மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு.

“பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார்.

சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது அந்த வீடு. ஒண்டிக் குடித்தனங்கள் நிறைந்த வீட்டின் மாடியில் வாழ்ந்திருக்கிறார் வள்ளலாரான இராமலிங்க அடிகள்.

உள்ளே போனதும் எளிமையான ஹால். ஓரத்தில் வெளிச்சம் அணுகாத ஓா் அறை. அதில் விளக்கு ஒளிர்கிறது.

வள்ளலாா் 32 ஆண்டுகள் வரை தங்கியிருந்த அறை- காலம் ஏற்படுத்திய சிலச் சில மாற்றங்களுடன் அப்படியே இருக்கிறது.

‘கருணையே என் உயிர்’ ‘மாமிசம் உண்ணுபவர் ஈசனே ஆனாலும் நீசனே…’ என்கிற வாசகங்கள் சுவரில் தென்படுகின்றன.

இப்போதும் இங்கு பக்தர்கள் கூடுகிறார்கள். மாதத்திற்கு இருமுறை பூஜைகள் நடக்கின்றன. சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.

வள்ளலாருக்குப் பிறகு அவர் வாழ்ந்த வீட்டை அவரின் நினைவுகளோடு பராமரித்து வருகிறது- வள்ளலாருக்குப் பிறகு அந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்றாவது தலைமுறை.

சிதம்பரத்திற்கு அருகே வடலூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சிறு கிராமம் மருதூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமையா.

இவருக்கு 5 மனைவிகள். இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் ஆறாவதாக சின்னம்மையுடன் திருமணம் நடந்தது.

அவருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தாவது குழந்தை ராமலிங்கம். அவருக்கு இரண்டு வயதாகும்போது அவருடைய அப்பா இறந்ததும், அம்மாவுடன் ராமலிங்கத்தின் குடும்பம் சென்னைக்கு வந்தது.

பொன்னேரிக்கு முதலில் வந்து அங்கிருந்து பிறகு ஏழுகிணறு பகுதியில் குடியேறியது.

ராமலிங்கத்தின் மூத்த அண்ணன் சபாபதி மீது குடும்ப பொறுப்பேறியது. தமிழைச் சிறப்பாகக் கற்ற அவர் புராண சொற்பொழிவுக்குச் சென்று கொண்டிருந்தார்.

முறையான கல்வியில் ராமலிங்கத்திற்கு பிடிப்பில்லை. ஆன்மீகத்தை நாடியது அவருடைய மனம்.

ஒரு சமயம் அண்ணன் ஆற்றவேண்டிய சொற்பொழிவுக்கு அவருக்கு பதிலாக, போய் திருஞானசம்பந்தரின் இரண்டு அடிகளை வைத்து சொற்பொழிவாற்றினார்.

அருவி கொட்டுவது போன்ற சொற்பெருக்கு. கேட்டவர்களுக்கு வியப்பு. தங்கியிருந்த வீட்டிலேயே அவருக்கு அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தியானம் அவருடைய சிந்தனையை மாற்றியது.

‘எம்மதமும் சம்மதம்’, ‘எவ்வுயிரும் ஓருயிர்’ என்பது மனதில் படிந்து போனது. குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக தனக்கோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்தபோதும் இல்லறத்தில் இருந்து தனித்தே இருந்தார்.

வெள்ளை உடையை அவருடையத் தோற்றமாகிப் போய் ‘வள்ளலார்’ என்ற அடைமொழி அவரை வந்தடைந்தது. பலர் அவரைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
சென்னையிலிருந்த சில பழக்கங்கள், கந்துவட்டி கொடுமை, எல்லாம் அவர் புண்படுத்தின. தல யாத்திரைக்கு கிளம்பினார். தில்லை நடராஜனை வழிபட்டார்.

புதுவை, சீர்காழி, திருவாரூர், திருப்பத்தூர் என்று பல இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

கூட்டம் கூடியது. சோதி வடி ஒளி வழிபாட்டைப் பிரச்சாரம் செய்தார். ‘அறிவொன்றே தெய்வம்’ என்றார்.

திருநீரை கூட அருகில் இருப்பவர்கள் மூலமேக் கொடுத்தார். அருட்பாக்களை இயற்றிப் பாடினார். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஆறு திருமறைகளாக வெளிவந்தன.

உருவ வழிபாட்டுக்கு எதிராக ‘ஜோதியேக் கடவுள்’ என்கிற வகையில் வள்ளலார் செய்த பிரச்சாரம், இந்து மதவாதிகளுக்கு உறுத்தியது.

இலங்கையைச் சேர்ந்த சைவ சித்தாந்தவாதியான ஆறுமுக நாவலரால் வள்ளலார் வலியுறுத்திய சமரச சன்மார்க்கத்துடன் உடன்பட முடியவில்லை. ‘அருட்பா’வை மறுத்து ‘மருட்பா’ என்று எழுதினார்.

கடலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வள்ளலார் நீதிமன்றத்தில் ஆஜரானதும் தள்ளுபடி ஆனது வழக்கு.

1867-ல் அன்பு, அருள், சமரசம், உயிர் இரக்கம் என்கிற நான்கையும் வலியுறுத்தி சமரச சன்மார்க்க சங்கம் துவக்கப்பட்டது.

வடலூரில் அன்னதானத்திற்காகவே தருமசாலை உதயமானது. அப்போது அவருக்கு வயது 44. இதைத்தொடர்ந்து 1872 சத்திய ஞான சபையைத் தொடக்கினார் வள்ளலார்.

சமூகத்தில் தீண்டாமை தீவிரப்பட்டிருந்தக் காலத்தில் அந்தப் பாசியை விலக்கி ‘சாதிகளில் உயா்தோா் தாழ்ந்தோா் இல்லை’ என்று உணர்த்தி அவருடைய பேச்சும், ‘மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது, வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது’ என பாடியதும் பல மதவாதிகளை முகம் சுளிக்க வைத்தது.

இருந்தும் அவருடைய அருட்பெருஞ் ஜோதி தரிசனத்திற்கு ஆதரவு பெருகியது. மஞ்சளும், வெண்மையும் கலந்த கொடியுடன் தமிழகம் முழுக்க சன்மார்க்க சங்கத்தின் கிளைகள் பரவின.

‘சன்மார்க்க விவேக விருத்தி’ இதழை நடத்தினார். திருக்குறளுக்கு விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பல தமிழ் நூல்களைச் சரளமான நடையில் எழுதியுள்ள வள்ளலாரின் நூல்கள், 1851-லிருந்து அடுத்தடுத்து அச்சேறி இருக்கின்றன.

வாழ்க்கைக்கானத் திட்டவட்டமான நியதிகளை வரையறுத்துச் சொன்ன வள்ளலாா் துவக்கிய சத்திய சன்மார்க்க சங்கத்தில், அவர் காலத்திலேயே முறைகேடுகள் நடந்தன. பூசல்கள் முற்றின.

மனவேதனையுடன் ஞான சபையை மூடிவிட்டார். மேட்டுக்குப்பத்தில் அவா் குடியிருந்த வீட்டிலிருந்து எப்போதாவது வெளியே வந்து பிரசங்கித்த அவர், தவிப்பு நிரம்பியபடி சொன்னார் “கடை விரித்தோம், கொள்வாரில்லை.”

தன் காலத்திலேயே தான் உருவாக்கிய சங்கத்தின் உருக்குலைவைப் பார்க்க முடியாமல் மூன்று மாதங்கள் மவுன விரதம் இருந்தார்.

“திறந்து பார்க்கக் கூடாது” என்று கட்டளை இட்டபடி மேட்டுக்குப்பத்து வீட்டிற்குள் 1874 தை மாதம் வெள்ளி அன்று உள்ளே தாழிட்டுக் கொண்டவர்தான்.

அதன் பிறகு வெளியே வரவில்லை. தாசில்தார் உதவியுடன் அப்போதைய மாவட்ட கலெக்டர் சில மாதங்களுக்குப் பிறகு கதவைத் திறந்து பார்த்தபோது, ‘உள்ளே யாரும் இல்லை’ என்று செய்திகள் பரவின.

இன்று வரை அவர் மறைந்த விதம் குறித்து விதவிதமான சந்தேகங்கள் புகைந்தபடி இருக்கின்றன.

அந்த மறைந்த இடத்தில் இப்போதும் சுடா் விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது, அவா் கடவுளாகக் கண்ட ஜோதியைப் பரப்பிய விளக்கு.

அவருடைய கட்டளைகள் இன்றும் காற்றில் பரவி எதிரொலிக்கின்றன.

“பசித்திரு… தனித்திரு… விழித்திரு…”

You might also like