சூடானில் இருந்து மீட்கப்பட்ட 247 தமிழர்கள்!

மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “சூடான் உள்நாட்டு போரால் அங்கு வசித்த தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவித்தனர்.

அவர்களை மீட்கக் கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு தொடர் கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் ஆணைப்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் ஒருங்கிணைப்பில் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் சூடானில் உள்ள தமிழர்களுடன் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டு,

அதன் தொடர்ச்சியாக சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரக்கூடிய பணிகள் ஒன்றிய அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு வரும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் புதுடெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் மற்றும் சென்னை, அயலகத் தமிழர் நலத்துறையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் புதுடெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் கடந்த 5ம் தேதி வரை வந்தடைந்த 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் மாநில அரசின் சார்பாக விமானங்கள் மூலமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்” என்றும் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like