தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேவையான சில டிப்ஸ்!

பள்ளியில் பயிலும்போது மாணவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக நினைப்பவைகளில் ஒன்று தேர்வு எழுதுவது. அதுவும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் கூடுதல் பயத்தைத் தருவதாக உணர்கிறார்கள்.

தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே மாணவர்களுக்குப் பயம் மற்றும் மன அழுத்தம் வந்து விடுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு, மாணாக்கர்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமே பயந்தார்கள். தேர்வுக்கு பயப்படவில்லை.

ஆனால், அவர்களும் படித்தார்கள். நல்ல நிலைமையில் முன்னேறினார்கள்.  கல்வியோடு அனுபவ அறிவும், பொதுஅறிவும் பெற்று தங்கள் வாழ்க்கையை அதிக சதவீதத்தினர் சிறப்பாக செதுக்கிக்கொண்டார்கள்.

தற்போது பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளதால் மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வந்திருக்கும்.

வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஜுரம் வரத் தொடங்கியுள்ளது. ஆனால், அதற்கு முன்பே 12 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வந்துவிட்டது.

இந்தத் தேர்வுக்காக ஆண்டு முழுவதும் விழுந்து விழுந்து படித்துவிட்டு, கடைசி நேரத்தில் தேர்வுக்கு முந்தைய நாட்களில் வரும் பதற்றம், நன்றாகப் படிக்கும் மாணவர்களையே அச்சத்திற்குள்ளாக்கி விடுகிறது.

ஆனால் அந்த பயம், பதற்றம் இல்லாமல் இருந்தாலே தேர்வில் வெற்றிபெறலாம் என்பதே கல்வியாளர்களின் கருத்து.

இப்போது நடந்து கொண்டிருக்கும் +2 தேர்வுகள் மற்றும் நடைப்பெறவிருக்கும் 10 ஆவது தேர்வுகளில் எந்த மனப்பான்மையோடு தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்பதற்கான சிலக் குறிப்புகளைப் பார்க்கலாம்.

மாணாக்கர்களுக்கான குறிப்புகள்:

* யார் என்ன சொன்னாலும் நம்மால் முடியும், நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை முதலில் உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் அட்டவணையிட்டு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்குச் சிரமமாகத் தோன்றும் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

* படிக்கும் போது அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இடை இடையே எழுந்து போவதால் கவனம் சிதற வாய்ப்புண்டு.

மணிக் கணக்கில் தொடர்ந்து படிக்காமல் இடையில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. (நடக்கலாம், ஓடலாம்) இதனால் இரத்த ஓட்டம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

* சின்னதான ஒரு குளியலால் மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டு மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும்.

* படிப்பதற்கு உகந்த நேரம் அதிகாலை நேரம். உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். படிப்பது ஆழ் மனதில் நன்கு பதியும்.

* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ  கூடாது. தேர்வுகளில் பெறப்படும்  மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும் சரியான முறையில் திட்டமிட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

* ஒவ்வொரு பாடங்கள் படித்து முடித்ததும் அந்தப் பாடத்தில் உள்ள முக்கியக் குறிப்புகளை மட்டும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். பிறகு நேரம் கிடைக்கும் போது மனதில் அசைப்போட்டு பார்க்கலாம். எழுதிப் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு கணக்குப் பாடம் என்றால் ஃபார்முலாக்கள், அறிவியல் என்றால் வரைபடங்கள், வேதிப் பொருள்களின் பெயர்கள், குறியீடுகள் வரலாறு என்றால் ஆண்டுகள் போன்றவற்றை அவ்வப்போது மனதில் அசைப்போடலாம்.

* குரூப் ஸ்டடி செய்வது நல்லது. நண்பர்களுடன் இணைந்து படிக்கும்போது சந்தேகங்கள் விலகும். (நண்பர்கள் கூட்டமாகச் சேர்ந்து நேரத்தை வீணாக்காமல் இருப்பது முக்கியம்)

* கடினமான உணவுகள் தேர்வுக்குத் தயாராகும் போதும், தேர்வு நேரத்திலும் கண்டிப்பாக எடுத்துக்கக் கூடாது. கடினமான உணவை எடுக்கும்போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும்.

ஹோட்டல் உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஈடுபாடுகள் இருந்தாலும் தேர்வு நேரத்தில் கட்டாயம் இதைத் தவிர்க்க வேண்டும்.

* இரவு முழுவதும் கண்விழித்து படிக்கவே கூடாது. சிரமப்பட்டு படித்தாலும் மூளை சோர்வுற்றிருக்கும். உடல் ஆரோக்கியமும் பாதிக்கும்.

அதிக படிப்பு, குறைந்த நேரத்தூக்கம், போதிய சத்தின்மை இவை அனைத்தும் சேர்ந்து ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தித் தேர்வு பயத்தை அளித்து விடும்.

.இவையெல்லாம் அனைவருமே எளிமையாக கடைப்பிடிக்கக் கூடிய குறிப்புகள்தான். மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயல்பாக இருங்கள். உங்கள் மனதில் இருக்கும் அமைதியே உங்களின் வெற்றிக்கான பாதையை வகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

பெற்றோர்களுக்கான குறிப்புகள்:

மாணவர்களுக்குப் பெற்றோர் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குழந்தைகளுடன் அமர்ந்து தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என யோசித்து ஒரு திட்டத்தைப் பெற்றோர் உருவாக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறை திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்வது அவசியம்.

இது குழந்தைகளின் படிக்கும் நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் சரியாக அமைக்க உதவும். குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

தேர்வுகள் முடியும் வரை சமூக ஊடங்களின் பயன்பாட்டைக் குறைத்து குழந்தைகள்மீது கவனம் செலுத்துவது அவசியம்.

நல்ல விஷயங்களைக் கூறி குழந்தைகளை இயல்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை அறிந்து சரி செய்யுங்கள்.

தேர்வு காலத்தில் குழந்தைகள் சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறார்களா, போதுமான நேரம் உறங்குகிறார்களா எனப் பெற்றோர் கவனிக்க வேண்டும். சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் குழந்தைகளின் கவனம் சிதறும்.

குழந்தையின் திறனை நன்கு அறிந்த பெற்றோர், குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே செயல்படுவார்கள். மதிப்பெண்களை மட்டுமே வைத்துக் குழந்தைக்குக் குடைச்சல் கொடுக்கக் கூடாது.

தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

– மூ. நிவேதா, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி.

You might also like