புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வலங்கைமான் என்றவுடன் நினைவுக்கு வருவது இங்கு அருள்பாலித்து வரும் பாடைகட்டி மகா மாரியம்மன் ஆலயம்.

மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்திற்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து எல்லாம் மக்கள் வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கக்கூடிய தாலுக்காவில், ஆண், பெண் சதவீதம் சரிசமமாக உள்ளது.

இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி தான் உத்தமதானபுரம். இங்கு பிறந்தவர் தான் தமிழ் தாத்தா என்று அழைக்கக்கூடிய உ.வே.சா எனும் உ.வே.சாமிநாத ஐயர்.

வி.எஸ் ராமமூர்த்தி என்று அழைக்கப்படும் வலங்கைமான் சுப்பிரமணியன் ராமமூர்த்தி, இந்திய அணுசக்தி இயற்பியலாளரும், பெங்களூருவிலுள்ள மேம்பட்ட ஆய்வுகள் நடத்திய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அமைப்பின் முன்னாள் இயக்குநரும், பேராசிரியரும் ஆவார்.

சில்வர் டங் சாஸ்திரி என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சீனிவாச சாஸ்திரிகள் பிறந்த பகுதி தான் இந்த வலங்கைமான்.

இப்படி சிறப்பு மிகுந்த இந்த பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.

வலங்கைமான் நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் வெடி தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.

அதனாலேயே குட்டி சிவகாசி என்ற சிறப்பு பெயரும் வலங்கைமானுக்கு உள்ளது.

இப்படி சிறப்பு வாய்ந்த பகுதிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இந்த பகுதியில் பேருந்து நிலையம் இல்லை என்பதால் விரைவில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

– தேஜேஷ்

You might also like