எம்.ஜி.ஆர். ‘தானம்’ செய்த சினிமா தலைப்புகள்!

சினிமாவை ‘கனவுத் தொழிற்சாலை’ என்பார்கள்.

மற்றவர் தீட்டிய கதை, பாடல், இசை போன்ற வடிவங்களை, எந்தவித உறுத்துதலும் இன்றி களவாடி, தங்கள் படங்களில் சில கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதால், ‘களவுத் தொழிற்சாலை’ என சினிமாவை அழைப்பதில் தவறேதும் இல்லை.

மற்றவர் தயாரித்த சினிமாவின் தலைப்பை, இன்னொருவர் மீண்டும் தமிழில் பயன்படுத்த தடை உண்டு.

ஆனால் பாடல் வரிகளை தலைப்பாக சூட்ட கோடம்பாக்கத்தில் தடுப்புகள் இல்லை.

அதனால் தானோ என்னவோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சாகாவரம் பெற்ற பாடல் வரிகளை அவ்வப்போது பெரிய டைரக்டர்களும், சின்ன டைரக்டர்களும் தங்கள் படங்களின் தலைப்பாக்கி கொண்டு விட்டனர்.

அப்படி வெளியான சில படங்கள் குறித்த பார்வை:

வேட்டையாடு விளையாடு

‘அரசக்கட்டளை’ படத்தில் இடம் பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ பாடல் இன்றளவும் ரசிகர்களை சுண்டி இழுத்து சொக்கவைக்கும் பாடலாகும்.

தனது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த இந்தப்படம். 1967 ஆம் ஆண்டு வெளியானது.

கே.வி.மகாதேவன் இசையில் ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்தான் ‘வேட்டையாடு விளையாடு’.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு, அந்தப்பாடலை, தான் இயக்கிய படத்தின் தலைப்பாக வைத்தார், கவுதம் வாசுதேவ் மேனன்.

கமல்ஹாசன்; ஜோதிகா நடித்த இந்தப்படம் வசூலை வாரிக் குவித்தது.

கமலின் சில படங்களின் தலைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், படத்தின் துவக்கவிழாவில் பங்கேற்று பேசிய கமல், ‘வேட்டையாடு விளையாடு’ தலைப்பை ரொம்பவே சிலாகித்தார்.

பச்சைக்கிளி முத்துச்சரம்

சரத்குமார் – ஜோதிகா நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’

எம்.ஜி.ஆரின் பாடல் வரியை தலைப்பாக்கிய ’வேட்டையாடு விளையாடு’ அபார வெற்றி பெற்றதால், புரட்சித்தலைவரின் மற்றொரு சூப்பர் ஹிட் பாடலான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலை தனது அடுத்த படத்துக்கும் சூட்டி, 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார் மேனன்.

முதலில் இந்தப் படத்துக்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சிலந்தி, பருந்து என்பவை சில தலைப்புகள்.

எம்.ஜி.ஆர். பாடலைத்தான் வைக்க வேண்டும் என்கிற ப்ராப்தம் இருக்கும் போது, அதனை மாற்ற முடியுமா என்ன?

டிக்.டிக்.டிக்

எம்.ஜி.ஆர் – கே.ஆர்.விஜயா நடிக்க, சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த படம் ‘நல்லநேரம்’.

கே.வி.மகாதேவன் இசை அமைக்க கண்ணதாசன் எழுதிய பாடல் ‘டிக்..டிக்.டிக்’.
அழகாக படமாக்கப்பட்டிருந்த பாடல்.

இந்தப் பாடல் வரியை பாரதிராஜா, தனது கிரைம் ‘சப்ஜெக்ட்’ படத்துக்கு தலைப்பாக வைத்தார். கமல்ஹாசன் – மாதவி, ராதா ஸ்வப்னா  உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாலிவுட் பாணியில் பாரதிராஜா மிரட்டி இருந்தார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த சமயத்தில் (1981) தீபாவளி தினத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

இதே பெயரில் ஜெயம் ரவி நடித்த படம், 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.

நீங்க நல்லா இருக்கணும்

அ.தி.மு.க.வின் கொடி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்ற பாடல் – ’நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்ற பாடல். இதயக்கனி படத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகம் ஆகும் பாடல் இது.

கருவறையில் இருந்து கடலில் கலப்பது வரை காவிரித் தாயின் பல்வேறு கோணங்களை, வடிவங்களை, பிரமிப்பூட்டும் வகையில் சித்தரித்த பாடல்.
எம்.எஸ்.விசுவநாதன் இசை.

இந்த பாடல் ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற தலைப்பில் படமாகி, விசு இயக்கத்தில் உருவாகி 1992 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்துக்கும் எம்.எஸ்.விசுவநாதனே இசை அமைத்திருந்தார் என்பது சிறப்பு.

தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரான படம்.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்தப்படத்தில், முதலமைச்சராகவே நடித்திருப்பார் என்பது மற்றொரு சிறப்பு.

– பி.எம்.எம்.

You might also like