சிங்கப்பெண்ணே – ஆணினம் வணங்கும் திரைப்படமா?!

‘சிங்கப்பெண்ணே’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, ‘பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் நம் நினைவுக்கு உடனடியாக வரும். அதுவே, அப்படத்தில் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இடம்பெற்றிருக்கும்.

அதே வகையில், தன்னம்பிக்கை ஊட்டும்விதமாகச் சில திரைப்படங்கள் தமிழில் அவ்வப்போது உருவாவதுண்டு. அதன் ஒருபகுதியாகச் சாதனையாளர்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட ‘பயோபிக்’ திரைப்படங்களில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்கள் குறித்தவை பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவை தந்த உந்துதலின் அடிப்படையில், சில உண்மைகளையும் கொஞ்சம் புனைவையும் கலந்து ‘சிங்கப்பெண்ணே’ திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் ஜேஎஸ்பி சதீஷ்.

ஷில்பா மஞ்சுநாத், ஏ.வெங்கடேஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ட்ரையத்லான் வீராங்கனை ஆர்த்தியும் இடம்பெற்றுள்ளார். நீச்சல், ட்ரையத்லான் போட்டிகளை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

கண்டெடுக்கப்பட்ட விதை!

தென்காசியைச் சேர்ந்த ஷாலினி (ஷில்பா மஞ்சுநாத்), சென்னையில் உள்ள நீச்சல் போட்டிகளுக்கான ஆணையத்தில் நீச்சல் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தமிழ்நாடு அணிக்குத் தேர்வாகிற, தேர்வாகத் துடிக்கிற இளம் வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்லும் ஷாலினி, அங்கு தேன்மொழி (ஆர்த்தி) என்ற சிறுமியைப் பார்க்கிறார். சைக்கிள் ஓட்டுவதிலும், ஓடுவதிலும், நீச்சல் அடிப்பதிலும் அவரிடம் தென்படும் வேகம் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது.

தேன்மொழியின் பாட்டி அம்மு, ஷாலினி வீட்டில் வேலை செய்து வருகிறார். திடீரென்று ஒருநாள் அவர் இறந்துவிட, அப்பெண்ணுக்கு ஆதரவில்லாத நிலை ஏற்படுகிறது. மாமா உறவுமுறை கொண்ட ஒரு நபர் (சென்றாயன்), அப்பெண்ணைத் தான் திருமணம் செய்துகொள்வதாகப் பிதற்றுகிறார். ஊரார் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

அதையடுத்து, துக்க வீட்டுக்கு போலீசாரை வரவழைக்கிறார் ஷாலினி. பதினெட்டு வயது பூர்த்தியாகாத பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது சட்டவிரோதம் என்று அங்கிருப்பவர்களை எச்சரிக்கின்றனர் போலீசார். அதையடுத்து, தேன்மொழியை அங்கிருந்து அழைத்துச் செல்வதோடு, சென்னையில் ஒரு பள்ளியில் சேர்க்கிறார் ஷாலினி. தான் பணியாற்றும் மையத்திலேயே, நீச்சல் பயிற்சியையும் பெற வைக்கிறார்.

தொடக்கத்தில் நீச்சலுடை அணியவே வெட்கப்படும் தேன்மொழி, பிறகு நீச்சலில் ‘ஜெட்’ வேகம் காண்பிக்கத் தொடங்குகிறார். செல்வாக்குமிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி, அவரது திறனைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். தனது மகள் மாநிலப் போட்டிகளில் முதலிடம் பெறும் நோக்கில், அவரைப் போட்டியில் பங்கேற்காமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். விளையாட்டு ஆணையத்தில் இருப்பவர்களும் அவருக்கு துணையாக இருக்கின்றனர்.

அதனால், தேன்மொழி தோற்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதோடு, ஷாலினி மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இருவரையும் அச்சம்பவம் சோர்வுக்கு உள்ளாக்குகிறது.

இந்த நிலையில், ஷாலினி இன்னொரு நீச்சல் பயிற்சி மையத்திற்குச் செல்கிறார். சிறுவயதில் அவருக்குப் பயிற்சி தந்தவரே அங்கு தலைமைப்பதவியில் இருக்கிறார்.

அவரது வழிகாட்டுதலில், தேன்மொழிக்கு ‘ட்ரையத்லான்’ போட்டிக்கான பயிற்சிகளைத் தருகிறார் ஷாலினி. மெல்ல முன்னோக்கி நகரும் வேளையில், ஒருநாள் தேன்மொழி ஒரு விபத்தில் சிக்குகிறார். அது, அவரை மனதளவில் வெகுவாகப் பலவீனப்படுத்துகிறது.

தொடர்ந்து தன்னை நோக்கி வரும் தடைகளை மீறி ‘ட்ரையத்லான்’ போட்டியில் மாநில அளவில் தேன்மொழி வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதைச் சொல்கிறது ‘சிங்கப்பெண்ணே’வின் மீதி.

ஒரு விதையைக் கண்டெடுத்து மண்ணில் ஊன்றுவது போன்று, இத்திரைக்கதையில் தேன்மொழியை ஷாலினி அடையாளம் காணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரங்கள் அப்பிணைப்பை இறுதிவரை சுமப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.

சீரான நகர்வு!

தமிழ்நாடு சார்பில் நீச்சல், ட்ரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஆர்த்தி, இப்படத்தில் தேன்மொழியாக நடித்துள்ளார். அதனால், நீச்சல் தொடர்பான காட்சிகளில் அவரது செயல்பாடு அபாரம். அதேநேரத்தில், இதர காட்சிகளில் ஒரேமாதிரியான பாவனையோடு வலம் வருவது கொஞ்சம் போரடிக்கிறது.

நாயகி ஷில்பா மஞ்சுநாத், இதில் ஆர்த்தியின் பயிற்சியாளராக வருகிறார். தைரியமும் தெளிவும் மிக்க பெண்ணாக, ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பவராகத் தோன்றியிருக்கிறார்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ், அவரது மனைவியாக வரும் இந்துமதி, சென்றாயன், பிரேம்குமார், ’பசங்க’ சிவகுமார் என்று படத்தில் வந்து போயிருக்கும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

வழக்கம்போல, சமுத்திரக்கனி ஒரு காட்சியில் தோன்றி ‘தன்னம்பிக்கை’ பாடம் எடுக்கிறார். மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையான மாதவி லதாவும் இடம்பெற்று, அந்தக் காட்சிக்கான நம்பகத்தன்மையையும் வீச்சையும் அதிகப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தின் இறுதியில் ஒரு ட்ரையத்லான் போட்டி காட்டப்படுகிறது. அது, உண்மையான போட்டியின்போது படம்பிடிக்கப்பட்டதாகவே உணர வைக்கிறது. காரணம், அதில் இடம்பெற்றவர்களில் பெரும்பாலானோர் உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் என்பதே!

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் ‘பளிச்’சென்று தெரியும் பிரேம்களையே வடித்துள்ளார். அது, படத்திற்கு ‘பீல்குட்’ தன்மையைப் பெற்றுத் தருகிறது.

பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பில் கதை திரையில் சீராக நகர்கிறது. பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இல்லாத இத்திரைக்கதையில், நீச்சல் போட்டி இடம்பெறுமிடம் விறுவிறுப்பூட்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை நீச்சலுடையைத் திரையில் ஆபாசமாக உணராத அளவுக்கு ஷாட்களை கோர்த்துள்ளது கதையின் நோக்கத்திற்கு நியாயம் சேர்க்கிறது.

கபிலன் வைரமுத்துவின் வசனங்கள், பல இடங்களில் தத்துவார்த்தமானதாக உள்ளன; மிகச்சில இடங்களில் யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கின்றன.

குமரன் சிவமணியின் இசையில் பாடல்கள் முதல்முறை கேட்டவுடனே நம்மை ஈர்த்துவிடுகின்றன. அதைவிட, காட்சிகளில் நிறைந்திருக்கும் உணர்ச்சிகளைச் சரியாக நமக்குக் கடத்த உதவியிருக்கிறது அவரது பின்னணி இசை.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியதோடு, இப்படத்தைத் தயாரித்திருக்கிறார் ஜேஎஸ்பி சதீஷ். அது, ட்ரையத்லான் மற்றும் நீச்சல் போட்டிகள் மீதான அவரது தனிப்பட்ட வேட்கையையே நமக்குணர்த்துகிறது.

விமர்சனத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட ‘சிங்கப்பெண்ணே’ பாடலின் அடுத்த வரியை மெய்ப்பிக்கும் விதமாக, ஆண் பாத்திரங்களின் மனமாற்றங்களையும் இதில் கொஞ்சம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது ‘ஆணினம் உன்னை வணங்குமே’ என்ற வரியை நமக்கு நினைவூட்டியிருக்கும். இயக்குனர் அந்த வாய்ப்பைத் திரையில் தவறவிட்டிருக்கிறார்.

ஆணினம் வணங்கும்!

ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ட்ரையத்லான்’ போன்று வெகுஜனங்களுக்கு அறிமுகம் இல்லாத பல்வேறு விளையாட்டுகள் நம் நாட்டில் உள்ளன. அவற்றை முழுமையாக அறிந்தாலே போதும்; களமிறங்கி வெற்றிகளைக் குவிக்கும் தருணங்கள் தானாக வாய்க்கும். அதையே ‘சிங்கப்பெண்ணே’வில் முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜேஎஸ்பி சதீஷ்.

நீச்சல் குறித்தோ, அது தொடர்பான போட்டிகள் குறித்தோ, இந்தியாவில் பெரிதாகத் திரைப்படங்கள் வெளியாகவில்லை. அந்த வகையில், அது குறித்த புரிதலை உண்டாக்கும் ஒரு கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது ‘சிங்கப்பெண்ணே’. அதனால், குழந்தைகளோடு இந்தப் படத்தை தியேட்டர்களில் தாராளமாகக் காணலாம்.

சில காட்சிகளில் ஷில்பா மஞ்சுநாத்தின் தோற்றத்தில் ‘கிளாமர்’ தெரிவதும், சில காட்சிகள் மந்தமாக நகர்வதுமே இப்படத்தின் குறிப்பிடத்தக்க பலவீனங்கள். மையப்பாத்திரமான தேன்மொழி திரும்பத் திரும்பத் தடைகளை எதிர்கொள்வதும், குறைவான எண்ணிக்கையிலான நடிகர் நடிகைகளின் இருப்பும், சில பார்வையாளர்களிடத்தில் எரிச்சலூட்ட வாய்ப்புண்டு.

அவற்றைக் கடக்கத் தயார் என்றால், இப்படம் நல்லதொரு காட்சியனுபவமாக அமையும். எளிமையான சிறு பட்ஜெட் படம் என்ற பாராட்டையும் பெறும். அந்த வகையில், இந்த ‘சிங்கப்பெண்ணே’வைத் தாராளமாக வரவேற்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

#சிங்கப்பெண்ணே_விமர்சனம் #ஏ_ஆர்_ரஹ்மான் #இயக்குனர்_ஜேஎஸ்பி_சதீஷ் #ஷில்பா_மஞ்சுநாத் #ஏ_வெங்கடேஷ் #பிரேம்குமார் #இந்துமதி #சென்றாயன் #பிரேம்குமார் #பசங்க_சிவகுமார் #சமுத்திரக்கனி #என்_கே_ஏகாம்பரம் #பிரவீன்_கே_எல்லின் #கபிலன்_வைரமுத்து #குமரன்_சிவமணி #singappenney_movie_review #director_jsp_satheesh #silpa_manjunath #a_venkatesh #premkumar #indhumathi #senrayan #premkumar #samuthrakani #kabilan #vairamuthu #kumaran_sivamani

You might also like