடங்களில் ஒருவராக வரக்கூடிய யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கே என அறியப்படுகிறவரோடு நடந்த சிறு உரையாடலின் தொகுப்பு தான் இந்த ‘தனித்து நிற்கும் துணிவு’ நூல்.

யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி, மெட்ராஸ் ராஜதானியில் மதனபள்ளியில் பிறந்தவர். இவரது வாழ்க்கை வரலாறு ஒருவித சூட்சுமத் தன்மையைக் கொண்டதாக, நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. அதனாலேயே மிக சுவராஸ்யமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் எனக் கூறலாம்.

இவரது எழுத்துக்கள், பேச்சுக்கள் என அனைத்துமே, உடனடியாக, படித்தவுடன், கேட்டவுடன் புரிந்து கொள்ள முடிவது அல்ல. படித்துக் கொண்டே இருக்கும்போதே தூங்கி விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அதே சமயம் படித்துக் கொண்டிருக்கும்போது, வேறோர் உலகத்துக்கு செல்கிறார் போல, அதுவும், என்னவென்று புரியாத சூழலுக்குள் மாட்டியிருப்பது போன்ற சூழலையும் உருவாக்கக் கூடியவை.

அதாவது மனதிலும், அறிவிலும் மிகவும் கூர்மையான கவனம் இருந்தால் தவிர இவரைப் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை. இதையெல்லாம், எப்படி யோசித்திருப்பார் என நினைத்தாலே, மனதில் இனம் புரியாத மயக்கம் உருவாகும்.

ஆனால் இவரது வாழ்க்கை ஆச்சர்யப்படும் விதத்தில், மிக சுறுசுறுப்பானதாக, அடுத்தடுத்து காட்சிகள் வந்து போகும் விறுவிறுப்பான சினிமா போல இருப்பது உண்மையிலேயே ஒரு புரிந்து கொள்ள முடியாத இயல் முரண் எனக் கூறலாம்.

எதனால் இந்த முன்னுரை என்றால் அவரது இந்த நூல் அல்லது அவர் தொடர்பான வேறு எந்த நூலாக இருந்தாலும், அவரது வாழ்க்கையின் ஒற்றைக் கோட்டோவியமாவது தெரிந்திருந்தால்தான் புரிதல், அதை உள்வாங்குதல் ஆகியனவற்றுக்கான முயற்சியே கூட சாத்தியம்.

இது புரிந்தால், அதை ஏற்றுக் கொண்டால், நமக்கு, நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் சர்வ நிச்சயமாக தெளிவு ஏற்படும். பல சமயஙளில் அது நம்மை ஆச்சர்யப்படுத்தலாம், அச்சுறுத்தலாம், மறுதளிக்க வைக்கலாம்.

ஆனால் அவர் சொல்ல வருவதை புரிந்தால், மாறாமல் இருப்பது சாத்தியமே இல்லை. அவரது வார்த்தைகள் மிக் கடினமானவை. அதாவது மிக் கஷ்டமான, புரிந்து கொள்ள முடியாதவை என்ற அர்த்தத்தில் இல்லை.

அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் வேண்டுமென்றே, கடினத் தன்மையோடு இருப்பவை எனக் கூறலாம். இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டது அல்ல. மாறாக, இதை வேறு எப்படி சொல்ல முடியும் என்ற அவரது முடிவின் எதிரொலியாக இருக்கலாம்.

நூலின் கட்டமைப்பு

இது மிகச்சிறிய நூல். 160 பக்கங்கள்தாம் உள்ளது. பாகம் 1, 2, 3 பிரித்துள்ளனர். இதைத் தவிர ஜெ கே பற்றிய குறிப்பு, என சில பக்கங்கள், ஆசிரியர் குறிப்பு என மூல நூல் ஆசிரியரான ஹெங்க் ஸ்கோன்வில்லே அவர்கள் ஜெகே பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதைப் படித்தால் நூலைப் புரிந்து கொள்வது சற்று இலகுவாக இருக்கும்.

எப்படிப்பட்ட நூல்?

இது ஒரு வாழ்க்கைத் தத்துவ விசார நூல் என்று சொல்லலாம். அதே சமயம் உங்களுக்குத் தேவையான சுயமுன்னேற்றக் கருத்துக்களைத் தேடினால் ஏமாந்து போவீர்கள்.

வாழ்க்கையை, நம்மை, சுயத்தை, அறிவை, வழிகாட்டும் குருமார்களை, உபதேசங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பது பற்றிய நூல் என சொல்லலாம்.

இதன் தலைப்பு, ‘தனித்து நிற்கும் துணிவு’ என்பது முழுக்கவும் மிகச் சரியான, நியாயப் படுத்தக்கூடிய தலைப்பு.

இவரது கருத்துக்கள், அவற்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள முடிந்தால், அதுவே துணிச்சலான முடிவாக இருக்கும். அதே சமயம் அதைப் பற்றி சொல்வது என்றாலுமே நாம் தனியனாகத்தான் தெரிவோம்.

ஆனால் இது சாதாரணமாக போகிற போக்கில் படிக்கக் கூடிய, படிக்க வேண்டிய நூல் அல்ல. வாழ்க்கையை அதன் அடிப்படையை புதிய கோணத்தில், அதுவும் அது மட்டும்தான் சரியானதாக இருக்க முடியும் என்கிற கோணத்தில் பார்க்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு, ஆன்மீக, லோகாயத, போதனைகள், போதகர்கள், ஆகியன இல்லாமல் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கானது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விட வேண்டும்.

படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிமையான நூல் அல்ல. ஆனால் இதைப் படித்துப் புரிந்து கொள்ள முடிந்தால், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் நிச்சயமாக மாறும்.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. இதுதான் பாகம் 1 என்பதன் தலைப்பு. இதிலிருக்கும் விஷயத்தை மட்டுமே அதுவும் சிறு பகுதியை மட்டுமே, சற்றே விளக்கினால் இந்த நூலின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். மீதியை புத்தகம் வாங்கிப் படித்துக் கொள்க.

முன்னமே குறிப்பிட்டது போல, கேள்வி – பதில் என்ற பாணியில் அமைந்திருக்கும் ஒரு நூல். இதை கிருஷ்ணமூர்த்தி மறுப்பார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு உரையாடல். இதன் முதல் கேள்வியே, ‘உரசல்களே இல்லாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?”

அதற்கு அவர் பதில் கூறும்போது, “இந்த உலகம் எப்படி இருக்கிறதோ, அதுதான் உண்மையான நிதர்சனம். இறுதியான நிதர்சனம் என மனிதன் கண்டுபிடித்திருப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இந்த நிஜமான நிதர்சனத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு நீங்கள் செய்யும் எல்லா காரியங்களும், உங்களை சுற்றியுள்ள விஷயங்களுடன் நீங்கள் இணக்கமாக வாழ்வதை கடினமாக்கும்”

இதையே தனிப்பட்ட வித்தில் சொல்வதானால், ‘நல்லிணக்கம் பற்றிய நமக்கு ஒரு கருத்து இருக்கிறது.

அதாவது முதலில் உங்களுடன் நீங்களே முரண்படாமல் வாழ்வது என்பதைப் பற்றிய ஒரு கருத்தியலை உருவாக்கி, அதன்படி நடக்க முயற்சிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உண்மையில் என்ன நடக்கிறது என்றால், ஏற்கனவே உங்களுக்குள் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது. அதுதான் இயல்பான நிலை. அதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும்போது, புதிய கருத்தியலை உருவாக்குகிறீர்கள்.

ஆனால், இந்த புதிய கருத்தியலின் நடைமுறைகளின் படி நல்லிணக்கத்தை, அமைதியை உருவாக்க, தேட முயற்சிக்கும்போது, ஏற்கெனெவே இருக்கும் அமைதியோடு மோதுகிறீர்கள்.

இந்த நிலையில் அமைதியோ, நல்லிணக்கமோ எப்படி சாத்தியமாக முடியும்?. இதுதான் நீங்கள் நீங்களாக இல்லாமல் போவதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

இது நம்மைச் சுற்றியுள்ள சமூகம் அது உருவாக்கிய கலாச்சாரம், மரபுகள் ஆகியவற்றை நமதாக வரிக்கும்போது இதுபோன்ற முயற்சிகள் தவிர்க்க இயலாதவை.

நம்மீது திணிக்கப்படும் இவைகளுக்கு ஏற்றவாறு நம்மைத் தகவமைத்துக் கொள்வது, ‘நம்மோடு நாம் நல்லிணக்கமாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதுவும் நமது எண்ணமல்ல. நம்முள்ளே சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள்.

அதனால்தான் உண்மையான நிதர்சனத்திற்கும், நிதர்சனம் என சொல்லப்படுபவைக்குமான போராட்டம் நிகழ்கிறது. இது உண்மை நிலைக்கும், ‘இதுதான் உண்மையாக இருக்க வேண்டும்’ என்கிற கற்பித்தலுக்கும் இதையே நடக்கும் போராட்டமாகவும் கருதலாம். இதற்கு மாற்று, நீங்கள் நீங்களாக இருப்பதுதான்.

அதற்கு நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. வேறு யாராகவோ, எதுவாகவோ மாறுவதற்கு நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்பதால், உங்களுக்கு நீங்களே முரண்படாமல் இருக்கலாம்.

இப்படி இருந்தால் சுற்றியுள்ள சமுதாயத்தோடு முரண்பட மாட்டீர்கள். உங்களோடு நீங்கள் இணக்கமாக இல்லாதவரையிலும், மற்றவர்களோடு இணக்கமாக இருப்பது சாத்தியமில்லாதது. அப்படியே இருந்தாலும், உங்களது அக்கம்பக்கத்தவர் உங்களோடு இணக்கமாக இருப்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

ஆனால் அதைப்பற்றி நீங்கள் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். அதே சமயம் உங்களுக்கு நீங்களே இணக்கமாக இருக்கும்போது, இன்றைய சமுதாயத்திற்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருப்பீர்கள். இதைத்தான் தனித்து நிற்கும் துணிவு என்கிறார்.

இது வெறும் மிகச் சிறு உதாரணப் பகுதிதான். அதுவும் முதல் பகுதியில் உள்ள மிகச்சிறு விளக்கம். இதனோடு மிகப் பல விஷயங்கள், பல்வேறு உதாரணங்களுடன் சொல்லப்பட்டு இருக்கின்றன.

பயனுள்ள சுவராஸ்யம்

இந்த நூல், எழுதப் பட்ட விதம், சாதாரணமாகப் படித்துக் கடந்து போக முடியாத வகையில் இருக்கிறது. உங்களுக்கு அதன் மனவோட்டம் புரிபடாததாக இருந்தால், அது உங்களை தொடர்ந்து இழுத்துச் செல்லும். ஒரு சிக்கலான புதிர் விளையாட்டை கண்காட்சியில் நிர்மாணித்து இருப்பதைப் போலத்தான் இந்த நூலும் என சொல்லலாம்.

அதற்கான மன நிலையும், அது போன்ற சவால் மனதிற்குப் பிடித்து இருந்தால்தான் அதனுள் போக முடிஉயும். அது போலத்தான். இந்த நூலின் தன்மை புரிந்து அதனுள் சென்று விட்டால், அதன் பின் பொழுதும் நேரமும் நமதல்ல என்றாகிவிடும்.

அதன் வார்த்தைகள் நேரடியாக முதலில் மனதிற்கும், அதே சமயத்தில் அறிவிற்கும் செல்லக்கூடியவை. இரண்டும் தொடர்புப் படுத்தாமல் இதைப் படிக்கவே முடியாது.

அவரது வாதங்களில் உள்ள வசீகரம், படமெடுக்கும் பாம்பின், பாயத் தயாராக இருக்கும் விலங்கினத்தின் வசீகரம் என சொல்லலாம். அதை நீங்கள் வசீகரமானது என பார்க்க, புரிந்து கொள்ள முடிந்தால், இது உங்களுக்கான நூல்.

நூலின் சிறப்பு

முதலில் இந்த நூலின் மொழிபெயர்ப்பு பற்றி சொல்லியாக வேண்டும். மிகச் சிறப்பாக உள்ளது என்பதை இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இதைப் படித்துப் புரிந்து கொள்வது என்பதே மிகப் பெரிய சவால். அதை மற்றவர்களுக்குப் புரியும்படியாக தமிழில் தருவது அதை விட பெரிய சவால்.

அடுத்ததாக, வார்த்தைப் பிரயோகங்கள் முடிந்த வரையில் இயல்பான, சாதாரணமானவைதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது நூலைப் படிப்பதற்கு மிகவும் உதவுகிறது. மிக வித்தியாசமான தத்துவ நூல், அதுவும் நடைமுறை சார்ந்த தத்துவ நூலைப் படிக்க வேண்டும் என்றால் இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மிக முக்கிய வலியுறுத்தல் என்னவென்றால், போதனை, போதகர்கள் ஆகிய இரண்டுமே நிராகரிக்கப் பட வேண்டியவைகள். நீஙள் நீங்களாக இருப்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதுதான்.

அது எப்படி சாத்தியப் படுத்தலாம் என்பதை அவர் கேள்விகளுக்கான பதில்களாக கூறியிருக்கிறார். இதை போதனை என எடுத்துக் கொள்ளாமல், ‘நாம் நாமாக இருப்பது’ என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுமே என்கிற தேடலுடன் இதைப் படிக்கலாம். பயன் பெற்லாம்.

– ரவீந்திரன்

*****

நூல்: தனித்து நிற்கும் துணிவு
மொழிபெயர்ப்பு – ராஜலட்சுமி சிவலிங்கம்.
கண்ணதாசன் பதிப்பகம்.

You might also like