திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தையொட்டி மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று துவங்கியது.
இதனை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ரிப்பன் பெட்டி துவக்கி வைத்தார். அவருடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சிவிங்கி ஆகிய உருவங்கள் பல லட்சம் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதோடு காட்டெருமை, வரிக் குதிரை, டோரா புஜ்ஜி பொம்மை போன்ற உருவங்கள் காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் காய்கறிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்கா முழுவதும் பூத்துள்ள வண்ண மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
துவக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வழிப் பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.