மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை!

டாக்டர் எலிஸ் சில்வர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
‘மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை(!) (ஹியூமேன்ஸ் ஆர் நாட் ஃபிரம் எர்த்: எ சயின்டிஃபிக் எவால்யூசன் ஆப் தி எவிடன்ஸ்’) என்பது அந்தப் புத்தகத்தோட பெயர்.

‘என்ன சார்! பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டிங்க?’ அப்படின்னு எலிஸ் சில்வர் கிட்ட கேட்டா அவர், சில கருத்துகளை முன் வைக்கிறார்.

‘உலக உருண்டையிலே எல்லா விலங்குகளும் நாலு கால்கள்ல நடக்கும்போது மனிதன் மட்டும்தான், ‘கை வீசம்மா கை வீசு’ன்னு கைகளை வீசிக்கிட்டு, 2 கால்களால் விசுக் விசுக்குன்னு நடக்கிறான். அவன் வேற்றுலகத்தைச் சேர்ந்தவன் என்கிறதுக்கு இது ஓர் அடையாளம்’ என்கிறார் எலிஸ் சில்வர்.

‘புவிக்கோளத்திலே பிறக்கிற மனிதக் குழந்தைகள் பெரிய தலைகளோடு பிறக்குது. இதுவும் மனிதர்கள் வேற்றுலத்தைச் சேர்ந்தவங்க என்கிறதுக்கான அக்மார்க் அடையாளம்‘ என்கிறார் சில்வர்.

பூமியிலே ஒரு நாள் என்கிறது 24 மணிநேரம். ஆனால், மனிதர்களோட உடலில் இருக்கிற பயாலஜிக்கல் கடிகாரம், 25 மணிநேரத்தை எதிர்பார்த்துதான் செட் செய்யப்பட்டிருக்கு.

ஆக, தன்னைத்தானே 25 மணிநேரத்தில் சுத்துற ஒரு கோள்ல இருந்துதான் மனிதர்கள் வந்திருக்கணும்’ என்கிறது டாக்டர் எலிஸ் சில்வரோட கணிப்பு.

‘பூவுலகத்துக்கு மனிதகுலம் வந்து ரொம்ப காலமாகுது. ஆனா, இன்னும் பூமிப்பந்தோட தட்பவெப்பத்துக்கு மனித குலம் பழகல்ல. சூரிய வெப்பத்தால் ஏற்படுற சன் ஸ்ட்ரோக், முதுகுவலி எல்லாம் இதற்கான அடையாளங்கள்’ அப்படிங்கிறார் எலிஸ் சில்வர்.

சரி. மனிதகுலம் எப்படி பூமிக்கு வந்தது? இதற்கு இரண்டு கணிப்புகளை முன் வைக்கிறார் எலிஸ் சில்வர்.

1. விண்வெளியில் ஒரு பெரிய போர் நடந்தபோது மனிதகுலம் அதிலே தாக்குப் பிடிக்காது எனத் தெரிந்து, யாரோ ஓர் ஏலியன் புண்ணியவான் இனம், மனித குலத்தை பூமிக்கு கொண்டு வந்து ‘பொத்’துன்னு போட்டிருக்கணும்.

2. விண்வெளியில் ஒரு வேற்றுகோளில் வாழ்ந்த மனித இனம் ரொம்ப சண்டைக்கார இனமாக இருந்திருக்கணும். ஓவரா அமளிதுமளி பண்ணி அடங்காம குற்றம் செய்யுற சிறுவர்களை, கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பாங்க இல்லையா? அதேப்போல, பூமியை மனிதகுலத்தின் கூர்நோக்கு இல்லமா சில ஏலியன்கள் தேர்வு செய்து மனிதகுலத்தை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கணும்.

இப்படி இரண்டு கணிப்புகளை முன்வைக்கிறார் எலிஸ் சில்வர்.
‘புவிக்கோளத்தில் வேறு எந்த உயிர்களுக்கும் இல்லாத அறிவு மனிதகுலத்துக்கு மட்டும்தான் இருக்கு(!) இது ஏலியன்கள் கிட்ட இருந்து வந்த ‘விட்டகுறை தொட்டகுறையான அறிவு’ங்கிறார் அவர்.

ஏலியன்கள் எல்லாம் சிறை வார்டன்கள் மாதிரி. அவங்க அப்பப்ப பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து, ‘எப்பிடிப்பா இருக்கீங்க?’ன்னு நம்மை எல்லாம் பார்த்திட்டு போறாங்கன்னு சொல்கிறார் எலிஸ் சில்வர். (வார்டன்னா அடிப்போம் என்கிற வடிவேல் காமெடி எல்லாம் இங்கே எடுபடாது! நடக்காது)

‘புவிக்கோளத்திலே இப்படி மனித குலத்தை விட்டுவைச்சா, நாளடைவிலே அவங்க நல்ல பழக்கங்களைக் கத்துக்கிட்டு நாகரீகமாக நடந்துக்குவாங்கன்னு ஏலியன்கள் ஒருவேளை நினைச்சிருக்கலாம் (ஆசையப் பாரு!).

ஆனா, அவங்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் கிடைச்சிருக்கும்’ என்கிறார் எலிஸ் சில்வர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். மனிதர்கள் வேற்றுலகத்தைச் சேர்ந்தவங்கன்னு சொல்றதுக்கு அழுத்தமான இன்னொரு அடையாளமா இருக்கிறது மனிதர்கள் பூமியிலே செய்யுற சுற்றுச்சூழல் சீர்கேடுதான்.

‘என்னோட உலகம் இது இல்லை. இது சும்மா தற்காலிக உலகம். என்னுடைய உண்மையான உலகம் வேற எங்கேயோ இருக்கு’ என்கிற நினைப்பு மனிதர்களோட மரபணுக்களில் இருக்கு.

அதனாலத்தான் மலையை வெட்டு! காட்டை அழி! கடல்ல குப்பையைக் கொட்டு!’ன்னு ஒருவித மமதையோட திரியுது மனிதகுலம்.

இப்படி, ‘எனக்கென்ன?’ என்று காட்டையும் மலையையும் கடலையும் அழிப்பவன், விண்ணில் இருந்து ஏலியனால் இறக்கி விடப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும்.

எலிஸ் சில்வர் சொல்வது ஒருவேளை உண்மைதானோ என்று எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like