சுற்றுச் சூழல் பாதுகாப்பு அக்கறையோடு செயல்படுவோம்!

– தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது என்றும்

நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவைக்கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது என்றும்

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம் என்றும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம் என்றும்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்றும்

நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு, சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது எனவும்

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது என்றும்

அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like