தமிழின் குறி சொல்லும் மரபு!

கடந்த 10.12.2023 அன்று தூத்துக்குடி அருகே கிராமக் கோவில் வழிபாட்டில், வரப்போகும் வெள்ள அபாயம் குறித்த நிமித்தமாக, காளி, “வெள்ளம் வருகுதடா, ஒரு கப்பல் செய்து வையுங்களடா” என்று கட்டியம் கூறியிருப்பது காணொளியில் வைரலாகியிருக்கிறது.

அந்த குறி சொல்லல் அடுத்து வந்த 17.12.2023 அன்று தூத்துக்குடி நகரை பெருமழை வந்து வெள்ளக்காடாக்கி பேரழிவாக்கியிருக்கிறது.

இது மாதிரியான குறிசொல்லல் நிகழ்வை நாம் சீரியசாக எண்ணி ஆவணப்படுத்தி வைக்கிறோமா?!

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞர்கள் இந்த மாதிரியான குறிசொல்லல் நிகழ்வினை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

சங்க இலக்கியங்களில் வருவது உரைப்பது குறித்து குறி சொல்லல் நிகழ்வுகள் சம்பந்தமாக ஏராளமான பதிவுகள் காணலாம்.

வேலன் வெறியாட்டு மூலம் மக்களுக்கு ஏற்படும் நோயினை அறிந்துகொள்வது, தொல்குடியினரில் விரிச்சி, கட்டு, கழங்கு, கன்னம், குறி சொல்லுதல் போன்ற சொல்லாடல்கள் உண்டு.

அசாம் பகுதிகளில் பட்டிராபா பழங்குடிகள் வழிபடும் மானசா தேவி பூசையின் போது சாமியாடிக் கொண்டே குறி சொல்லும் நிகழ்வு, கோண்டு பழங்குடிகள் தமது மூத்தோர் வழிபாட்டின்போது ஆவி உலகை தொடர்பு கொண்டு அக்காலத்து பழங்குடிகள் பேசும் தொல்மொழியில் குறி சொல்லல்,

மற்றும் அருணாசல பிரதேச மின்யோங் ஆதி பழங்குடிகள் டோன்யோ-போலோ (சூரியன் – சந்திரன்) வழிபாட்டின்போதும் யாருக்குமே புரியாத ஆதி மொழியில் குறி சொல்வதும்,

ஆந்திரா ராயலசீமா பகுதிகளில் அக்கம்மா வழிபாட்டின் போது உருமி அடித்துக் கொண்டே சாமியாடிய நிலையில் குறி சொல்வதும் இது போன்ற வெவ்வேறு விதமான குறி சொல்லல் நிகழ்வை கண்டிருக்கிறேன்.

கர்நாடகா பெல்லாரி மற்றும் ஹாவேரி பகுதிகளில் பெரும்பாலான குருபா மக்களால் வழிபடப்படும் மயிலாராலிங்கா வழிபாட்டின் போது ”காரணிகா கொரவா” வால் நிகழ்த்தப்படும் குறி சொல்லல் நிகழ்வு என்னை பகுத்தறிவை தாண்டி யோசிக்க வைத்த மிரட்டிய குறி சொல்லல் நிகழ்வு.

12 அடி உயரமுடைய இரும்புக் கம்பத்தினை தினமும் குறி சொல்லல் நிகழ்வுக்காக (மயிலாராலிங்கா கடவுள் பயன்படுத்திய வில்) அந்த கம்பத்தினை நல்ல வெளக்கெண்ணெய் கொண்டு தேய்த்து பளபளவென்று வைத்திருப்பார்கள்.

இரும்புக் கம்பத்தில் கையை வைத்தவுடன் சருக்கென கையை வழுக்கும். குறி சொல்பவர் இந்த நிகழ்வுக்காக 11 நாள் சுத்தமான விரதம் இருப்பர். தண்ணீரை மட்டுமே அருந்துவர். கொலப்பசியில் இருப்பார்கள்.

அவர் வயது சுமார் 80 க்கு மேல் உடைய முதியவர். விரதத்தால் சுருண்டு படுத்துக்கிடப்பதை பார்த்தேன்.

குறி சொல்லல் நிகழ்வுக்காக அந்த மைதானத்தில் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் குறி கேட்பதற்காக வந்து குழுமியிருந்தனர்.

ஐ.ஏ.எஸ். மற்றும் அமைச்சர் முதல் சாமான்யன் வரை இந்த குறி சொல்லும் நிகழ்வுக்காக மைதானத்தில் கூடியிருக்கின்றனர். ஒரு சில கணங்களில் மட்டுமே நிகழவிருக்கும் குறி சொல்லல் நிகழ்வு.

கிரிக்கெட் மைதானம் போல சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அந்த கடல் அலையென திரண்ட கூட்டத்தில் மயிலாரலிங்கா பூசாரியின் உதவியால் எனக்கு சிறப்பு ஏற்பாட்டின் பேரில் குறி சொல்லும் நிகழ்வுக்கு அருகே வசதியாக முக்கிய விருந்தினர் பட்டியலில் உட்காருவதற்கு அனுமதி வாங்கி அமர்ந்தேன்.

குறி சொல்லப் போகும் முதியவர் வருவதற்கு முன்பாகவே மயிலாராலிங்கா கோவில் பூசாரி தாரை தப்பட்டையுடன் அதிவிமரிசையாக அலங்கரிக்கப்பட்ட குதிரை சாரட் வண்டியில் வந்து இராஜ கம்பீரமாக அழைத்துவரப்படுகிறார்.

குறி சொல்லவிருக்கும் சோர்ந்துபோய்க் கிடக்கும் அந்த பெரிய முதியவரை நான்கு நபர் சேர்ந்து அலேக்காக தூக்கி வரப்பட்டு அந்த வெளக்கெண்ணையால் தேய்க்கப்பட்ட 12 அடி இரும்பு கம்பத்தின் அருகே கிடத்திவைக்கப்பட்டார்.

பின்பு பூசாரி அந்த முதியவரை ஆசீர்வதித்து நெற்றியில் மஞ்சள் பூசிவிட்டு அவர் இருக்கையில் அமர்ந்து விடுகிறார்.

மிகச் சோர்வுற்று படுத்த நிலையில் கிடக்கும் குறி சொல்லப் போகும் அந்த காரணிகா கொரவா திடீரென ஒரு ஆவேசமான குரல் ”சடேல்” (அமைதி) என்று அவர் கூறிய வார்த்தை வானைப் பிளந்து ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஒரு சில விநாடிகளுக்குள் முழுமையாக தன் கவனத்திற்கு திருப்புகிறார்.

அந்த மைதானம் முழுமையும் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களினை ஒரு சில விநாடிகளுக்குள் முழுமையாக நிசப்தமாக்கி விட்டது.

பறவைகள் கூட அங்கும் இங்கும் சிறகடிப்பதுகூட ஒரு அமைதியான முறையில் அந்த நேரத்தில் செல்வதை காணமுடிந்தது.

ஒருசில கணங்களில் திடீரென அவருக்கு ஆவேசம் வந்தது. இமைக்கும் நேரத் துளிகளில் வெளக்கெண்ணெயால் தேய்க்கப்பட்ட அந்த வழுக்கும் தன்மையுள்ள வழவழப்பான 12 அடி இரும்புக் கம்பத்தில் தடதடவென மேல் ஏறினார்.

பிறகு ஒரு சுற்று சுற்றி ஒரு திசையை நோக்கி ஒரு சில நிமிடங்கள் மவுனித்து, பின்பு ஒரு சில வரியில் குறி சொல்லிவிட்டு மேலிருந்து அப்படியே மல்லாக்க, அவர் கீழே விழுந்தார்.

இந்த ஒரு சில கணங்களில் நிகழும் குறிசொல்லல் நிகழ்வுக்காக அந்த ஐந்து இலட்சம் மக்கள் கூடி அந்த குறி சொல்லலை அவரவர்களுக்கு தகுந்தமாதிரி விளக்கப்படுத்தி கொள்கின்றனர்.

இந்த குறி சொல்லல் நிகழ்வை நான் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு நிலவு நாளில் நேரில் கண்டவன்.

அவர் சொல்லிய குறி இந்த வார்த்தை மட்டுமே “தும்பிட கொடக்கே குண்டு படிட்டிலே பராக்” இதன் அர்த்தம் முழுமையான பானைத் தண்ணீர் தோட்டா குண்டுவால் வெடிபட்டு உடைந்துவிடும் என்பது.

அரசியல்வாதிகள் அவர்களுக்குத் தகுந்தவாறு இந்த குறி சொல்லலை புரிந்து கொள்வர். சாமான்யர்கள் அவர்களுக்குத் தகுந்தவாறு புரிந்து கொள்வர்.

இது வருடத்திற்கான பலன். என்னைப் பொறுத்தவரை 2004 டிசம்பர் இறுதியில் கடல் கொந்தளித்து சுனாமி வந்த நிகழ்வினை இந்த குறிசொல்லலுடன் புரிந்துகொண்டேன்.

வருடந்தோறும் காரணிகா கொரவா குறிப்பிடும் குறிசொல்லல் நிகழ்வினை சுமார் 120 வருடங்களுக்கான குறி சொல்லலை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இந்த குறி சொல்லல் நிகழ்வு சுமார் 13 ம் நூற்றாண்டு முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பகுத்தறிவை தாண்டி என்னை அதிசயிக்க வைத்த ஆச்சரியப்படுத்திய குறி சொல்லல் நிகழ்வு.

இந்த குறி சொல்லல் நிகழ்வின் பண்பாட்டு அடையாளம் என்னவெனில் பூர்வீக குடிகளுக்கும், வந்தேறிகளுக்கும் இடையே பூர்வ காலத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கும் சமாதானத்திற்கும் இடையே பிரதிபலிப்பதே.

  • ரெங்கையா முருகன்
You might also like