மே 6 – சர்வதேச ‘நோ டயட்’ தினம்
ஆரோக்கியமும் கவர்ச்சிகரமான தோற்றமும் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை.
பல நேரங்களில், அப்படியான மெனக்கெடல்களே இரண்டையும் எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகின்றன.
கடுமையான உணவுக் கட்டுப்பாடும் அவற்றில் ஒன்று. ‘டயட்’ என்று சொன்னால் இன்றைய தலைமுறைக்கு எளிதில் புரியும்.
கொஞ்சம் அதிகமாக உணவு உண்டாலே, கண்ணாடி முன் நின்று பக்கவாட்டில் தொப்பை பெரிதாகிவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது.
அதேநேரத்தில், ‘எதையும் ஒருமுறை ருசித்துவிட வேண்டும்’ என்ற கட்டுப்பாடற்ற சுகபோக மனநிலையும் பரவலாகிவிட்டது.
ஒன்றுக்கொன்று நேரெதிரான இவ்விரு விஷயங்களைக் கையிலெடுத்தவர்கள் தான், ‘டயட்’ என்ற விஷயத்தை வியாபாரத்திற்கான கருப்பொருளாக மாற்றியிருக்க வேண்டும். அதனால்தான் எத்தனை விதமான குழப்பங்கள்?
யார் கண்டறிந்தது?
பொதுவாகவே, பிடித்தமான உணவுகளை அதிகமாகச் சாப்பிடும் வழக்கம் பலரிடம் உண்டு.
‘உணவே மருந்தே மருந்தே உணவு’ என்றிருந்தவரை, இவ்விஷயத்தினால் எந்த பதற்றமும் இல்லை. எப்போது விளம்பரங்கள் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதுதான் ‘டயட்’ என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் புகுந்தது.
காலையில் பழையசோறு சாப்பிட்ட காலம் மலையேறி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளையே உண்ண வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது.
பிறகு, மக்காச்சோளத்தில் செய்யப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.
மாலை 6 மணிக்கு மேல் இரவு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு மீறப்பட்டபோது, நள்ளிரவில் அதிக கலோரிகள் உள்ள உணவை உண்பது பிரச்சனையாகிப் போனது.
டயட் பற்றிய விவாதம் எழுந்தாலே, ‘இந்த கலோரிய எவன்யா கண்டுபிடிச்சது’ என்ற கேள்வி பலருக்குள் எழும்.
இன்று, ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் கலோரி கணக்கு அட்டவணை இருப்பது வாடிக்கையாகிவிட்டது. எதைத் தின்றாலும், அந்த அட்டவணையையைக் கையிலெடுக்கும் வழக்கம் வந்துவிட்டது.
‘ஒல்லியான உடம்பு இருந்தா தேவையில்ல பார்மசி’ என்பது பிரபுதேவாவுக்கு வேண்டுமானாலும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், அது எல்லோருக்குமானது என்ற எண்ணம் எப்போது பரவலானது என்று நினைவில்லை.
அதன்பிறகே, உணவில் கார்போஹைட்ரேட்டை குறைக்கலாமா அல்லது கொழுப்பைக் குறைக்கலாமா என்ற கேள்வி பிறந்தது. புரதத்தை எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்வது என்ற ஆய்வுகள் அதிகமாகின.
முழுக்க கொழுப்பையே சாப்பிடுவதும், பச்சைக்காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவதும், சைவ உணவுகள் உண்பதுமாகப் பல்வேறு ‘டயட்’ முறைகள் தோன்றின.
உடலின் இயக்கத்தையே குழப்பிச் சிறப்பான உடல்வாகைப் பெறும் வகையில், ஒருநாள் இஷ்டத்திற்கு உள்ளே தள்ளுவதும் மறுநாள் பத்தியம் இருப்பதுமாக ஒரு வழக்கமும் உண்டானது.
இப்படி டயட் வகைகளைப் பலவாறாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
டயட்டை பின்பற்றும் பலர் ஒன்றை மட்டும் மறந்துவிடுகின்றனர்; உணவை ஆற அமர ரசித்து, ருசித்து, புசித்து உண்ண வேண்டும் என்பதே அது; அதனைக் கைக்கொண்டாலே ஆரோக்கியத்தில் பாதி உறுதியாகிவிடும்.
சரியாகச் சாப்பிடுவோமா?
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’, ‘நோயைக் கட்ட வாயைக் கட்டு’, ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’, ‘நாழி அரிசி சோறு உண்டான் எமனுக்கு உயிர் கொடான்’ என்பது உட்படப் பல பழமொழிகள் நமது உணவுண்ணும் பழக்கத்தைச் செம்மைப்படுத்துவதற்கானவை. ‘கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பதையும் கூட இவ்வரிசையில் சேர்க்கலாம்.
அதிகாலையில் எழுந்து குளித்து பசியறிந்து உணவுண்டு, மீண்டும் பசிக்கும் வரை காத்திருந்து வேலைகள் ஆற்றிப் பின் உணவை நுகர்ந்து பழங்கதைகள் பேசி, மனதையும் உடலையும் இலகுவாக்கி உறங்கச் செல்லும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது.
இன்று, காணொளிக்கான தொழில்நுட்பங்கள் அவற்றை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டன.
அவித்த உணவுகளை விட எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளுக்கே அதிக மவுசு. அவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் உத்வேகத்தில் உற்சாகமூட்டும் பானங்களை அருந்தும் கூட்டமும் இன்று அதிகம்.
இன்னொரு பக்கம், அதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம் என்ற பயத்தில் ஜிம்மே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. பல்வகை டயட்களை பின்பற்றி, உடலைப் பாழ்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.
டயட் முறைகளால் தலைவலி, அதீத வாயு, வயிற்றுப் பிடிப்பு, மனநிலை மாற்றம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், சத்துக் குறைபாடுகள், உறக்கமின்மை, உடல்சோர்வு மற்றும் மனசோர்வு என்று பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனாலேயே, ‘ஏன் இந்த டயட்’ என்ற கேள்வியும் சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகமாகிறது.
நேரம் பார்த்துச் சாப்பிடுவதைக் கைவிட்டு, வயிற்றில் பசி பிறந்துவிட்டதா என்றறிந்து உண்பதே இதற்கான தீர்வு. எங்கும் எதிலும் வேகம் என்றிருப்பவர்களிடம், அதற்கான பொறுமை எங்கே இருக்கிறது?
தோற்றம்தான் அழகா?
ஒருகாலத்தில் எத்தனை ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமே முக்கியம் என்ற மனப்பாங்கு பலரிடம் இருந்தது. இன்று, லேசாகச் சதை போட்டாலே பருமன் வந்துவிட்டதா என்ற கவலை தொற்றிவிடுகிறது.
கவர்ச்சிகரமான ஆண், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மாயை, கடந்த முப்பதாண்டுகளில் பூதாகரமாகிவிட்டது. விளைவு, சிக்கென்ற தோற்றமே சீரான உடல்நலத்திற்கான வழிமுறை என்ற கருத்து பரவிவிட்டது.
நிறம், வடிவம், எடை போன்றவை மனித வாழ்வில் ஒரேமாதிரியாக நீடிக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அதுதான் தேவை என்கிற எண்ணம் பெருகியதால் ‘டயட்’ போன்ற வார்த்தைகளும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டதாகிவிட்டன.
1992ஆம் ஆண்டு, ‘தோற்றம்தான் ஒரு மனிதரது அழகைத் தீர்மானிக்குமா’ என்ற சிந்தனை பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஈவான்ஸ் யங் என்பவரைத் தொற்றியது.
பருவ வயதில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, உடனடியாக வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுக்கும் ‘அனரெக்ஸியா நெர்வோஸா’ பாதிப்பு அவரிடம் இருந்தது.
தோற்றம் சார்ந்த, எடை சார்ந்த, உணவுண்ணுவது சார்ந்த பயமே அதன் பின்னிருந்தது.
கொஞ்சம் வயிறு மேடிட்டாலும், எடை குறைப்பு அறுவைச் சிகிச்சைகளை நாடும் வழக்கம் பெருகத் தொடங்கியிருந்தது. அந்த காலகட்டத்தில், பல பிரச்சனைகளை எதிர்கொண்டார் யங்.
‘டயட் என்ற ஒன்று இருப்பதால் தானே இத்தனை பிரச்சனை’ என்று அதற்கெதிரான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார் யங்.
முதலில், மே 5ஆம் தேதியன்று ‘நோ டயட் தினம்’ அனுசரிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அது பின்பற்றப்பட்டபோது, மே 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இன்று, உணவுக் கட்டுப்பாடு பற்றிய கவலைகள் ஏதுமில்லாமல் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வுமுறையைக் கைக்கொள்ளும் எண்ணம் பெருகி வருகிறது. அவர்களாலேயே, உலகம் முழுக்க ‘நோ டயட் தினம்’ கொண்டாடப்படுகிறது.
‘டயட்’ போலவே இந்த எண்ணப்பரவலையும் வர்த்தகமாக்கும் உத்வேகத்தோடு, சில நாடுகளில் ஹோட்டல் உரிமையாளர்கள் ‘அன்லிமிடெட் உணவு’ சலுகைகளை அள்ளி வழங்குவதும் நிகழ்கிறது. அதைத் தவிர்க்க முடியாது என்றபோதும், அந்த சூட்சமங்களை அறிவது உத்தமம்.
’உலகத்தோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழியை ‘டயட்’ போன்றவற்றுக்காகப் பின்பற்றுவது சரியானதாக இருக்காது.
ஏனென்றால், உணவுண்ணுதலில் அரசியலும் வணிகமும் தலையிடத் தொடங்கியபோது பிறந்த வார்த்தையே ‘டயட்’.
இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று விதிமுறைகள் வகுப்பது தனிமனித உரிமை மீதான அத்துமீறல்.
அதனைப் புரிந்துகொண்டவர்கள், ரொம்பவே மௌனமாக ‘நோ டயட்’ என்பதனை தங்களது வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களது வழியில், ’பசித்தபின் புசி’ என்பதனை எப்போதும் பின்பற்றுவோம்; மனதின் விருப்பத்திற்கேற்ப உணவுண்டு மகிழ்வோம்!
– உதய் பாடகலிங்கம்