100-ஐத் தொடும் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ்த் திரையுலகில் தற்போது மிகவும் பிஸியாக இயங்கி வருபவர்களில் ஒருவர் என்று ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தாராளமாகக் குறிப்பிடலாம்.

அந்த அளவுக்கு நடிப்பு, இசையமைப்பு, பின்னணி பாடுவது என்று மனிதர் பிஸியாக இருக்கிறார்.

விரைவில் உருவாகவுள்ள சுதா கொங்கராவின் ‘சூர்யா 43’, இவர் இசையமைக்கும் நூறாவது திரைப்படம் என்பது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 2006ஆம் ஆண்டு ‘வெயில்’ படத்தில் தொடங்கிய இவரது திரைப்பாய்ச்சல் தற்போது பல்வேறு தளங்களிலும் பரவிப் பெருகியிருக்கிறது.

‘வெயில்’ தொடங்கி..!

‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’, ‘மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்’, ‘குச்சி குச்சி ராக்கம்மா’, ‘குலுவாலிலே’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்களில் மழலைக் குரலாகத் தொடங்கியது ஜி.வி.பிரகாஷின் திரைப் பங்களிப்பு.

ரஹ்மானின் சகோதரி ரெஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ், சிறு இடைவெளிக்குப் பிறகு ‘காதல் யானை வருகிறான் ரெமோ’ மூலமாக அடுத்த தலைமுறையின் குரலைத் திரையில் பிரதிபலித்தார்.

2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ’வெயிலோடு விளையாடி’ உட்பட அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதோடு ஒட்டிக்கொண்டன.

குறிப்பாக, ‘உருகுதே மருகுதே’ திரையிசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்றது.

முதல் படம் வெற்றி என்றபோதும், அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றவில்லை.

முக்கியமாக, வழக்கமான கமர்ஷியல் படங்களை அவர் ஏற்கவில்லை அல்லது அப்படிப்பட்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வரவில்லை.

அதன் விளைவாக ஓரம்போ, கிரீடம், பொல்லாதவன், வெள்ளித்திரை, காளை படங்களுக்கு இசையமைத்தார். இப்படங்கள் அனைத்திலும் மெலடி மெட்டுகள் எளிதாக ரசிகர்களை ஈர்த்தன.

முழுக்க மசாலா படமாக அமைந்த ‘காளை’யில் ‘குட்டிப்பிசாசே’ பாடல் குழந்தைகளிடத்தில் கொண்டாட்டத்தை விதைத்தது.

2008-ல் ‘குசேலன்’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்கள் பெரிய வெற்றியை ஈட்டாதபோதும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அங்காடித்தெரு’,

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ஆடுகளம்’ என்று வேறொரு உயரத்தை எட்டினார்.

அப்படங்களின் மூலமாக ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் உட்பட சில இயக்குனர்களின் ‘குட்புக்’கில் இடம்பிடித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் வெளியான படங்களில் ராஜாராணி, உதயம் என்ஹெச்4, கொம்பன், காக்காமுட்டை, தெறி, அசுரன், சூரரைப் போற்று, சர்தார் உள்ளிட்ட பல படங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

கடந்த (2023) ஆண்டில் மட்டும் அநீதி, காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம், ஜப்பான், மார்க் ஆண்டனி, ருத்ரன் உட்படப் பத்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதுவே, அவர் இசையில் காட்டிவரும் தீவிர ஆர்வத்தைச் சொல்லும்.

புத்திசாலித்தனமான முடிவு!

இசையமைப்பாளராக இருக்கும்போதே நடிகராகவும் அறிமுகமாவது என்ற ஜி.வி.பிரகாஷின் முடிவு நிச்சயம் தொடக்கத்தில் அலட்சியமாகவே நோக்கப்பட்டது.

‘இது மிகப்பெரிய ரிஸ்க்’ என்று பலரால் கருதப்பட்டது. ஆனால், தனது நடிப்புக்கும் இசைக்கும் தனித்தனி பாதைகளை வகுத்துக்கொண்டார் ஜி.வி.பிரகாஷ்.

‘டார்லிங்’ தொடங்கி இந்தாண்டு வெளியான ‘அடியே’ வரை, நடிப்புலகில் தனது திறமைகளை மெதுமெதுவாக வளர்த்தெடுத்து வருகிறார்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ போன்ற படங்களின் வழியே இளைய தலைமுறையினரை ஈர்த்தாலும், அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் படங்களை ஏற்பதில்லை என்ற முடிவைச் சமீபகாலமாகச் செயல்படுத்தி வருகிறார்.

அதனாலெயே, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படங்களின் கதைகள் வேறுபட்டதாக இருப்பதைக் காண முடிகிறது.

சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சலர், ஜெயில், செல்ஃபி, அடியே படங்களில் அவரது நடிப்புக்குப் புள்ளிகள் வழங்கி அவற்றை ஒன்றிணைத்தால், அந்த கோடு மேல்நோக்கி உயர்வதைக் காண முடியும்.

அது மட்டுமல்லாமல், தான் நடிக்கிற படங்களுக்குத் தானே நடிக்க வேண்டும் என்கிற முடிவையும் ஜி.வி.பிரகாஷ் பின்பற்றுவதில்லை.

இது, சக இசையமைப்பாளர்களிடத்தில் அவருக்கு இணக்கத்தை உண்டாக்குகிறது. கூடவே, சக நாயகர்களிடம் இருந்து விலகலை உருவாக்காமல் தவிர்க்கிறது. அந்த வகையில், இம்முடிவினால் அவருக்குக் கிடைத்துவரும் பலன்கள் ஏராளம் என்று சொல்ல முடியும்.

நூறை நோக்கி..!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘இடிமுழக்கம்’, ‘13’, ‘கள்வன்’, ‘ரிபெல்’, ‘டியர்’ உட்படப் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன.

2024இல் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகவிருக்கிற ‘கேப்டன் மில்லர்’, ‘தங்கலான்’, எமர்ஜென்சி’, ‘மிஷன் சேப்டர் 1’, ‘சைரன்’, சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் படம், கின்ஸ்டன், ‘விக்ரம் 62’ போன்ற படங்களுக்கு இவரே இசையமைப்பாளர்.

தொடர்ந்து சீராகவும் சிறப்பாகவும் அவர் இயங்கி வருவதே நூறாவது படம் என்ற மகுடத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது.

இப்போதைக்கு ‘புறநானூறு’ என்று பாதித் தலைப்பிடப்பட்டுள்ள ‘சூர்யா 43’ திரைப்படம் இவர் இசையமைக்கவிருக்கும் நூறாவது படமாகும்.

இசையமைத்த படங்களில் முற்றிலுமான கமர்ஷியல் படங்களைத் தனியே பிரித்தால் மற்றனைத்தும் வெவ்வேறு வகைமை சார்ந்தவையாக இருப்பதைக் காண முடியும்.

அவற்றுக்கு ஜி.வி.பி தந்துள்ள பங்களிப்பே, இனிவரும் காலங்களில் அவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர ஊக்கத்தை வழங்கும்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யத்தக்க உழைப்பைக் கொட்டினாலும், அது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருப்பது மிக முக்கியம்.

இரு பக்கமும் ஒரேமாதிரியான வரவேற்பு கிடைக்கும் வகையில், நியாயத்தராசைக் கையிலேந்திச் செயல்படும் கலைஞர்களால் மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

அந்த வகையில், தனது சமநிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வாழ்த்துகள். 2024-ல் ஜி.வி.பிரகாஷ்100 மாபெரும் வெற்றியைப் பெறட்டும்!

– மாபா

You might also like