தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு நாளை மறுநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல இடங்களுக்கும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகா், கிளாம்பாக்கம் என 6 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், பொங்கல் விடுமுறைக்குப் பின்பு 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் பேருந்துகள் மூலம் இரண்டரை லட்சம் பேரும், ரயில்கள் மூலம் ஒரு லட்சத்திற்கு அதிகமானோரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.