ஊக்கமுடன் உழையுங்கள்; உயர்வு பெறுவீர்கள்!

அருட்தந்தையின் வேதாத்திரி மகிரிஷி

எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.

எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும்.

எண்ணம் என்பது மகத்தானதாகவும், புதுமையானதாகவும்
இருந்தால் அதன் விளைவும் மகத்தானதாக இருக்கும்.

எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பியாகும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.

எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.

இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.

இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும். இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம். 

இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.

எல்லாரையும் வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள்.

ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.

இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்றுப் போய் நிற்கிறது.

விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மட்டும் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் செயல்படுங்கள். வாழ்வில் உயர்ந்திடுங்கள்.

நம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் மனித வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் நான் யார் என்பதற்கு விடை தேடுங்கள்.

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழிவகுக்கும்.

பிறரைக் குத்திக் காட்டுவது போல அறிவுரை சொல்லக் கூடாது. தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.

தீர்க்க முடியாத துன்பம் என்று உலகத்தில் ஒன்று கிடையாது. தீர்வுக்கான வழி தெரியாமல் தான் பலரும் தவிக்கிறார்கள்.

உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம்.. இதுவே நல்லோரின் இலக்கணம்.

உழைப்பால் மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம். மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.

அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.

திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.

உடையிலும், நடையிலும் ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உள்ளத்தைக் கருணையால் நிரப்புங்கள்.

அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.

தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.

தொகுப்பு: யாழினி ராஜ்.

You might also like