உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும்.

அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம் உருவாக்கிய உலகத்தோடு அது பொருந்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய அபாயத்தைத் தமிழில் மிகச்சில படங்களே எதிர்கொண்டிருக்கின்றன.

காரணம், அரிதாக மிகச்சில படைப்புகளே அப்படித் திரையுருவைப் பெற்றிருக்கின்றன.

அவற்றுள் ஒன்றாகியிருக்கிறது விஜய்பிரகாஷ் இயக்கத்தில் கவுரி கிஷன், மறைந்த மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘உலகம்மை’.

சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

போராடும் இளம்பெண்!

உலகம்மை (கவுரி கிஷன்) தைரியமும் துணிச்சலும் கூடவே அழகும் நிரம்பிய இளம்பெண். அவரது தந்தை மாயாண்டி (விஜயபிரகாஷ்) ஒருகாலத்தில் பனைமரம் ஏறி நுங்கு, பதநீர், ஓலை வியாபாரம் மேற்கொண்டவர்.

மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டபிறகு, அவரால் நடமாட முடிவதில்லை. அதனால், உறவினர் மாரிமுத்து (மாரிமுத்து) தோட்டத்தில் விவசாயக் கூலியாளாக வேலை பார்க்கிறார் உலகம்மை.

அவர்கள் வாழும் வீடு, தனது முன்னோருக்குப் பாத்தியப்பட்டது என்று உரிமை கொண்டாடுகிறார் மாரிமுத்துவின் மைத்துனர் பலவேசம் (ஜி.எம்.சுந்தர்). அப்பிரச்சனை அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

பனைமரம் ஏறும் வழக்கத்தைத் தொடர்ந்த காரணத்தால், உறவினர்கள் பலரும் மாயாண்டியையும் உலகம்மையையும் கீழாக நோக்குகின்றனர். அதில் மாரிமுத்துவும் ஒருவர்.

அப்படிப்பட்ட மாரிமுத்து, ஒருநாள் உலகம்மையைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பட்டுப்புடவை தந்து அணியச் சொல்லி, அவரைத் தனது மகள் சரோஜா உடன் கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார்.

செல்லும் வழியில், சரோஜாவைப் பெண் பார்க்க வந்த லோகநாதனின் (வெற்றி மித்ரன்) குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

அனைவரும் சரோஜா உடன் வரும் உலகம்மையைப் பார்த்ததும், அவர்தான் மணப்பெண் என்று நினைத்துக் கொள்கின்றனர். திருமணத்திற்கும் சம்மதம் சொல்கின்றனர்.

வயது முதிர்ந்த தனது மகள் சரோஜாவைத் திருமணம் செய்துவைக்க மாரிமுத்து மேற்கொண்ட குயுக்தி, அதன் பின்னே இருக்கிறது.

மணமேடையில் லோகநாதன் குடும்பத்தினரிடம் உண்மையை உடைத்தால்போதும் என்பதே அவரது திட்டம்.

அதனை அறியும் உலகம்மை, லோகநாதனை நேரில் சந்திக்கிறார். உண்மையை விளக்கி, சரோஜாவை திருமணம் செய்யுமாறு வேண்டுகிறார்.

ஆனால், அவரோ ‘உங்களைத்தான் திருமணம் செய்வேன்’ என்று சொல்லி, தான் மெட்ராஸில் குடியிருக்கும் முகவரியை உலகம்மையிடம் தந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.

அதையடுத்து, லோகநாதன் குடும்பத்தினர் ’திருமணம் வேண்டாம்’ என்று முகத்திலடித்தாற்போல மாரிமுத்துவிடம் சொல்லிவிடுகின்றனர்.

தனது திட்டம் பாழானதற்கு உலகம்மையே காரணம் என்று நினைக்கும் மாரிமுத்து, மெல்ல அவருக்கு இடைஞ்சல் செய்யத் தொடங்குகிறார். அதற்கு உலகம்மை தரும் பதிலடிகள், பிரச்சனையை மேலும் தீவிரமாக்குகின்றன.

அதன் விளைவாக, ஊரைவிட்டே மாயாண்டியையும் உலகம்மையையும் ஒதுக்கி வைக்கும் நிலையை உருவாக்குகிறார் மாரிமுத்து.

அந்த நேரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருணா (பிரணவ்) அவர்களுக்கு உதவ முன்வருகிறார்.

அது உலகம்மை உறவினர்களை எரிச்சல்படுத்துகிறது. அதன்பிறகு என்ன நடந்தது? ஊரை எதிர்கொள்ள உலகம்மை என்ன முடிவெடுத்தார் என்று சொல்கிறது இத்திரைப்படத்தின் மீதி.

தன்னையும் தந்தையையும் அடிமைப்படுத்த முயலும் உறவினர்களிடம் இருந்து விடுபடத் துடிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதையே ‘உலகம்மை’. சாதியற்ற சமூகத்திற்கான தேடல், இக்கதையின் முடிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அற்புதமான இசையாக்கம்!

உலகம்மையாக நடித்த கவுரி கிஷன், சில காட்சிகளில் பாந்தமாகப் பொருந்தி நிற்கிறார். ஆனால், பல இடங்களில் அதிக ஒப்பனை, மடிப்பு கலையாத உடை என்று ‘தனித்து’ தெரிகிறார்.

மறைந்த இயக்குனர் மாரிமுத்துவுக்கு இதில் சிறப்பான வேடம். அவரும் நன்றாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவரது நுணுக்கமான முகபாவனைகளுக்குத் திரைக்கதையில் இடம் தரப்படவில்லை.

மாயண்டியாக வரும் இயக்குனர் விஜய்பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். தரகராக அருள்மணி, கான்ஸ்டபிளாக ஜேம்ஸ் என்று பலர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.

அவர்களில் பலவேசமாக நடித்துள்ள ஜி.எம்.சுந்தர் நம் மனம் கவர்கிறார். அவருக்கு வேறு யாரோ இரவல் குரல் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. அது ரசிக்கும்படியாக அமையவில்லை.

சிற்சில வேடங்களில் தொழில்முறை நடிகர்களாக அல்லாதவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ். சில இடங்களில் அது துருத்தலாகத் தெரிகிறது.

கே.வி.மணியின் ஒளிப்பதிவு, நாமே அந்த இடங்களை நேரில் காணும் உணர்வைத் தோற்றுவிக்கிறது. சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்னர் நெல்லை வட்டாரக் கிராமங்கள் இப்படித்தான் இருந்தன என்று சொல்ல முயற்சித்திருக்கிறது வீரசிங்கத்தின் கலை வடிவமைப்புக் குழு.

படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், உலகம்மையின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார்.

முன்பாதியில், மாரிமுத்துவிடம் லோகநாதனின் உறவினர்கள் சண்டையிடுவதற்கு முன்பாகவே, அது குறித்து மாரிமுத்துவின் மனைவி உலகம்மையிடம் பேசும் காட்சி வந்துவிடுவது பெருங்குறை.

அதேபோல, கான்ஸ்டபிளாக வருபவரின் பெயர் வேறொன்றாக இருக்கிறது; மாரிமுத்து அவரை ‘ஏ ஜேம்ஸு’ என்று அழைப்பது இன்னொரு உறுத்தல்.

இது போன்ற குறைகளைக் கண்டறிந்து, அந்த பாத்திரம் அணிந்திருக்கும் பேட்ஜையாவது மறைத்திருக்கலாம்.

இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற ’என் மனசு’ பாடல் சட்டென்று நம் இதயத்திற்குள் ஊடுருவுகிறது. பல காட்சிகளில் உள்ளடக்கத்தைத் தாண்டி, வேறொரு உலகத்தை நம் மனதுக்குள் நிறைக்கிறது அவரது பின்னணி இசை.

அதேநேரத்தில், உலக சினிமா அனுபவத்தை உருவாக்கும் நோக்கோடு மண்வாசனை சிறிதுமின்றி நம்மை அந்நியமாக உணர வைக்கிற இசையமைப்பு இப்படத்தில் அறவே இல்லை. அதுவே ‘உலகம்மை’யின் மாபெரும் பலம்.

காலம் கடந்த விவாதம்!

’உலகம்மை’யில் நெல்லை வட்டார மொழியை வசனங்களில் இழைய விட்டிருக்கிறார் வசனகர்த்தா டாக்டர் குபேந்திரன். அதுவே, ஒவ்வொரு காட்சியையும் கூர்ந்து கவனிக்கக் காரணமாக விளங்குகிறது.

எழுபதுகளில் சு.சமுத்திரம் எழுதிய இக்கதைக்குத் தற்போது திரையுருவம் தந்திருக்கிறார் இயக்குனர் விஜய்பிரகாஷ்.

இப்போதும் கதையில் சொல்லப்பட்டிருக்கும் பிரச்சனை உயிர்ப்புடன் உள்ளது என்றபோதும், அதன் தாக்கம் பெரியளவில் இல்லை. அதுவே, இக்கதையைக் காலம் கடந்த விவாதமாக மாற்றுகிறது.

முழுக்க உலகம்மையின் பார்வையில் கதை நகர்வது இப்படத்தின் பலவீனம்.

இந்தக் கதையில் உலகம்மைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் லோகநாதனுக்கோ, மாரிமுத்துவுக்கோ, அவரது மனைவி மற்றும் மகளுக்கோ, பலவேசம் உள்ளிட்ட ஊர்க்காரர்களுக்கோ தரப்படவில்லை.

போலவே, தனது சாதியினர் குறித்து உலகம்மை எதிர்மறையாக விமர்சிக்கும் காட்சிகள் போதிய அழுத்தம் ஏற்படுத்துவதாக இல்லை.

நாவலில் இருப்பதைக் காட்சிப்படுத்துவதைத் தாண்டி, ஒரு நல்ல காட்சியனுபவத்தைத் தரச் சில சமரசங்களை மேற்கொண்டாக வேண்டுமென்ற நியதியை இயக்குனர் மறந்திருக்கிறார்.

அதேநேரத்தில், கிடைத்த பட்ஜெட்டை கொண்டு அறுபதாண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு தென்மாவட்ட மக்களின் வாழ்வைத் திரையில் வடித்திருக்கிறது இயக்குனர் ஜெயபிரகாஷின் உழைப்பு.

அதற்கு மதிப்பளித்து அங்கீகரிக்க விருப்பமுள்ளவர்கள், தாராளமாக இப்படத்தைக் காணலாம்.

அவர்கள் சோர்வுறாமல் இருக்கும் வேலையை, இளையராஜாவின் இசை திறம்படச் செய்துள்ளது என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

-உதய் பாடகலிங்கம்

You might also like