உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!

இந்திய வீரர்களுக்கு, விளையாட்டு என்பது  ஓர் அடையாளம். அவர்களுக்கு அதுகனவும் கூட. இப்படிப்பட்ட கனவை உலகளவில் நிறைவேற்றிய வீரர்கள் அள்ளிக்கொடுத்த தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும், கோப்பைகளும் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்திய வீரர்களின் பட்டியல் நீளமானது.

அதில் குறிப்பிடத்தக்க சில வீரர்கள் பற்றிய தொகுப்பு இந்தக் கட்டுரை.

மகேந்திரசிங் தோனி: (கிரிக்கெட் வீரர்)

2007 ஐசிசி டி-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட், 2011 ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட், 2013 ஐசிசி சாம்பியன் என அடுத்தடுத்த வெற்றிகளுக்கு உரித்தானவர் மகேந்திர சிங் தோனி.

தற்போதைய இளைய சமுதாயத்தின் முன் உதாரணமாக திகழ்கிறார் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர், ராக்கெட் ஷாட்டின் சொந்தக்காரர்.

2009-ம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற வீரராக இருந்தார்.

உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிகோம்: (குத்துச்சண்டை வீராங்கனை)

வாழ்க்கையில் எத்தனைக் தடைக்கல் வந்தாலும், நேர்த்தியாக கையாண்டு 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்குண்டு.

2012 லண்டன் கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

சர்வதேச குத்துச்சண்டை அமைப்பகம் வெளியிட்ட தரவரிசையில், உலகப் பெண் குத்துச்சண்டை வீரர்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறார் மேரி கோம்.

சாய்னா நேவால்: (பேட்மிண்டன் வீராங்கனை)

சாய்னா நேவால் மார்ச் 17, 1990 அன்று ஹரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் பேட்மிண்டன் வீரர்கள் என்பதால், இளம் வயதிலேயே சாய்னாவை விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.

அவரும் தனது எட்டு வயதிலேயே பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினார்.

2003-ல், சாய்னா தனது முதல் பெரிய சர்வதேசப் போட்டியான ஜூனியர் செக் ஓபனை வென்றார்.

2005-ல் ஆசிய சாட்டிலைட் பேட்மிண்டன் போட்டி மற்றும் 2006-ல் இந்திய தேசியப் பூப்பந்து சாம்பியன்ஷிப் உட்பட பல வெற்றிகளுடன் அவர் பூப்பந்து விளையாட்டை தொடர்ந்தார்.

பூப்பந்தாட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியவர்களில் இவரும் ஒருவர்.

2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். அடுத்தடுத்து பல போட்டிகளில் தங்கம், வெண்கலம் என்று பதக்கங்களைக் குவித்தவர் சாய்னா.

சுஷில் குமார்: (மல்யுத்தம்)

மல்யுத்தப் போட்டிகளில் உலக அளவில் இந்தியாவிற்கு வெற்றியை வாரிக் குவித்தவர் சுஷில் குமார்.

2010 காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் சாதனை நாயகனாகத் திகழ்கிறார் சுஷில் குமார்.

2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2008-ல் வெண்கலப் பதக்கமும் வென்ற சுஷில் குமார், இந்திய ஆண்கள் மல்யுத்தப் போட்டி வீரர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளார்.

அபினவ் பிந்த்ரா: (துப்பாக்கிச் சுடுதல்)

இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா, 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதலாம் இந்தியர் என்ற பெருமையையும் புகழையும் பெற்றவர் அபினவ் பிந்த்ரா.

மாரியப்பன் தங்கவேலு: (உயரம் தாண்டுதல்)

2016-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், சேலத்தில் உள்ள பெரிய வடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற வீரர், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.

இவர், உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்திய முதல் தமிழன் இவர்தான்.

சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை, நம்முடைய பலவீனத்தைப் பலமாக மாற்றிக் காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

வைசாலி : (சதுரங்க வீராங்கனை)

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான வைஷாலி, செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

இதன்மூலம் தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் வைஷாலியைச் சேரும்.

‘பேராதன்’ என்ற ‘பிடே’ பட்டத்தைப் பெற்ற இந்திய சதுரங்க வீராங்கனையும் வைஷாலிதான். இப்பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தம்பி பிரக்ஞானந்தாவும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைந்த முதல் இளம் வீரர் என்பது நினைவுகூரத்தக்கது.

பிரக்ஞானந்தா: (சதுரங்க வீரர்)

சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் பிரக்ஞானந்தா, அபிமன்யூ மிஸ்ரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாராவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இளம் வீரராவார்.

2023 ஆம் ஆண்டுக்கான, உலகக் கோப்பைக்கான சதுரங்கப் போட்டியில், தனது 18-வது அகவையில் சதுரங்க உலகக் கோப்பை இறுதிச் சுற்றை அடைந்த இந்தியாவின் மிக இளைய வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

அத்துடன் விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பின்னர் இறுதிச் சுற்றை அடைந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

ககன் நரங்: (துப்பாக்கிச் சுடுதல்)

ககன் நரங் தன்னுடைய சிறு வயதில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பலூன் சுடுதலில் ஆர்வமாக அனைத்து பலூனையும் சுட்டு வென்றவர். அதில் ஆர்வமாகிய அவர், உலகளவில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை இந்தியாவிற்காக வாங்கித் தந்தார்.

2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் 10 மீ துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2014 காமன்வெல்த் போட்டிகளில் 50 மீ துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் சாதனை நாயகன் ஆனார்.

இவர் நான்கு தங்கப் பதங்கங்களை 2006 மற்றும் 2010 காமன் வெல்த் போட்டிகளில் வென்றதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டியுள்ளார். 

கபடிப் போட்டி

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பாக கபடிப் போட்டி உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் இந்த கபடி விளையாட்டு.

1921-ல் கபடி விளையாட்டிற்கான கமிட்டி மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டது. 1950-ல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு 1972-ல் இந்திய அமெச்சூர் கபடிக் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.

1980-ல் முதன்முதலாக ஆசிய கபடிப் போட்டி நடத்தப்பட்டபோது இந்தியா சாம்பியன் ஆனது.

முதல் உலகக் கோப்பைக் கபடி விளையாட்டு  2004-ல் நடைபெற்றது.

இதில், 55-27 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானைத் தோற்கடித்து முதல் உலக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. இதுவரை 8 முறை உலக சாம்பியன் ஆகியுள்ளது இந்தியா.

கபடியில் இந்தியப் பெண்களும் சளைத்தவர்களல்ல. 2005-ல் மகளிருக்கான ஆசிய கபடிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.

2012-ல் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையையும் இந்திய வீராங்கனைகள் வென்றனர். இதுவரை மூன்று முறை உலக சாம்பியன் வென்றுள்ளனர் நம் இந்திய மகளிர் அணியினர்.

இதுவரை அனைத்து வகை கபடிப் போட்டிகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது பெருமைக்குரிய ஒன்றுதான்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

#உலகக்_கோப்பை #World_Cup #மகேந்திரசிங்_தோனி #Mahendra_Singh_Dhoni #மேரிகோம் #Mary_kom #குத்துச்_சண்டை #Boxing #சாய்னா_நேவால் #Saina_Nehwal #பேட்மிண்டன் #Badminton

You might also like