திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

முன்னதாக, வெளியான இந்தப் படத்தின் ‘டீசரில்’ கேரளத்தில் இருந்து இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவா்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சோ்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்தத் திரைப்படம் வெளியானால், தமிழகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் திரையரங்குகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சமூக ஊடகங்களில் திரைப்படத்தை விமா்சிப்போரை கண்காணிக்க வேண்டும் எனவும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அது குறித்த தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனா்.

You might also like