சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘லவ்டுடே’ படத்தைத் தவிர்த்து பார்த்தால், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வெளிவந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும்.
முதல் தட்டு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் என அனைவருமே ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே ஆர்வம் காட்டுவதால், தமிழ்த் திரையில் காதல் என்பது காலாவதி சமாச்சாரமாகி விட்டது
‘விக்ரம்-2’ படத்தில் எனது பங்காக மட்டுமே 80 கோடி கிடைத்தது என கமல்ஹாசன் பகிரங்கமாக அறிவித்த பின், சினிமா என்றால் ஆக்ஷன் என அர்த்தமாகி இருக்கிறது.

அன்றைய உயரங்களை விஜய்யும் அஜித்தும் எட்டுவதற்கு காதல் திரைப்படங்களே விதை போட்டன. அதனை நட்டவர்கள், இன்றைக்கு முகவரி இல்லாமல் போய்விட்டார்கள் என்பது சோகமான உண்மை.
இரண்டு கலெக்ஷன் கதாநாயகன்கள் கொடுத்த காதல் படங்களையும், காணாமல் போன அதன் இயக்குநர்களையும் நினைவு படுத்துகிறோம்.
விஜய்
டூரிங் டாக்கீஸ் தியேட்டர்களில் மட்டுமே ஆரம்பகாலத்தில் அறியப்பட்ட விஜய்யை, ‘ஏ –கிளாஸ்‘ ரசிகர்களிடம், கொண்டு போய் சேர்த்த முதல் படம் ’பூவே உனக்காக’.
விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த வெள்ளி விழாப் படம். அதன் இயக்குநர் விக்ரமன். படங்கள் இயக்கி ஆண்டுகள் பல ஆயிற்று.
அண்மையில் வெளியான ‘லவ்டுடே’க்கு முன்னதாகவே பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் விஜய்க்கு ‘லவ்டுடே’ படத்தை கொடுத்தவர் பாலசேகரன்.
இதுவும் வெள்ளிவிழாப்படம் தான். இரண்டாவதாக இவர் இயக்கிய ‘துள்ளித்திரிந்த காலம்’ சரியாக போகவில்லை. எனவே தெலுங்கு பக்கம் போனார்.
அங்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. உச்சம் சென்று விட்ட விஜய், பாலசேகரனுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. இன்று, பிரபல இயக்குநர்களின் கதை விவாதங்களில் கலந்து கொண்டு காலம் ஓட்டுகிறார் பாலசேகரன்.

‘காதலுக்கு மரியாதை’யும், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படமும் தமிழில் வெளியான காதல் காவியங்களில் முக்கியமானவை.
இவை – விஜயின் ‘டாப்டென்’ படங்களில் முதல் வரிசையில் நிற்பவை.
அவற்றை கொடுத்த பாசில் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை.
மனதை துள்ள வைத்த எழிலுக்கு, அதன்பின் சொல்லிக்கொள்ளும் படியாக படம் அமையவில்லை.
அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் என ஜெயிக்கும் குதிரைகளின் முதுகில் ஏறி, இப்போது பயணிக்கிறார் விஜய்.
அஜித்
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் முதல் தமிழ்ப் படம் ‘அமராவதி’. இயக்கியவர் செல்வா. அற்புதமான காதல்கதை. வணிக ரீதியாக ஜெயிக்கவில்லை.
இதனால் செல்வாவும் ஜெயிக்கவில்லை. ஆனால் அஜித் எங்கேயோ சென்று விட்டார்.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ‘ஆசை’. வசந்த் இயக்கினார்.
இன்றைக்கும் பேசப்படும் படமாக ஆசை உள்ளது. ஆனால் வசந்தை மறந்து விட்டார்கள்.
வான்மதியை தொடர்ந்து அஜித்தும், இயக்குநர் அகத்தியனும் இணைந்த இரண்டாவது படம் ‘காதல்கோட்டை’.
தமிழ்த்திரை உலகை புரட்டிப்போட்ட படங்களில் இதுவும் ஒன்று.
தோல்விப் படம் கொடுத்த டைரக்டருடன், மீண்டும் ஹீரோக்கள் சேர்வதில்லை. பெரும் வெற்றி தந்த அகத்தியனுடன், அதன் பின் அஜித் ஏன் இணையவில்லை?.

‘இதை நீங்கள் அஜித்திடம் தான் கேட்க வேண்டும்’ என புன்னகையுடன் சொல்லும் அகத்தியன்,
“காதல் கோட்டையில் நான் பழகினவரைக்கும் அஜித் எனக்கு பிடிச்ச நேர்மையான நல்ல மனிதர்.
இப்போது அவருக்கும், எனக்கும் நேரடியான தொடர்பு இல்லை’’ என முடித்துக் கொண்டார்.
அஜித்தை வைத்து நான்கு வெற்றிப்படங்கள் தந்த சரண் இப்போது என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.
வாலி எனும் சூப்பர் டூப்பர் படத்தை அஜித்துக்கு கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, இப்போது முழு நேர நடிகராகி விட்டார்.
விஜய் போன்று அஜித்தும் இப்போது வெற்றிக்குதிரைகளில் மட்டுமே சவாரி செய்து கொண்டிருக்கிறார்.
அதுதான் சினிமா.
– பி.எம்.எம்.