நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம்.
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை கேள்விக்குறியானது. இருப்பினும் சில ஆசிரியர்களின் பொறுப்புணர்வு மற்றும் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மீண்டும் அரசு பள்ளிகள் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் பலர் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு பாடம் எளிதில் புரியும் வகையில் ஆடல், பாடலுடன் உற்சாகத்தோடு பாடம் எடுக்கும் முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் கடந்த 28 ஆண்டுகளாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பேரலையால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. குறிப்பாக பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
தனது 26 ஆண்டு கால அனுபவத்தில் இதுபோன்ற ஒரு பெருந்துயரை சந்திக்காத ஆசிரியை பாக்கியலட்சுமி மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதை அறிந்து வேதனை அடைந்தார்.
எனவே, தற்போதைய நவீன உலகிற்கு ஏற்ப வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.
அதேசமயம் ஆன்லைன் என்பதால் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
தனது ஆசையை பாக்யலட்சுமி தனது மகள்களிடம் தெரிவித்த போது பாக்கியலட்சுமியின் மகள்கள் அவருக்கு சில யோசனைகளை கூறியுள்ளனர்.
அதன்படி இயல்பாகவே பாடும் திறமை கொண்டிருந்த பாக்கியலட்சுமியிடம் பாடங்களை பாடிக் கொண்டே மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
அதை நாங்கள் வீடியோவாக எடுத்து யூடியூப் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறோம் என்று கூறினர்.
அதன்படியே ஆசிரியை பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து கொண்டே ஆடி படி ராகத்தோடு பாடங்களை கற்பித்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறிப்பாக கொரனோ காலத்தில் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பாக்யா டீச்சரிடம் பாடம் படித்து வந்துள்ளனர்.
கொரனோ அலை ஓய்ந்த பிறகும் தற்போது வரை பாக்யா டீச்சர் நேரம் கிடைக்கும்போது வீட்டில் வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
யூடியூபில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் ஆசிரியை பாக்கியலட்சுமி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்கி தனது வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.
தற்பொழுது இன்ஸ்டாகிராமிலும் பாக்கியா டீச்சருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்த கட்டமாக கதை சொல்லி அதன் மூலம் பாடங்களை சொல்லி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பாக்கிய டீச்சர் தெரிவித்தார்.
– தேஜேஷ்