புதுச்சேரி : பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல்!

– எழுத்தாளர் பிரபஞ்சன்

எங்கள் ஊர் புதுச்சேரி. நீங்கள் சொல்கிற பாண்டிச்சேரி தான். புதுச்சேரி தான் சரியான பெயர். மகாகவி பாரதி எங்கள் ஊரைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

‘வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி
வந்து தழுவும் வளஞ்சாா் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை…’ (குயில்பாட்டு)

எங்கள் ஊர் கடல் அலைகள் (திரை – கடல் அலை) வேதப் பொருள்பாடுகிறதாம் இந்த ஊரில். அரவிந்தரும், பாரதியும் வேத ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தார்கள்.
அது என்ன செந்தமிழ்த் தென்புதுவை? மாபெரும் தமிழ் முன்னோடிகளான பாரதிக்கும், வா.வெ.சு.ஐயர் மற்றும் மண்டயம் சீனிவாசாச்சாரியாருக்கும் அடைக்கலம் கொடுத்த நன்றி காரணமாக இருக்கலாம். நான் அப்படி நினைக்கிறேன்.

தமிழில் முதல் சிறுகதையாகக் குளத்தங்கரை அரசமரம் கதையைத்தானே சொல்கிறோம். வா.வெ.சு.ஐயர், இதைப் புதுச்சேரியில்தான் எழுதினார்.
காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஐயர் அப்போது இருந்தார் தமிழில் முதல் புதுக்கவிதையைப் பாரதி இங்கேதான் படைத்தார்.

தமிழின் ஆதி மொழிபெயர்ப்பு என்று சொல்லத்தகும் தாகூர் சிறுகதைகளைப் பாரதி இங்கிருந்தே செய்தார். ஞானரதம், குயில்பாட்டு என்று சிகரங்கள் இங்கே எழுதப்பட்டன.

தமிழ் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளும் இங்கேதான் தன் கடைசிக் காலத்தை கழித்து அமரர் ஆனார்.

நீங்கள் தமிழ் நாட்டுக்காரர்கள். 1947-ம் ஆண்டு சுதந்திரம் கொண்டாடினீர்கள். பிரிட்டிஷ்காரன் ஏறிய கப்பல் கண்ணுக்கு மறைந்த பிறகும், எங்களை ஆண்ட பிரஞ்சுக்காரன் போவதாய்க் காணோம்.

47 தொடங்கி 54 வரை நாங்கள் எடுத்த பெரும் போராட்டம் காரணமாகவே பிரஞ்சுக்காரனை வண்டி ஏற்றினோம். இந்திய யூனியனுடன் நாங்கள் இணைந்தோம். தனி மாநிலமாகவே இருக்கிறோம்.

நேரு, நாங்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினார் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனும், பட்டேலும் விரும்பினாா்கள். ஏன்? புதுச்சேரி, “பிரஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல். அதன் தனித்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்” என்று நேரு விரும்பினார்.

நாங்கள் தமிழ் பேசும் தமிழர்கள். ஆனாலும் தமிழ் நாட்டோடு நாங்கள் இணைய மாட்டோம். நாங்கள் தனி. எங்களை இணைக்க மொரார்ஜி தேசாய் விரும்பினார். மண்ணைக் கவ்வினார்.

எங்கள் வீட்டு ஜன்னல் வழி, நீங்கள் பிரெஞ்சு நாகரீகத்தைக் காணலாம்.
சென்னை பூக்கடையில் (உலகத்திலேயே மாபெரும் அழுக்குப் பேருந்து நிலையம்) கடற்கரைச் சாலைப்பேருந்தை பிடியுங்கள். இன்றைய டிக்கெட் அநேகமாக 42 ரூபாய்கள்.

சரியாக மூன்று மூன்றரை மணி நேரத்தில் நீங்கள் புதுச்சேரிக்கு வந்து இறங்கலாம். வந்தவுடன், நோ் நேராக, கோணல் இல்லாமல் கோடு போட்டது போலக் கடற்கரைக்குப் போகும் தெருக்களைப் பார்த்து ஸ்தம்பித்து போவீர்கள்.
இது பிரெஞ்சுக்காரர்கள் உபயம். நகர அமைப்பின் பிரஞ்சு அரசாங்கம் ரொம்பக்கறார்.

அலுவலர்கள் கோடு போட்டு, நிலம் அளந்து கொடுத்தால் அதற்குப் பிறகுயாரும் அதை மீற முடியாது.

தெருவின் பக்கவாட்டு முடிவிடம், அதன் பிறகு நடைபாதை, அப்புறம் வீட்டுச் சுவர் என்ற ஒழுங்கை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ‘பிளசன்ட் டே விவகாரம்’ எல்லாம் எங்களிடம் இல்லை.

அப்புறம் சுத்தம். இதைப் பிரஞ்சுக்காரர்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம். புதுச்சேரியில் குப்பை, அழுக்கே இல்லையா என்கிறீர்களா இருக்கிறது.

உங்களைப்போல (சென்னையில் பெரும்பாலான இடங்கள்) அழுக்குக்குள்ளேயே நாங்கள் வசிக்கவில்லை. அழுக்குக்குப் பக்கத்தில் வசிக்கிறோம்.

அப்புறம், ரொம்ப சகாய விலையில் கிடைக்கும் கள், சாராயம் மற்றும் பிராந்தி, ஜின் என்கிற வஸ்துக்கள். ஒரு காலத்தில் தமிழ்நாடு உலர்ந்து கிடந்த போது, தமிழ்நாடு புதுச்சேரிக்கு வந்து ‘தாகசாந்தி’ செய்து கொண்டது.

தி.மு.கழக அரசு மதுவிலக்கை ரத்து செய்தபின், நீங்கள் சொந்த வீட்டுக் குடிமக்கள் ஆனீர்கள். ரொம்பச் சீப்பாக, கலப்பில்லாத மதுவகைகள் இன்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.

ஒரு ரிக்ஷாகாரரை அழைக்கலாம் என்று யோசிக்கிறீர்கள். அதற்குள் அவரே, உங்களை முற்றுகை இடுவாா்.

‘வாங்க மிசே’ என்பாா். முசியே (அல்லது மிஸ்டர்) என்கிற பிரஞ்ச் வார்த்தையின் மரூஉ அது. ‘பீரோவுக்கு போவனுமா?’ என்பார்.

‘பீரோ என்றால் அலுவலகம்’. ஒப்பித்தாலுக்குப் போவனுமா என்பார். ஒப்பித்தல் என்பது ஆஸ்பத்திரி.

மக்கள் சாதாரணமாக ஒருவரையொருவர், போன்மூா், போன்சுவா என்றெல்லாம் வாழ்த்திக் கொள்வார்கள். போன்மூா் – நல்ல காலை. போன் சுவா – நல்ல மாலை.
உங்கள் தமிழ் தமிழோங்கிலம் ஆனது போல, எங்கள் தமிழ், தமிழ்பிரஞ்ச் கடந்த சில பத்தாண்டுகளில் இது குறைந்து வருகிறது.

நல்ல வேளை ‘த்தா… சினிமாக்…போலாம்னா…த்தா.. அம்மாக்காாி காசு இல்லேங்றா…த்தா..’ என்பது போன்ற “த்தமிழ்” எங்கள் ஊருக்குள் இன்னும் வந்து சேரவில்லை.

வேலை நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ, புதுச்சேரியில் சில மாதங்கள் தங்க நேர்கிற வெளியூர்க்காரர்கள், திரும்பித் தங்கள் தாய்த் தேசத்துக்குப் போவது இல்லை.

இங்கே தங்கி விடுவார்கள். காரணம் ‘ஊர் சுத்தமாக இருக்கிறது. மனுஷர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். கிராமாந்தர அமைதியும், நகரத்து சௌகரியங்களும் கிடைக்கின்றன. மருத்துவ வசதி, தண்ணீர் வசதி ஆகியவை பிரமாதம்…’

தண்ணீர் என்றதும் தாசி ஆயி என்பவளை மறக்க முடியாது. சில நூறு வருஷங்களுக்கு முன் கிருஷ்ணதேவராயர், நாடு சுற்றிப் பார்க்க வந்தார். அப்போது எங்கள் ஊருக்கும் வந்தார்.

தாசி ஆயி வீட்டைப் பார்த்து, இது கோயிலாக்கும் என்று எண்ணி மண்ணில் விழுந்து நமஸ்காரம் செய்தார். ஊர் சிரித்தது. அப்புறம்தான் தெரிந்தது.
தான் தாசி வீட்டைக் கும்பிட்டோம் என்று. ராஜா கோபம், நீதியைப் பார்க்குமா? ஆயியின் வீட்டை இடித்துப் போடச் சொல்லி உத்தரவு போட்டார்.

தாசி, ராஜாவைத் தோற்கடித்தாள். எப்படி? இடித்த வீட்டின், அஸ்திவாரத்தில் குளம் வெட்டச் சொன்னாள். அந்தக் குளத்து நீரைத்தான் புதுச்சேரி மக்கள் குடித்தாா்கள் – குடிக்கிறார்கள்.

(குமுதத்தில் நான் எழுதிய இன்பக்கேணி நாவல் இது பற்றியதுதான்)
புதுச்சேரி விவசாய பூமி இல்லை. மக்கள், கடற்கரை ஓர மீனவர்கள், மீன் பிடிக்கிறார்கள். உள்நாட்டு மக்கள். ஒன்று, ஆலைக்குப் போகிறார்கள்.

பஞ்சாலைத் தொழில் பிரதானத் தொழில். அரசு ஊழியர்களாக அலுவலகம் போகிறார்கள். பலர் வாத்தியார்கள், கடை கண்ணி வைத்திருப்பவர்கள் என்று வாழ்க்கை நடக்கிறது.

பிரெஞ்சு அரசு நடைபெற்ற காலத்தில், பிரெஞ்ச் குடிமக்களாக மாறி, பிரான்சிலும், அதன்காலனியிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பிரஞ்சுத் தமிழ்மக்கள், நிம்மதியாக ஓய்வு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பிரான்சின் பணம், இந்தியாவுக்கு வரும்போது கணிசமாகக் கூடுகிறது. அவர்கள் பெரும் பென்சன் பணம், புதுவையின் பொருளாதாரத்தைக் கட்டி மேய்க்கிறது.
அடடா, பிரஞ்ச் குடிமகனாக மாறி இருக்கலாமே, இந்தியக் குடிமகனாக இருந்து என்ன கிழித்தோம் என்று ஏங்குகிற ஒரு தலைமுறையை நான் அறிவேன்.

பிரெஞ்சு தேசம், தன்குடிமக்களுக்குத் தரும் சௌகர்யம், மரியாதையை இந்தியாவில் பார்க்க முடியாது என்பது நிஜம். புதுச்சேரியில் பிறந்து பிரஞ்ச் குடியுரிமையைக் கோரிப் பெற்றவர்கள், புதுச்சேரியில் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்கள், நம் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. அவ்வளவுதான்.
பிரெஞ்ச் கல்விக் கூடங்கள் இவர்களுக்காகவே இருக்கின்றன. படிக்கிறார்கள். பாரீசுக்குப் பறக்கிறார்கள். இவர்களே, எங்கள் பிரஞ்ச் கலாச்சாரத் தொடர்பு அறாமல் பாதுகாக்கிற பண்பாட்டுப் பாலங்கள்.

எனக்கு இவர்கள் மேல் ஒரு வருத்தம் உண்டு. ஓவியம், இலக்கியம், மொழி சிந்தனைகள், தத்துவங்கள், உத்திகள் என்று கலாச்சாரக் கொந்தளிப்புகள் நடக்கின்றன பிரான்ஸ் தேசத்தில்.

அங்கேயே பதினைந்து, இருபது ஆண்டுகளில் வாழ நேர்ந்த மொழியால் தமிழர்களான இவர்களில் பேராசிரியர்கள், கலை உணர்வாளர்கள், தமிழுக்கு அச்செல்வங்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டாமா?

தமிழ்நாட்டுக்கு இங்கிலாந்தோடு இருந்த உறவைக் காட்டிலும், புதுச்சேரிக்குப் பிரான்சோடு இருந்த உறவின் நெருக்கம் அதிகம் என்றாலும், கலாச்சார இறக்குமதிக் குறைவு. சுத்தமாக இல்லை என முடியாது, குறைவு. எங்கள் தொடர்புக்கு சுமார் 200 வருஷம் ஆயுள்.

புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு, அஞ்சு கல் தூரத்தில்தான் இருக்கிறது அரியாங்குப்பம் என்கிற கிராமம். இங்கேதான் இருக்கிறது அந்தப் புகழ்பெற்ற அரிக்கமேடு.

இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய ரோமானிய பண்டகசாலை இங்கே இருந்துள்ளது. ஒரு பிரஞ்ச் அறிஞர் தான் இதைக் கண்டுபிடித்தார்.
அகஸ்டிசின் நாணயங்கள், ரோமானிய மது ஜாடிகள், பொம்மைகள், வளையல்கள், மணிகள் என்று ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் துவங்கத் தொடங்கின.

எனினும், ஆய்வு நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழர்களுக்கு வரலாறு தேவை இல்லை போலும்.

கலெக்டர் ஆஷ் என்கிற துர்மனிதனை வாஞ்சி என்கிற மாவீரன் சுட்டுக் கொன்று தன்னையும் மாய்த்துக்கொண்ட வரலாறு தமிழ்நாட்டுக்காரா்களுக்குப் பெருமை.

எங்கள் பெருமை அதனினும் அதிகம். வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுத்து, பிரான்ஸ் தேசத்து Mark Sainte Etienne என்ற பெயர் கொண்ட 5 முறை சுடும் துப்பாக்கியைக் கொடுத்து, ரத்தத்திலகம் வைத்து வழி அனுப்பிய மாவீரர் முத்துக்குமாரசாமி பிள்ளை எங்கள் ஊர்க்காரர்.

புதுச்சேரியில்தான் வாஞ்சி, துப்பாக்கி பயின்றான். இந்த முத்துக்குமாரசாமி பிள்ளைதான், சாவா்க்காின் ‘முதல் சுதந்திரப் போர்’ நூல் தமிழில் வரக்காரணம்.
அதுமட்டுமல்ல! பிரஞ்ச் அரசின் கைக்கூலியாகச் செயல்பட்ட செல்வராஜ் என்கிற மக்கள் விரோதியை, நேருக்கு நேராகச் சுட்டுக்கொன்று எதிரி செத்தான் என்றபின் தன்னையும் சுட்டுக்கொண்டு செத்தான்.

வாஞ்சியைப் போன்ற ராமையா என்கிற இளைஞன் பகத்சிங்-வாஞ்சி வரிசையில் ராமையா. இந்தக் கொலை நடந்த நாள் 1938-டிசம்பர் 16, மாலை நேரம்.
புதுச்சேரி மக்கள் வாழ்க்கை, பிரெஞ்சு பண்பாட்டுத் தாக்கத்தால் வடிவமைக்கப்பட்டது. ஒல்த்தோ், ரூசோ போன்றவர்களாலும், பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தாலும் உலகின்மேல் கவிழ்ந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை புதுவை மக்கள் வாழ்க்கையில் கலந்து விட்டிருக்கிறது.

தீண்டாமைக் கொடுமை சாதி-மதப் போராட்டங்கள், ஒப்பீட்டு அளவில் புதுச்சேரியில் குறைவு. அப்புறம் கல்வி, புதுவை மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் படித்தவர்கள். குறிப்பாகத் தமிழ் உணர்வு, இங்கு அதிகம்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் சவராயலு நாயக்கர் தொடங்கி, பெரியசாமி, பங்காரு, திருமுருகன், தங்கப்பா என்று தமிழ்ச் சான்றோர் மலிந்த இந்த பூமி புதுவை.

அனைத்துக்கும் மேலாக, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தோன்றியது புதுவை மண்ணில். இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகம், பாரதி, பாரதிதாசன் என்று இருவரைத் தோற்றுவித்தது.

கவிதைக்கும் மொழிக்கும் உயிரூட்டிக்கொண்டது. பாரதி, பாரதிதாசன், பாரதிதாசன் மாணவர்கள் என்று சொல்லத் தகுந்த வணிகதாசன், புதுவை சிவம், தமிழாளி ஆகியோருக்குப் புதுவை அரசு, ஆண்டுதோறும் விழா எடுக்கிறது.

புதுவையின் முக்கிய தொழில் பஞ்சாலைத் தொழில் என்று சொன்னேன். இவைகளின் தொடக்ககால உரிமையாளர்கள், முதலாளிகள்.

தொழிலாளர்களை மனிதர்களாக இவர்கள் நடத்தியது இல்லை. சவுக்கடி முதலான கொடும் தண்டனைகள் பெற்று, 14 மணி நேரம் உழைத்தால்தான் தொழிலாளிகள்.
இதற்கு காரணமாய், நாளுக்கு 8 மணி நேரம் வேலை. தொழிற்சங்க உரிமை கேட்டு மாபெரும் போராட்டத்தை 1936-ல் தலைவர் வி.சுப்பையா தலைமையில் எடுத்தார்கள்.

பிரஞ்ச் அரசு, ராணுவத்தின் துணைகொண்டு தொழிலாளிகளை ஒடுக்கியது. 12 பேர் கொல்லப்பட்டார்கள். கை, கால் இழந்தவர்கள் பலர்.

தலைவர் வ.சுப்பையாவைப் பிரான்சுக்கு அனுப்பினார் நேரு. பிரான்சுக்குச் சென்று பேசி, ஆசியாவிலேயே முதல்முறையாக 8 மணி நேர வேலை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையோடு திரும்பினார் சுப்பையா. கடற்கரையில் அவரை வரவேற்று பாரதிதாசன்,

“வருக! வருக! வளர்புதுவை தன்னில்
பெருகு தொழிலாளர் பெற்ற பெரும் பேறே!
பொய்யை அநீதியைப் போக்கப் பணிசெய
சுப்பையா போ்கொள் சுசிந்தரு…” என்று பாடினார்

தொழிலாளி வர்க்கத்துக்கு இம்மாபெரும் வெற்றி கிடைத்தது 1937-ல் ஏப்ரல் ஆறாம் தேதி. புதுவை தந்த மாபெரும் தலைவர். நேரு, போஸ் போன்றவர்களுக்கு நிகரானத் தலைவர்.

புதுவையை ஆண்ட பிரெஞ்சு கவர்னர்களிலேயே, மிகுந்த புகழ் பெற்றவர் துய்ப்ளக்ஸ். ஒரு கட்டத்தில் இந்தியாவின் பாதி அவன் கட்டுப்பாட்டில் வந்தது.
சந்தோஷம் கரை புரள, தன் துபாஷ் (ஏறக்குறைய இன்றைய தலைமைச் செயலாளருக்குச் சமமான பதவி) ஆனந்தரங்கப் பிள்ளையிடம் “உமக்கு என்ன வேண்டும் கேளும்” என்றான். பிள்ளை, “வெற்றிலை விலை ஏறிவிட்டது அதை குறையும்” என்றார்.

“செய்யலாம் உமக்கு என்ன வேண்டும் கேள் என்றான் மீண்டும் துய்ப்ளக்ஸ். “சிறையில் துராக்ரதமாக சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுவியும்” என்றார் பிள்ளை.

இவர், நூறு ஏக்கர் நிலம் கேட்டால் அவன் கொடுக்கத் தயாராக இருந்தான். பிள்ளை கேட்கவில்லை. அதுதான் பிள்ளையின் பெருமை.

ஆனந்த பிள்ளை எழுதிய டைரிக் குறிப்புகளே, தமிழகத்தின் ஆதாரமான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாறாக மிளிர்கிறது.

பிள்ளை மட்டும் அல்ல, அவர் தந்தை, தம்பி, தம்பி பிள்ளைகள் எல்லோரும் எழுதி இருக்கிறார்கள். புதுச்சேரியின் முதல் கப்பல் ஓட்டிய தமிழர் நம்பிள்ளை.

தட்பவெப்ப நிலைகளில் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதே வெய்யில், வெப்பம், பனி, குளிர் எல்லாம்.

ஆனால் எங்களிடம் அழுக்கு குறைவு. காலை கொஞ்சம் சீக்கிரமாகவே இங்கு விடிகிறது. ஜனங்கள் சோம்பேறிகள் இல்லை.

காலை காபி அயனான தஞ்சாவூர் டிகிரி காப்பி. உங்கள் சரவணா காபியோ இங்கு கிடைப்பது இல்லை. இரண்டாம் தரமான காப்பி தான் இந்த ஊரில். அது என்னமோ மிக உயர்தரமான சைவ அசைவ ஹோட்டல்கள் இங்கு இல்லை.

ஜனங்கள் நிறைய சைக்கிள்களில் பயணம் பண்ணுகிறார்கள். நகரம் மூணு மைல் முட்டை வடிவம். நடந்தே சுற்றி வரலாம்.

கிழக்கு நோக்கி நடந்தால் கடற்கரை வந்துவிடும். அமைதியான, ஞானம், தவம், மோனம் தவமும் கடற்கரை. அரவிந்தரும் அன்னையும் நடந்த கரை.

இரண்டு தெருவுக்கு ஒரு தெருவில் உங்கள் எம்எல்ஏ வீடு. உங்களை வரவேற்பார். மந்திரிகள் நண்பர்களைப் போல, சுலபமாக காணக் கிடைப்பார்கள். உதவுவார்கள். பத்து நிமிஷம் முயன்றால் எங்கள் முதலமைச்சர் திரு.பா.சண்முகத்தை நீங்கள் பார்க்கலாம்.

காமராஜ் மாதிரி இருப்பார். கல்யாணம் இல்லாததால் அல்ல, எளிமை, ஒழுக்கம் இவைகளில் அவரின் வாரிசு இவர். முதலமைச்சருக்கு அடுத்ததாக சக்தி பொருந்திய தலைவர் கண்ணன்.

அவரிடம் நீங்கள் நவீன இலக்கியம் பேசலாம். அறிவாளி. தேனி ஜெயக்குமார் வல்சராஜ் என்று அமைச்சர்கள். நம் அண்டை வீட்டுக்கார நட்பும் எளிமையாகமாக இருப்பார்கள்.

அழகான கடைத்தெரு. துணி மற்றும் உங்கள் தேவைக்கு வியாபாரம் செய்யலாம். நியாயவிலை, ‘கௌவாட்பு’ என்கிற ஒரு வகை பஜ்ஜி எங்கள் ஊர் விசேஷம். சுவைக்கலாம்.

அப்புறம் உங்களை ஆச்சரியப்படுத்தும் விலையில் பீரும், பிராந்தியும், விஸ்கியும் அருந்துங்கள்.

எங்கள் ஊரில் மது அருந்துபவர்கள் அதிகம். ஆனால் குடிகாரர்கள் இல்லை. லஞ்சம் உண்டு, ஊழல் உண்டு குறைந்த வீதத்தில், ஐயாயிரம் பத்தாயிரம் கோடி ஊழல் எல்லாம் சாத்தியம் இல்லை.

2000 ஆண்டு இட்லி தோசை, சாம்பார், குழம்பு உணவுகள். மீன் முக்கியம். காய்கறிகளை விடவும் மீன் எங்கள் உணவில் அதிகம்.

எதுவாா் குபேர், வெங்கடசுப்பா ரெட்டியார், வ.சுப்பையா என்றும் முப்பெரும் தலைவர்கள் போட்டுத் தந்த அடிப்படையில் எங்கள் அரசியல்.

பாரதியும், பாரதிதாசனும், அரவிந்தரும் எங்கள் கலாச்சார மூலவர்கள். வால்டேர், ரூசோ, அம்பேத்கர், பெரியார் மற்றும் சித்தர்கள் எங்கள் சமூக நெறியாளர்கள்.

எங்கள் பலம் மற்றும் பலவீனம் ஆகியவைகளுடன் சந்தோஷமாகவே நாங்கள் வாழ்கிறோம் அல்லது அப்படி நம்புகிறோம்.

– (மணாவின் ‘ஊர்மணம்’ நூலிலிருந்து)

You might also like