ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய் மற்றும் ஆதிரா ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘வீரன்’ திரைப்படத்தில் நடிகர் சசி செல்வராஜின் நடிப்பு நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
2016 இல் யூடியூபராக தனது பயணத்தை எளிமையாக தொடங்கிய சசி அவரது பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.
“நான் 2016இல் யூடியூபராக வாழ்க்கையைத் தொடங்கினேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
எனது யூடியூப் சேனல் அப்படித்தான் தொடங்கியது. கண்டெண்ட் கிரியேஷன் செய்து வந்ததால் ஒன்றிரண்டு குறும்படங்களிலும் வேலை செய்தேன்.
இதன் மூலம் ட்ரீம் வாரியரின் ‘வட்டம்’ படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்தேன்.
இருப்பினும், கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்பு, லாக்டவுன்கள் நீக்கப்பட்டவுடன், ஆஹாவில் ‘அம்முச்சி 2’ இல் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த சமயத்தில்தான் எனக்கு ‘வீரன்’ படத்துக்கு அழைப்பு வந்தது” என்றார்.
மேலும் அவர், “ஹீரோவின் நண்பன் என்பதையும் தாண்டிய ஒரு கதாபாத்திரம்தான் சக்கரை.
அவன் பெயருக்கு ஏற்றபடி ஒரு இனிமையான பையன். குமரன், செல்வி மற்றும் சக்கரை கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்குள்ளான பிணைப்பு மற்றும் அவை எவ்வாறு கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன என்றபடி படம் தொடங்கும்.
சக்கரை தனது ஊரில் சலூன் வைத்திருப்பதால், உள்ளூர் நகர பையனின் உடல் மொழியை துல்லியமாக படம் பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இயக்குநர் வலியுறுத்தினார்.
எனது நடிப்பு பொருத்தமாகவும் யதார்த்தமாகவும் இருப்பதை உறுதி செய்ய கிராமப்புற சலூன்களில் பணிபுரியும் நபர்களின் உடல்மொழியை கவனித்து அதுபோல நான் நிறைய முயற்சி செய்தேன்.
வசனங்களையும் படப்பிடிப்பிற்கு முன்பே நான் தெளிவாக ரிகர்சல் செய்துவிடுவேன். நான் பார்வையாளர்களுடன் சேர்ந்து தியேட்டரில் படத்தைப் பார்த்தபோது, பலர் என்னை அணுகி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.