மீண்டும் இந்தியில் ஜோதிகா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான புகழைச் சம்பாதித்த நடிகைகள் பலருண்டு. ஆனால், அவர்களில் வெகுசிலரே தொடர்ந்து அதனைத் தக்க வைக்கும் வித்தையைத் தெரிந்தவர்கள்.

நாயகியாக நடித்து ரசிகர்களிடம் ஆரவாரமான வரவேற்பைப் பெற்று வந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் திருமணமாகி அல்லது வேறு பணிகள் காரணமாகத் திரையுலகை விட்டு விலகுவதே பெரும்பாலானவர்களில் வழக்கம்.

சில நடிகைகள் சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வருவார்கள். அவர்களிலும் மிகச்சிலரே நாயகியாக அல்லது அதற்கு இணையான பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.

தனக்கான முக்கியத்துவம் திரையில் எவ்வாறு தெரிய வரும் என்று கணிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே அதனைச் செயல்படுத்திக் காட்ட முடியும். அதனை நன்கறிந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா.

நடிப்பின் சிறப்பு!

தமிழில் ஜோதிகா அறிமுகமான முதல் படம் ‘வாலி’. அதற்கு முன்னரே ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்திருந்தாலும், அதுவே அவர் நடித்து முதலில் வெளியானது.

‘வாலி’யில் சோனா எனும் பாத்திரத்தில் அவர் தோன்றியிருந்தார்.

அதன் கதைப்படி, ஒரு பெண்ணைக் காதலித்து தோல்வியைச் சந்தித்த ஆடவனையே தான் காதலிப்பது எனும் முடிவில் சிம்ரன் பாத்திரம் உறுதியாக நிற்கும்.

அதனை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, சோனா எனும் பெண்ணைத் தான் காதலித்ததாக அவரிடம் அஜித் பாத்திரம் கதை கட்டுவதாகப் படத்தில் காட்டப்படும்.

சொல்லப்போனால், ‘சோனா’ பாடலையும் சேர்த்து அதில் ஜோதிகா நடித்த காட்சிகள் ஐந்தாறு நிமிடங்கள் கூட இருக்காது.

ஆனால், அப்படம் வெற்றி பெற்றபோது அவர் மீதும் ரசிகர்களின் கவனம் குவிந்தது. காரணம், அந்த அளவுக்கு அவரது அழகு அவர்களைக் கவர்ந்திழுத்தது.

‘மாடலிங்’ துறைக்கு வேண்டுமானால் அழகும் இளமையும் மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால், சினிமாவில் வெற்றிகரமாகத் திகழக் கடின உழைப்பும், காத்திருக்கும் பொறுமையும், சிறப்பான நடிப்பும் அவசியம்.

அதனை உணர்ந்தே, வாலிக்குப் பிறகு தான் நடிக்கும் படங்களின் கதையும், அதில் தனது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா.

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திலேயே, நடிப்பில் அவரது ஈடுபாடு எப்படிப்பட்டது என்று தெரிய வந்தது.

2000-வது ஆண்டில் ஜோதிகா நடிப்பில் முகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி, சினேகிதியே என்று ஆறு படங்கள் வந்தன. வெறுமனே நாயகனைக் காதலித்து டூயட் பாடிவிட்டு டாட்டா காட்டும் வேடங்களை இப்படங்களில் அவர் ஏற்கவில்லை.

‘முகவரி’யில் தனது காதலன் திரையிசையில் சாதிக்க வேண்டுமென்று விரும்பும் ஒரு இளம்பெண், ‘குஷி’யில் ஈகோ அதிகமுள்ள ஒரு கல்லூரி மாணவி, ‘ரிதம்’மில் புதிதாகத் திருமணமான பெண், ‘தெனாலி’யில் ஒரு மனநல மருத்துவரின் தங்கை, ‘சினேகிதியே’வில் கல்லூரியே உலகம் என்றிருக்கும் ஒரு பதின்ம வயதுப் பெண், ‘உயிரிலே கலந்தது’ படத்தில் காதலனை உயிரென நேசிக்கும் காதலி என்று ‘வெரைட்டி’ காட்டியிருந்தார்.

அந்தப் படங்களில் அவரது தோற்றத்திலோ, பாத்திர குணாதிசயங்களிலோ பெரிதாக வித்தியாசம் இல்லாத போதும், தனது நடிப்பினால் அதனை வேறுபடுத்திக் காட்டியிருந்தார் ஜோதிகா.

அந்தப் படங்களில் அவரது பாவனைகள் ‘ஓவர் ஆக்டிங்’ என்று சிலரால் கிண்டலடிக்கப்பட்டன.

கண்களை உருட்டுவதும், தலையை இடம் வலமாகத் திருப்புவதுமாக இருந்த அவரது உடல்மொழி அதற்குக் காரணமாக இருந்தது. ஆனால், தமிழ் மொழி புரியாத காரணத்தால் திரையில் தனது இருப்பு அழுத்தம் திருத்தமாக அமைய வேண்டுமென்று அவ்வாறு நடித்ததாகப் பின்னாட்களில் தான் தந்த பேட்டிகளில் அதற்கு விளக்கம் அளித்தார் ஜோதிகா.

நினைவில் நிற்கும் படங்கள்!

வாலி, குஷி, சினேகிதி வரிசையில் ‘டும் டும் டும்’மில் வரும் கங்கா, ‘பூவெல்லாம் உன் வாசம்’மில் வரும் செல்லா, ‘12பி’யில் வரும் ஜோதிகா, ‘தூள்’ படத்தின் ஈஸ்வரி, ‘அருள்’ படத்தின் கண்மணி, ‘மாயாவி’யில் வரும் ஜோதிகா, ‘சந்திரமுகி’யில் வரும் கங்கா, ‘வேட்டையாடு விளையாடு’வில் ஆராதனா, ‘சில்லுனு ஒரு காதல்’ குந்தவை, ‘மொழி’யில் அர்ச்சனா போன்ற பாத்திரங்கள் என்றென்றும் நம் நினைவில் ஜோதிகாவை இருத்தி வைக்கும்.

ஜோதிகா நடித்த மீதமுள்ள படங்களையும் உற்றுக் கவனித்தால், அவரது பாத்திரங்கள் வழக்கமான நாயகிகளைத் திரையில் காட்டாதது தெரிய வரும். அதுவே, அவரது சிறப்பு.

சூர்யா உடனான திருமணத்திற்குப் பிறகு, 2015-ல் மீண்டும் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார் ஜோதிகா. கிட்டத்தட்ட 9 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் அவரது நடிப்பில் வெளியான படம் அது. அப்படத்தில் அவரது பாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் இரண்டாண்டுகள் கழித்து பிரம்மாவின் இயக்கத்தில் ‘மகளிர் மட்டும்’ வெளியானது. இதில் மாமியாரையும் அவரது தோழிகளையும் ஒரு சாகசப் பயணத்திற்குத் தயார்படுத்தும் பாத்திரம் அவருடையது.

மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் கேங்க்ஸ்டராக இருக்கும் கணவனோடு முரண்பட்ட, அதேநேரத்தில் அவரது குடும்பத்தினரை அரவணைத்துச் செல்ல முற்படுகிற ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் பாத்திரத்தை ஏற்றிருந்தார் ஜோதிகா.

‘காற்றின் மொழி’யில் திடீரென்று ஆர்ஜே அவதாரம் எடுக்கும் ஒரு குடும்பப் பெண்மணியைப் பிரதிபலித்திருந்தார்.

ராட்சசி, பொன்மகள் வந்தாள், ஜாக்பாட் படங்களில் ஜோதிகாவின் பாத்திரத்தில் அதுவரை திரையில் நாயகனைக் காட்டப் பயன்படுத்தப்பட்ட கம்பீரத்தை நம்மால் உணர முடியும்.

கடந்த ஆண்டு வெளியான ‘காதல் – தி கோர்’ படத்தில் ஜோதிகா ஏற்ற ஓமனா பாத்திரம், அக்கதையின் ஆணி வேரைப் போன்றது. கணவரின் தன்பாலின ஈர்ப்பை அறிந்தும் அதனை வெளியுலகத்துக்குத் தெரிவிப்பதா வேண்டாமா என்று தவிக்கும் ஒரு பெண்ணின் மன வேதனையைச் சொன்னது.

மேற்சொன்ன படங்களில் இளம்பெண், நடுத்தர வயதுப் பெண் என்ற வகைப்பாட்டுக்குள் அவரது பாத்திரங்களை அடக்கிவிட முடியும்; ஆனால், அப்படங்களின் கதையும் காட்சிகளும் அவரது நடிப்பில் வேறுபாட்டைப் புகுத்தி வேறுவிதமான தாக்கத்தை உருவாக்கும்.

அந்த வகையில், விரைவில் வெளியாகவிருக்கும் ‘சைத்தான்’ படத்திலும் ஜோதிகாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.

மீண்டும் இந்தியில்..!

1998-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘டோலி சஜா கே ரஹ்னா’ படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் ஜோதிகா.

பிரியதர்ஷன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம், ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் ரீமேக் ஆக அமைந்தது. அக்காலகட்டத்தில் அது பெரிய வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து தமிழில் பெருவெற்றி பெற்ற படங்களில் இடம்பிடித்த ஜோதிகா, ‘நாகராகவு’ மூலமாகக் கன்னடத்திலும் ‘தாகூர்’ வழியே தெலுங்கிலும், சினேகிதியேவின் இன்னொரு பதிப்பான ‘ராக்கிளிபாட்டு’ மூலமாக மலையாளத்திலும் அறிமுகம் ஆனார்.

அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 26 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் ஜோதிகா இந்தியில் நடித்துள்ளார் ஜோதிகா.

‘சைத்தான்’ படத்தில் ஜோதிகாவின் கணவராக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பதின்ம வயதில் இருக்கும் சிறுமி, சிறுவனின் பெற்றோராக அவர்கள் அப்படத்தில் தோன்றியுள்ளனர்.

அவர்களது குடும்பத்தைச் சிதைக்க முயல்பவராக, மாந்திரீகம் மூலம் மனிதர்களை வசியப்படுத்துபவராக மாதவன் நடித்துள்ளார்.

தனது அறிமுகப்படத்தில் பெறாத கவனத்தை இதில் ஜோதிகா நிச்சயம் பெறுவார் என்று சொல்லலாம். ஏனென்றால், எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் திரையில் தனக்கான முக்கியத்துவத்தை எப்படி உணர்த்துவது என்ற வித்தையைத் தனது கடந்தகாலத் திரைப்படங்களில் அவர் நிரூபித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், தனது தாய்மொழியில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்ற ஆர்வமும் அவரிடம் அபரிமிதமாக இருக்கும்.

சைத்தானுக்குப் பிறகு ஸ்ரீ, டப்பாகார்டெல் என்று மேலும் இரண்டு இந்திப் படங்களில் நடிக்கிறார் ஜோதிகா.

நிச்சயமாக, அவற்றில் அவரது பாத்திரங்கள் புத்துணர்வு தருவதாகவும், இதுவரை அவர் நடித்தவற்றில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்குமென்று நம்பலாம்.

ஓடிடி கலாசாரம் பரவலாகிவிட்ட சூழலில் நிச்சயமாக ஜோதிகா நடித்த இந்திப் படங்கள் தமிழிலும் நாம் காணக் கிடைக்கும்.

அப்போது, அவர் தமிழில் இருந்து இந்தித் திரையுலகுக்கு மீண்டும் சென்றதற்கான காரணங்கள் தெரிய வரும். கூடவே, அவரது நடிப்பின் சிறப்பை மேலும் பல ரசிகர்கள் கண்டு சிலாகிப்பதையும் நம்மால் கண்டுணர முடியும்.

– உதய் பாடகலிங்கம்

You might also like