எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் முனியாண்டி!

ட்ரும்ம்… ட்ரும்ம் என்று – அதிர்கிற உறுமியைக் கேட்டிருக்கிறீர்களா?

‘திடும்…. திடும்…’ சலங்கைச் சத்தம் மொய்க்க காதில் விழும் பறைச் சத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா?

‘ல்லவ்…ல் லல்’ என்று பெண்கள் நாக்கைச் சுழற்றி வரும் குலவைச் சத்தம்.

‘யேய்….ய்…’ பல் நறநறப்புடன் சாமியாடுகிற போது கண்கள் விரிய வரும் ஆங்காரம்.

எல்லாவற்றையும் பார்க்கலாம் இந்தக் கோவில்களில். ஆனால் கிராமத்து எளிமையை பிரதிபலிக்கின்ற கோவில்கள்.

வான் நோக்கி தலை உயர்த்தும் கோபுரங்கள் இல்லை; நுணுக்கமான கதைச் சிற்பங்களில்லை. யாளிகள் அணிவகுக்கும் பிரகாரங்களில்லை; உள்ளார்ந்த இருளில் கை குவிக்கும் கர்ப்பக் கிரஹச்சிலைகள் இல்லை.

கிராமத்து மக்களிடம் இருக்கிற எல்லாக் குணங்களுமே இந்தக் கோவில்களில் எதிரொலிக்கும்.

சில தெய்வங்கள் காற்றையும், வெயிலையும், மழையையும் அனுபவித்தபடி திறந்த வெளியில் உட்கார்ந்திருக்கும்.

சில உக்கிரத்துடன் அரிவாள் ஏந்தி பிரமாண்டமாய்க் கிராமத்து எல்லையோரம் காவலுக்கு நிற்கும்.

சில முன்னங்காலை அந்தரத்தில் உயர்த்திய குதிரையின்மேல் ஆக்ரோஷம் காட்டும்; வயல்வெளியில் லேசான சிவப்புச் சேலை உடுத்தியபடி பார்ப்பவர் மனதுக்கேற்றபடி முகபாவங்கள் காட்டும்.

கிராமத்து ஏழைபாழைகளின் தாங்கமுடியாத புலம்பல்களை காதில் வாங்கி அவர்களது ஏச்சுகளை, கோபங்களைச் செரித்துக் கொள்ளும்.

ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிற இந்த நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பின்னால் சத்தானபடி எத்தனை கதைகள்? வீரியத்துடன் எவ்வளவு அனுபவங்கள்?

பெரிய அளவில் ஆச்சாரங்களை அனுஷ்டிக்காத இந்தத் தெய்வங்களின் தோற்றம்; கையில் வைத்திருக்கின்ற அரிவாள், உடுக்கு, மாதிரியான அம்சங்கள்; படைக்கப்படுகிற வினோதமான படையல்கள்; உயிர் பலிகள், ரத்தம் வழியும் பலி பீடங்கள், சாமியாட்டங்கள்; தீ மிதிகள்.

அனைத்தும் வித்தியாசமாக இருந்தாலும் இவை இந்த மண்ணில் முளைத்த சாமிகள்.

கிராமத்து வெயிலில் விறுவிறுக்க கதிரைச் சுமந்து வருபவனின் வியர்வையை, அவனது புழுதி படர்ந்த நம்பிக்கையை இந்தச் சாமி முகங்களிடம் பார்க்க முடியும்.

முதலில் நாம் பார்க்கப் போவது அருள்மிகு முனியாண்டி.

”ரொம்பவும் ‘துடி’யான சாமி…” என்கிறார்கள் பக்தர்கள் ஒருவித அடக்கத்துடன்.

ஓங்கின கை; தடிமனான மீசை; ஆக்ரோஷமான விழிகள்; வயிற்றைத் தொடும் சடைமுடி; கைகளில் திரிசூலமும், தண்டாயுதமும்; எலுமிச்சம்பழ மாலை என்று ‘துடி’யாகத் தானிருக்கிறார் முனியாண்டி.

ஜல்லிக்கட்டுக்குப் பேர் போன அலங்காநல்லூரில் ஊருக்குள் நுழைகிற இடத்தில் இருக்கிறது இந்தக் கோவில்.

சற்று வயதான அரசமரம், அதற்கடியில் திறந்த வெளியில்சாமி; மேலே கூம்பு வடிவில் தகரக்கூரை.

சுற்றிலும் தென்னைமரங்கள்; இன்னொரு புறத்தில் வாய் திறந்த குதிரை மேல் அமர்ந்தபடி முனியாண்டிசாமியின் சிலை; செம்மண் வரிபோட்ட சின்ன சுற்றுச்சுவர்.

இப்படிக் காவல் தெய்வமாக நிற்கிற முனியாண்டிக்குப் பின்னால் ஒரு துடிப்பான கதை.

அதிலும் இன்றைக்கும் வெளிநாட்டு டூரிஸ்ட்களைக் கவர்ந்திழுக்கிறபடி நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு மூலகாரணமே இந்த முனியாண்டி சாமிதான் என்பது தெரியுமா?

வாங்க பார்க்கலாம்.

மலையாளத்து ராஜாவுக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் இந்த முனியாண்டி. கொஞ்சம் முரட்டு சுபாவம். அப்பா சொன்னபடி கேட்கவில்லை. மதுபானங்கள், இறைச்சியின் மீது ஒரு மோகம். தந்தை சொல்லிப் பார்த்தார். கட்டுப்படவில்லை.

பேசாமல் பிடித்துக்கட்டி மரப்பெட்டியில் வைத்து தண்ணீரில் விட்டுவிட்டார்கள். சலசலத்த நீரில் மிதந்து வந்திருக்கிறது பெட்டி.

இடையில் அந்தப் பெட்டியைப் பார்த்துத் திறந்திருக்கிறார் ஒரு முஸ்லிம். எடுத்து வளர்த்திருக்கிறார். அவரிடமும் முரண்டு பிடித்திருக்கிறார் முனியாண்டி. அவரும் திரும்ப மரப்பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார்.

பிறகு தொட்டியநாயக்கர்களிடம் போய் பெரியகுளத்துக்கு வந்திருக்கிறது பெட்டி. திறக்க முயற்சித்த போது, உள்ளேயிருந்து முனியாண்டியின் குரல்…

“அலங்கா நல்லூருக்குப் போய் அங்கே இருக்கிற திருப்பதி நாயக்கரின் காட்டில் எனக்குக் கோவில் எழுப்புங்கள். நான் உங்களைக் காப்பாற்ற வந்திருக்கிறேன்.”

அவ்வளவுதான். ஆற்றில் நகர்ந்து போய்விட்டது பெட்டி. அதற்குப் பிறகு, திருப்பதிநாயக்கர் காட்டில், ஆலமரத்தடியில் நெடுநெடுவென்று உருவாகி விட்டார் முனியாண்டி.

சுண்ணாம்பு, முட்டை கடுக்காய் எல்லாம் சேர்த்துக் குழைத்து உருவானதும் சட்டென்று கம்பீரம் கூடிவிட்டது.

நாயக்கர் சமூகத்தினர்தான் ஆரம்பத்தில் பூஜை செய்து வந்திருக்கிறார்கள். படையலும் சைவம். ஆனால், பூஜை நடத்தியவர்களுக்கு அடிக்கடி பிரச்னை; உடல் நலக்குறைவு. காரணம் பலருக்கும் புரியவில்லை.

அதே சமயம், மல்லக்கோட்டை பகுதியிலிருந்து பிழைக்க வந்திருக்கிறார்கள் தாழ்த்தி வைக்கப்பட்ட சில குடும்பங்கள். வலசை பக்கத்தில் ஆற்றங்கரையில் இருந்த பொது ஆற்றில் தண்ணீர் குடிக்கப் போயிருக்கிறது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுபெண்.

கொஞ்ச நேரத்தில் மூச்சு பேச்சில்லை. சுருட்டிவிட்டது ஆறு, அந்தப் பெண்ணின் சகோதரர்கள் சோணையும் நொண்டியும் தேடி ஆற்றில் இறங்கினார்கள்.

அவர்களையும் காணவில்லை. “நேரே அலங்காநல்லூருக்குப் போங்க” – அசரீரிக் குரல் மட்டும் வந்திருக்கிறது.

சொல்படி அலங்காநல்லூருக்கு வந்திருக்கிறார் பொற்றாமன். நல்ல பயில்வான் மாதிரியான உடம்புடன் இருந்த அவர், கோவில் பக்கம் வந்தபோது அவர்மேல் சாமிவந்துவிட்டது.

ரௌத்திரமாக ஆடியிருக்கிறார். விபூதி பூசியிருக்கிறார்கள். அடங்கவில்லை. ஒரே ஆட்டம். தற்செயலாக சாராய பாட்டிலை பக்கத்தில் கொண்டு போனதும் அதட்டலாக வாங்கி ஒரு மடக்கு. சிறிது செருமல். தலையைச் சிலுப்பிக் கொண்டு போனதும் அதட்டலாக வாங்கி மறுபடியும் ஒரே மடக்கு.

தலையைச் சிலுப்பிக் கொண்டு “இப்போதுதான் எனக்குச் சரியான குதிரை கிடைச்சிருக்கு’ என்றபடி மலையேறிவிட்டது சாமி. அன்றிலிருந்து பொற்றாமன் குடும்பத்தினர்தான் பூசாரிகள்.

ஆடு, சேவல், சாராயம், கள், இதெல்லாம் இங்கு படைக்கப்படுகிற சமாச்சாரங்கள்.

ஜல்லிக்கட்டு இதில் நுழைந்தது தனிக்கதை. முந்நூறு வருஷங்களுக்கு முன்பு அலங்காநல்லூர் பகுதி முழுக்க காலரா… நிறைய உயிர்கள் பலியாயின; சின்னஞ்சிறுசுகள் கூட… கிராமம் முழுக்க ஒரே பீதி பயம்.

முனியாண்டியிடம் வந்து தங்கள் கஷ்டத்தைக் கொட்டியிருக்கிறார்கள் ஊர் மக்கள். பூசாரி மேல் சாமி வந்து அருள்வாக்கு சொல்லியிருக்கிறார்.

“இதைத் தடுக்கணும்னா கிராமத்திலே ஜல்லிக்கட்டு நடத்துங்க. பார்க்க வர்றவங்களை நான் பலியெடுத்துக்கிடுவேன். இதற்கு எங்கிருந்தோ வர்றவனும், கடல் கடந்து வர்றவனும் கூட பலியாவான். உள்ளூர்க்காரங்க காப்பாத்தப்பட்டுறுவாங்க”

அருள்வாக்குக்குப் பிறகு “ஜல்லிக்கட்டு” துவங்கியிருக்கிறது. தை மாதம் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.

அதைப் பிடிக்க இளமைத் துள்ளலுடன் ஒரு கூட்டம், பார்க்க மொய்க்கிற பார்வையாளர்கள், மாடுகளின் திமிலைப் பற்றி அடக்க முயன்று சமயங்களில் குடல் சரிந்து பலியாகின்றன சில உயிர்கள்.

இந்த ஜல்லிக்கட்டுக்கு இப்போது வயது முந்நூறு. ஆரம்பத்தில் 30 மாடுகள் வந்த நிலை மாறி, இப்போது சுமார் 400 மாடுகள் வருகின்றன.

முனியாண்டி வாக்குப்படி, கடல் கடந்து வந்து காலரியில் பார்வையிடும் வெளிநாட்டு டூரிஸ்ட்கள். இன்றைக்கும் ஜல்லிக்கட்டுக்கு வருகிற மாடுகள் இங்கே விபூதி வைக்கப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் நுழைகின்றன.

பங்குனி மாதம், ஐந்து நாட்கள் திருவிழா. செவ்வாயிலிருந்து சனிக்கிழமை வரை கிராமமே உற்சாகப்படும்படி திருவிழா.

பொங்கல் வைக்கிறார்கள். கிடாய் வெட்டுகிறார்கள். சாராயம் படைக்கிறார்கள். அய்யனார் சிலையை மந்தையில் வைத்து ஜல்லிக்கட்டுத் திடலில் குதிரைக்கால் நாடகம் நடத்துகிறார்கள். மறுநாள் எருதுகட்டு.

மாட்டின் உடம்பில் வைக்கோல் பிரியைக் கட்டி வயலில் அவிழ்த்துவிடுவார்கள். இதற்கான வடத்தைப் பிடித்து நொண்டிச் சாமி துவக்க – ஐந்து நாட்கள் திருவிழாச் சந்தோஷத்தில் திளைக்கிறது கிராமம்.

மண்ணால் செய்யப்படுகிற முனியாண்டி பளீரென்ற கலரில் கிராமத்தைச் சுற்றிவரும்போது பரவசப்படுகிறது கூட்டம்.

கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். சாமியின் கண்ணில் தெறிக்கும் கோபத்தின் முன் சாமி வருகிறது சில பெண்களுக்கு.

“ஜாதி, மத பேதங்கள் இல்லாமல் பலரை ஒன்று சேர்க்கிறார் முனியாண்டி சாமி…” பயபக்தியுடன் சொல்கிறார் எட்டாவது தலைமுறையாக பூஜை செய்துவரும் பொற்றாமனின் வாரிசான ஜோதி முருகன் பூசாரி.

சடைமுடி தரித்த முனியாண்டி சாமிக்குப் பின்னாலிருக்கிற அரசமரத்தின் சதையில் ஆங்காங்கே ஆணிகள். அதில் மஞ்சள் வர்ணத்தில் தொங்கும் சில குழந்தைத் தொட்டில்கள்.

இன்னொரு விதத்தில் சொன்னால் இவை கிராம ஜனங்களின் எளிமையான நம்பிக்கைகள்.

– மணா

‘தமிழ் மண்ணின் சாமிகள்’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

You might also like