ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட அரியலூர் ஆஞ்சநேயா் சிலை!

கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த வெள்ளூா் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயா் ஆகிய உலோகச் சிலைகள் திருடுபோனது. இது தொடா்பாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து வந்தனா்.

இதில், திருடுபோன ஆஞ்சநேயா் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள தனிநபரிடம் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னா், ஆஞ்சநேயா் சிலையை மீட்ட காவல் துறையினா், அதனை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குக்காக ஒப்படைத்தனா்.

இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவையடுத்து, ஆஞ்சநேயா் சிலையை வெள்ளூா் கிராம மக்கள் முன்னிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநா் சைலேஷ்குமார் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்த உலோகச் சிலையை  பொதுமக்கள் வீதியுலாவாக கொண்டு வந்து, சிறப்பு பூஜைகள் செய்து கோயிலில் வைத்தனர்.

You might also like