தியாகிகளுக்கு சாதியில்லை: முகநூல் பதிவால் நடக்கும் நல்ல மாற்றம்!

ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதியுள்ள நெகிழ்வூட்டும் பதிவு.

கடந்த சில ஆண்டுக்கு முன்பாக எங்கள் கிராமத்தைச் சார்ந்த மூத்த வயதுடைய தியாகி திரு.ந. பாலசுந்தரம் அவர்கள் குறித்து துள்ளுக் குட்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

அந்தப் பதிவில் முக்கியமாக குறிப்பிட்ட விசயம், அரசாங்கம் அவரது தியாகத்திற்கு பென்சன் அளிக்க முன்வந்த போது நான் இந்த பென்சனுக்காக நான் போராட வரவில்லை. எனக்கும் பென்சனும் தேவையில்லை என்று மறுத்து விட்டார்.

இந்த விசயம் எனக்கு தெரிந்தது துள்ளுக் குட்டி அவர்களது முகநூல் பதிவு மூலமாக. எனக்கு இவரைத் தெரிந்திருந்தாலும் பென்சன் மறுத்த விசயம் தெரிந்ததும் இவர் மீது பெருமதிப்பு உண்டாகிவிட்டது.

இரண்டாவதாக 94 வயது நிரம்பிய இந்த தியாகி பெரியவர் வ.உ.சி.யை தனது சிறிய வயதில் நேரில் கண்டவர் என்று தெரிய நேரிடுகையில் கூடுதலான பெரிய மரியாதை உண்டாகி விட்டது.

ஆனால் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூட அளவில் கூட ஏதாவது சுதந்திர தின நாளில் இவரைக் கூப்பிட்டு கொடி ஏற்ற வைத்து சிறு குழந்தைகளுக்கு இவரை அறிமுகப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணத் தோன்றியது.

இன்று வரை யாரையும் எதிர்பார்க்காமல் தன்னளவில் யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் மிக எளிமையான குறையில்லாத ராஜவாழ்க்கை வாழ்கிறார். காரணம் எந்த ஆசையும் கிடையாது.

அதனால் அவருக்கு எந்த மோசமும் கிடையாது. யார் மீதும் எந்தவொரு குறைகூறுதல் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வரும் பெரியவர் ந.பாலசுந்தரம் அவர்கள்.

நான் எங்கள் ஊரில் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் 75 ம்ஆண்டு சிறப்பு சுதந்திர நாளிலோ அல்லது இந்த வருட சுதந்திர நாளிலேயோ இவரை வைத்து கொடி ஏற்றி வருங்கால தலைமுறை குழந்தைகளுக்கு இவரது தியாக வாழ்க்கையை அறிமுகப்படுத்தலாம் என்று பள்ளி நிர்வாகிகளிடம் பேசிப் பார்த்தேன்.

சில முக்கிய பிரமுகர்களின் சொல்லி தூதும் விட்டேன். என் முயற்சி வீணாகியது. காரணம் பெரிய ஆராய்ச்சி தேவையில்லை, சாதியே.

சூரத் மாநாட்டில் திலகர் பல தலைவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது திலகரை கவனிக்கும் தனி அலுவலர் சாப்பாட்டை ஒரு தனி அறையில் தயார் செய்து விட்டு திலகர் வருகைக்காக முகக்குறிப்பை எதிர் நோக்கி காத்திருப்பார்.

அப்போது திலகர் அருகில் நின்று கொண்டிருந்த தனி அலுவலர் சாப்பாடு வைத்துள்ளேன் ஐயா சாப்பிட வாருங்கள் என்பார்.

அப்போது திலகர் என் சாப்பாட்டை இங்கே எடுத்துக் கொண்டு வை. அடிமைத் தளையை தகர்க்கும் போராட்டத்தில் ஈடுபடும் தேசியவாதிகள் அனைவரும் ஒரே சாதிதான் என்பார்.

ஆனால், எனது முகநூல் பதிவை சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ் பேராசிரியை முனைவர் திருமதி. அருள்மொழி அவர்களது கவனத்திற்கு சென்றது.

ஏற்கனவே இந்தக் கல்லூரி சார்பாக வ.உ.சி. 150 ம் ஆண்டில் வ.உ.சி.குறித்து சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தவர் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அய்யநாடார் கல்லூரி எந்த ஒரு விசயத்தையும் முன்மாதிரியாக கொண்டு செல்பவர்கள்.

அந்த வகையில் வ.உ.சி.குறித்து மாணவர்களுக்கு சிறப்பு கவனம் ஏற்படுத்தி கருத்தரங்கு நடத்தினார்.

அதே போன்று தற்போது இதுவரை பொதுவெளியில் கவனம் பெறாத எங்கள் ஊரைச் சார்ந்த மூத்த தியாகி த.பாலசுந்தரம் அய்யா அவர்களை இந்த சுதந்திர தின நாளகனையொட்டி அவருக்கு சிறப்பு கவுரவம் செய்யவிருக்கிறார்கள்.

அதற்காக எனது ஊர் சார்பாக கல்லூரி முதல்வர் மற்றும் முனைவர் திரு.செ.அசோக் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி முதல்வர் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

இதனை சாத்தியப்படுத்திய பேராசிரியை முனைவர். ந.அருள்மொழி அம்மா அவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் முன்மாதிரியாக அசத்திக் கொண்டிருக்கும் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிக்கு இதுவரை வெளிச்சம் படாத தியாகி த.பாலசுந்தரம் அவர்களை கவுரப்படுத்துவதற்காக கிரேட் சல்யூட்.

You might also like