100 ஆண்டுகள் தாங்கும் தைக்கால் பக்குவம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 6 கிமீ தூரத்திலும்; சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரத்திலும் உள்ள தைக்கால் பகுதியில் சாலையின் இரு பகுதிகளிலும் விதவிதமான பிரம்புப் பொருட்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

தைக்காலைச் சேர்ந்த வியாபாரிகள் அசாம், மேற்குவங்கம், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து பிரம்புகளை வாங்கிப் பொருட்களை தரமாகச் செய்கின்றனர்.

வேறெங்கும் இல்லாத அளவுக்கு தைக்காலில்தான் பிரம்புப் பொருட்கள் தயாரிக்க இதமான, கச்சிதமான வெப்பத்தை உண்டாக்குகின்றனர்.

அதாவது தைக்காலைச் சேர்ந்தவர்களின் கைப் பக்குவம் உலகில் வேறு எந்தப் பகுதி மக்களிடமும் இல்லை.

இதனால் சூடுபடுத்தப்படும் பிரம்புகளை லாவகமாக வளைத்து பொருட்களை தரமாக செய்ய முடிகிறது. தயாரான பிரம்புப் பொருட்களில் பின்னர் வார்னிஷ் அடிக்கின்றனர்.

பிரம்புப் பொருட்களின் ஆயுட்காலத்தை ஜன்மம் என்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வார்னிஷ் அடிப்பதால் இந்தப் பிரம்புப் பொருட்களை எந்த பூச்சிகளும் நெருங்குவதில்லை.

இதனால் நூறு ஆண்டுகளானாலும் இந்தப் பொருட்கள் அப்படியே இருக்கின்றன.

இங்கே பிரம்புப் பொருட்களின் உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நூற்றாண்டுகளுக்கு மேல் குடிசைத் தொழிலாக நடைபெற்று வரும் இத்தொழிலில் இப்பகுதியில் நேரடியாக 3000 குடும்பங்களும், மறைமுகமாக 2000 குடும்பங்களும் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலேயே தைக்கால் பகுதியில் மட்டுமே மிகக்குறைந்த விலையில் பிரம்பு கலைப் பொருட்களை வாங்க முடிகிறது.

குழந்தைகள் ஆடும் தொட்டில் முதல் சோபா செட், ஊஞ்சல், நாற்காலிகள், கட்டில், டைனிங்டேபிள், கூடைகள், தட்டுகள், அர்ச்சனைக் கூடைகள் போன்ற கலைப் பொருட்கள் இங்கு தயாராகின்றன.

ஆம். குழந்தைகள் ஆடும் தொட்டில் முதல் இஸ்லாமியர்கள் இறந்தவர்களை சுமந்து செல்லும் சவப்பெட்டி வரை அனைத்துமே இங்கு பிரம்பால் தரமாக செய்து தரப்படுகின்றன.

பிரம்பு வகைகளில் 210 ரகங்கள் இருப்பதாக தாவரவியல் தரவுகள் கூறுகின்றன.

குறுந்தொகை, நந்திக் கலம்பகம், குற்றாலக் குறவஞ்சி, நற்றிணை மட்டுமின்றி பல்வேறு சங்க இலக்கியங்களிலும் பிரம்பின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது.

பிரம்பை ஒன்றுசேர்த்து முறுக்கி போர்க்காலங்களில் தேர் வடமாக பயன்படுத்தியுள்ளனர்.

போலவே மிகப்பெரிய கோயில்களுக்கு பெரிய கற்களை இழுத்துச் சென்று கட்டுமானம் செய்ய யானைகளின் கழுத்திலிருந்து பின்னலான முறுக்குக் கயிறு பயன்படுவதாக பழந்தமிழ் நூல் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா மட்டுமின்றி இந்தோனேஷியா, மலேசியா, சீனா, மியான்மர், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும், மழைக்காடுகள், ஆற்றுப்படுகையிலும் தானாகவே பிரம்பு வளர்கிறது.

சீனா, மியான்மர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கலைநயம் உள்ள பிரம்பு கலைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மியான்மரில் படகு வீடுகள் கட்டுவதற்கும் பல்வேறு நாடுகளில் அணு உலைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தியாவில் அந்தமான், அசாம், அருணாச்சலப் பிரதேசம், கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் சில பகுதிகளிலும் பிரம்பு விளைகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக பிரம்புக் கூடைகளும், கலைப்பொருட்களும் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் தயார் செய்யப்படுகின்றன.

தைக்கால் பகுதிக்கு அசாம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து பிரம்புகள் வரவழைக்கப்பட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதுமட்டுமல்ல. இந்தோனேஷியா, மலேசியா, தைவான் ஆகிய வெளி நாடுகளில் இருந்தும் பிரம்பு இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

கலைநயத்துடன் பொருட்களைத் தயாரிப்பதற்கு பிரம்பு இழைகளும் பிரம்பு நார்களும் மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படுகின்றன.

பிரம்பு இழைகளை இங்குள்ளவர்களால் மட்டுமே வெறும் கையால் தயார் செய்ய முடியும்.

பயிற்சி பெற்ற சிலர் மட்டுமே பிரம்பு மற்றும் நார்களை கையால் தயார் செய்து வருகின்றனர்.

தைக்கால் பகுதியில் வடிவமைக்கப்படும் பிரம்பு பொருட்கள் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு குழந்தைகளுக்கான பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன.

இப்படித் தயாராகும் பொம்மைகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தவிர இங்கு உருவாகும் பிரம்பு பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் அமோகமாக விற்பனையாகின்றன.

– ஆர்.கே.ரவிச்சந்திரன் 

நன்றி: தினகரன், தீபாவளி மலர் 2021.

You might also like