சூரியன் கருக்குமா?

இமயம் முதல் குமரி வரை
எந்த ஒரு ஊரிலும்,
கைத்தடியுடன் நடக்கும்
காந்திமகான் சிலை இருக்கும்..

தேசத்தின் தந்தை எனத்
திக்கெட்டும் ஒலித்திருக்கும்.
கடையனையும் கடைத்தேற்றும்
கருணை ஜொலித்திருக்கும்..

அகிம்சை கொடிபறக்கும்.
அன்பினால் அசைந்திருக்கும்.
புதியதோர் யுத்தமுறை,
புவிகண்டு வியந்திருக்கும்.

திறந்துவைத்த புத்தகமாய்
வாழ்க்கை விரிந்திருக்கும்.
வாழ்வே செய்தியென
வரலாறு புகழுரைக்கும்‌..

சர்வமத பிரார்த்னையில்
சாந்தி கொலுவிருக்கும்.
சாதி மத பேதமெல்லாம்
விலகி அகன்றிருக்கும்.

கற்றோர் சிரம் பணியும்,
கல்லாதோர் கரம் குவியும்,
பொக்கை வாய்ப் புன்னகையில்
புத்தனுக்கும் பொறாமை வரும்.

அரைநிர்வாண பக்கிரி
அடிஎடுத்து வைத்தவுடன்
அமைதி பூத்திருக்கும்
அகிலமதை பார்த்திருக்கும்..

மதவெறியன் துப்பாக்கி
மார்துளைத்த வேளையிலும்,
தேசத்தின் நிலை எண்ணித்
தேகம் சரிந்திருக்கும்.

ஈஸ்வருடன் அல்லாவை
இணயாகத் தொழுதவனின்
இரத்தத் துளிமண்ணில்
விதையாகி முளைத்திருக்கும்.

மதவெறிக் கெதிராக
மாயுத்தம் புரிகவென
மண்ணில் புதைந்தவுடன்
மரமாகிக் கிளைத்திருக்கும்.

சேறள்ளி அவர்சிலையில்,
சிதறவிட்டு, ஒளிந்தோடும்
தெருநாய்கள் சில குரைக்கும்.
சூரியனோ ஒளி கருக்கும்?

காலம் உள்ளவரை,
காந்தியவர் புகழிருக்கும்.
ஞாலம் உள்ளவரை,
ஞானியை நினைத்திருக்கும்.

– ஆதிரன்

You might also like