வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!

பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் பயண அனுபவம்

வாரத்தில் ஒரு ஞாயிறு மட்டுமே நமக்கான நாளாக இருக்கிறது. தனியாளாக சுத்தும் நான் கொஞ்சம் திருந்தி குடும்பத்துடன் கன்னிவாக்கம் சென்றிருந்தேன். கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள கிராமம். கடந்த ஏழு நாட்களாக தொடரும் உள்ளூர் கோயில் திருவிழா. கடைசி நாள் வாங்க என அழைத்திருந்தார் நண்பர் ஆசிரியை உமா மகேஸ்வரி.

மீஞ்சூர் – ஊரப்பாக்கம் நெடுஞ்சாலை. ரைட்… ரைட்… போலாம் என்று சொல்லும் ஏகாந்தமான சாலை. நோ சிக்னல். முக்கால் மணி நேரத்தில் கூடுவாஞ்சேரி. வழி நெடுக காட்டுமல்லி என்பதைப் போல சாலை நெடுக மொட்டை வெயிலில் பெரிய குடையுடன் ரியல் எஸ்டேட் நிறுவனப் பணியாளர்கள். கையில் காசுடன் போனால் இடமோ வீடோ வாங்கிவரலாம்.

பெருமாட்டுநல்லூரில் ஒரு பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு நகரும்போது வண்டி தடுமாறியது. பேக்வீலைப் பார்த்தால் பஞ்சர்.

அந்தரான காட்டில் சிக்கியதுபோன்ற நிலை. விடுமுறை நாளில் யார் கடை வைத்திருப்பார்கள்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டியை தள்ளிக்கொண்டே வந்தேன். மூடிக்கிடந்த கடையின் கதவில் இருந்த நம்பரை அழுத்தினால், அவர் எடுக்கவேயில்லை.

கடைசியாக மெக்கானிக் ஒருத்தர் உதவிக்கு வந்தார். அவர் பொறுமையாக பஞ்சர் போடும்வரை காத்திருந்தேன். வீட்டுக்குச் சென்றபோது நண்பகல் 11.30. தாகம் தீர தர்ப்பூசணி சாப்பிடக் கொடுத்து உபசரித்தார். ஏரிக் கரையில் கோயில். காற்றின் அலைவரிசையில் பக்திப் பாடல்கள்.

புதிய குடியிருப்புகள் முளைத்திருக்கும் அந்த கிராமத்தில், ஒரு சிலர் மட்டும் விவசாயத்தைக் கைவிடாமல் காத்து வருகிறார்கள். அறுவடைக்குத் தயாராக நெற்பயிர்கள். விவசாயம் செய்ய தண்ணீருக்குப் பஞ்சமில்லை. கிணற்றில் வற்றாத நீருற்று. நீர்மட்டத்தைப் பாதுகாக்கிறது ஏரி.

மதியம் உமாமகேஸ்வரி மகளின் சமையல். வடை பாயாசம், வாழைப் பழம் என அறுசுவை விருந்து. சென்னைக்கு மிக அருகில்தான். ஏதோ தொலைதூர ஊருக்குச் சென்றுவந்த நிறைவை அந்த நாள் தந்தது.

மாலை நேரத்தில் ஏரியைப் பார்ப்பது ரம்மியம். நீர்நிலையின் வடக்கே தூரத்தில் தெரிந்த சிறு மலை, பனை மரங்கள், கட்டடங்கள். இயற்கை கொஞ்சம் மிச்சமிருக்கிறது.

சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம்.

ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள். மேளக் கச்சேரி, அதிர்வேட்டுகள் என ஊர்க்காரர்களின் தடபுடல் ஏற்பாடு.

திருக்கல்யாணத்தில் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என தனித்தனியாக மொய் எழுதியது வேடிக்கையாக இருந்தது. அன்றிரவு திருவிழா முடிந்ததும் மக்களுக்கு சுவையான சாப்பாடு. கியூவில் நின்று வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் கோயில் திருவிழாவைக் கண்டு ரசித்த மகிழ்வில், நன்றி சொல்லி வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி 10.30.

You might also like