– முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் தடைபட்டது.
நெல்லை, தூத்துக்குடி மக்கள் இரண்டு நாள்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் குடிநீர், உணவின்றி தத்தளித்தனர். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் சேதடைந்தது.
இந்நிலையில் தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சர் மு.கஸ்டாலின் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். பின்னர் நெல்லை மாவட்டத்திற்கு சென்ற அவர் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் வெள்ள பாதிப்பு குறித்துப் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டங்களில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றிய அரசு இதுவரை கடும் பேரிடராக அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு ஒன்றிய அரசு அளித்தது, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய தவணை தொகை தானே தவிர, கூடுதல் அல்லது நிவாரண நிதியல்ல. வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” எனக் கூறினார்.