முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவில் சர்வீஸ் உயரதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன்.
ஆறு பாடங்களிலும் நூறு சதவீதம் எடுத்துப் பிரமிக்க வைக்கும் சாதனை படைத்திருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினி ஒரு தினச் சம்பளம் வாங்கும் தச்சரின் மகள்.
எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்திருக்கும் இந்தக் குழந்தை என்கிற சிந்தனை மனதில் சுழலுகிறது.
“கல்வி தான் உன்னுடைய செல்வம்” என்று அவளது அப்பா அடிக்கடிச் சொல்லுவதே நந்தினிக்கு ஊக்கம் தந்ததாம். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
ஆனாலும், நந்தினியின் சாதனை அவருடைய தனிப்பட்ட பயணத்துக்கு மட்டுமே முக்கியம் அல்ல. காலம்காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜனங்கள், அந்த வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்யமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், கல்வி வாய்ப்புகள் இன்னும் பரவலாகக் கிடைக்கச் சமுக நீதியின் அடிப்படையில் மாற்றங்கள் வேண்டும் என்பதையும் அடிக்கோடு இடவும் இந்த விஷயம் பயன்படவேண்டும்.
பல நூற்றாண்டுகளாக, சமூகத்தின் சில குழுக்கள் மட்டும் கல்வி வாய்ப்புகளை ஏகபோகமாக்கி, மற்றவர்கள் அவற்றை அணுகுவதைத் தீவிரமாகத் தடுத்து வைத்திருந்தார்கள்.
இதை வைத்து “நாங்கள் பிறவியிலேயே மகா புத்திசாலிகளாக்கும்” என்கிற கட்டுக் கதையைப் பரப்புகிறார்கள்.
இதற்கும் மேலே, “ஆமா, நமக்கெல்லாம் எங்கே படிப்பு வரப்போகுது” என்று மற்றவர்களை நினைக்க வைத்து மனங்களைத் துவளச் செய்கிறார்கள்.
ஆனால் நந்தினி போன்றவர்களின் கதைகள் இந்த தீங்கு விளைவிக்கும் கட்டுக் கதைக்குச் சவால் விடுகின்றன.
எல்லோருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றன. அதனால்தான் நந்தினியின் கதையை ஒரு தனிமனித சாதனை பற்றிய விஷயமாக நாம் குறுக்கிவிடக்கூடாது.
கல்வி வாய்ப்புகளின் ஏற்றத்தாழ்வுகள் குறைவதும் கல்வி அமைப்பில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதும் “பிறப்பிலேயே உயர்ந்த குடி” என்கிற கட்டுக்கதைகள் உடைவதும் சீக்கிரம் நடக்கவேண்டும்.
நந்தினிக்கு மீண்டும் வாழ்த்துகள். எதிர்கால நந்தினிகளுக்கும் என்று எழுதியுள்ளார் ஸ்ரீதரன் மதுசூதனன்.