மருக்களை எப்போது நீக்க வேண்டும்?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

மருக்களை எப்போது நீக்க வேண்டும்?

முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம். என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாகத் தென்படும்.

மேலும், உடலில் மடிப்புகளுள்ள பகுதிகளில் உருவாகும். இவை மச்சம் போன்று சிறு அளவில்தான் தென்படும். இவற்றால் சருமத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

ஆனால் முகத்தின் பொலிவை மருக்கள் கெடுத்துவிடும். சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வைரஸ் கிருமியின் தாக்கம், வயது முதிர்வு, வியர்வையோடு இருப்பது, முறையான பராமரிப்பு இல்லாமை போன்ற பலவித காரணங்களால் மரு உருவாகும். சருமத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததும் மரு ஏற்பட முக்கிய காரணம்.

மருக்களின் அளவு பெரிதாகும்போது, அந்த இடத்தில் வடு உருவாகி விடலாம் என்பதால் அவற்றை நீக்கி விடுவது நல்லது. சரும மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தழும்புகள், கரும்புள்ளிகளை சிகிச்சை மூலம் நீக்கலாம்!

முகத்தில் ஏற்படும் பருக்களைக் கவனிக்காமல் விடும்போது நாளடைவில் அவை தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளாக உருமாறுகின்றன.

சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் சுரக்கும் எண்ணெய், சரும நுண் துவாரங்களை அடைத்திருக்கும் மாசு மற்றும் நுண்ணுயிரிகளுடன் சேர்ந்து சீழ் நிறைந்த சிறு சிறு கட்டிகளான பருக்களை உருவாக்குகின்றன.

இந்தப் பருக்களைச் சிலர் கைகளால் கிள்ளும்போது கட்டிகள் சிறுசிறு வடுக்களாக மாறிவிடுகின்றன.

மேலும் பரு கட்டிகள் சருமத்தின் கீழ் அடுக்கில் வெடித்து அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் பொலிவைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படுகின்றன.

முற்றிய பரு குணமடைந்து வரும் நேரத்தில் அதன் மீது சூரிய ஒளிபட்டால், கரும்புள்ளியாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரே தீர்வு, பருக்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். கரும்புள்ளி மற்றும் தழும்பாக மாறவிடக் கூடாது. பருவைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது.

மஞ்சள், பயத்த மாவு போன்ற கொர கொரப்பான பொருள்களைப் பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்கக்கூடாது. உங்கள் சருமத்துக்குத் தகுந்த ஃபேஸ்வாஷ், காஸ்மெடிக்ஸ் போன்றவற்றை தரமானதாக வாங்கிப் பயன்படுத்துங்கள்.
தழும்புகள், கரும்புள்ளிகளை சிகிச்சைகள் மூலம் நீக்க வழியிருக்கிறது. சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ளலாம்.

தாடையில் ரோம வளர்ச்சி… ஆரோக்கிய பிரச்சனை!

பெண்களில் சிலருக்குத் தாடை, உதட்டுக்கு மேலே உள்ள பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் முடி வளரலாம். இது ஹார்மோன் பிரச்சனையால் ஏற்படக்கூடும். குறிப்பாக இவை தைராய்டு மற்றும் பிசிஓஎஸ் (PCOS) போன்ற ஹார்மோன் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள்.

பெண்களுக்கு தாடி, மீசை வளர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டு தங்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனையைக் கண்டறிய வேண்டும்.

தாமதப்படுத்தாமல் அந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அந்த ரோமங்களை நீக்க விரும்பினால் சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி செயல்படவும். கைகளால் பிடுங்கி எடுப்பதைத் தவிர்க்கவும்.

செருப்பு, சாக்ஸ், ஸ்க்ரப்…

பாத வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், எடை குறைந்த, லெதர் செருப்புகளையே அணிய வேண்டும்.

அதேபோல், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துபவர்கள் இரவில் பாத வெடிப்பில் க்ரீமைத் தடவி அப்படியே விட்டுவிடாமல், மேலே சாக்ஸ் அணிந்து கொள்வது நல்லது.

குளிக்கும்போது பாதத்துக்குரிய ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி கால்களை லேசாக ‘ஸ்க்ரப்’ செய்யலாம்.

பாத வெடிப்பு… உடல் எடையும் காரணம்!

வறட்சியான தேகமும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணங்கள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும்.

நம் காலில் உள்ள சருமம் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி சருமத்தில் வெடிப்பு உண்டாகும்.

ஒரு சிலருக்குத் தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நீரிழிவாளர்கள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். காலையிலும் இரவிலும் பாதத்தை நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது.

வெண்புள்ளிகள்… யாருக்கும் ஏற்படலாம்!

சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ‘மெலனின்’ நிறமியின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்துபோவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் (Vitiligo) ஏற்படுகின்றன.

இது தொற்று நோயல்ல, ஒருவகை சருமக் குறைபாடே. இந்தப் பிரச்சனை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம். கை கால் முகத்தில் தொடங்கி இனப்பெருக்க உறுப்புகள் வரை எங்கு வேண்டுமானாலும் வெண்புள்ளிகள் ஏற்படலாம்.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், தைராய்டு, நீரிழிவு, வைட்டமின் பி-12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தச்சோகையின் தீவிர நிலை போன்ற பல காரணங்களால் வெண்புள்ளிகள் உடலில் உருவாகின்றன.

உங்கள் சருமத்தில் வெண்புள்ளிகள் ஏற்படும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சனைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

களிம்புகள், ஸ்டீராய்டு சிகிச்சை, அறுவை சிகிச்சை என பாதிப்புக்கு ஏற்ற வகையில் மருத்துவர் சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பார்.
இது மிக முக்கியம்!

எல்லாவற்றையும்விட, வெண்புள்ளி குறைபாடு ஏற்பட்டவருக்கு அவர் குடும்பத்தின் அன்பும் ஆதரவும் மிக முக்கியம்.

மனதளவில் அவர் சரிந்துபோகும்போது குடும்பமும் சுற்றமும், ‘இது ஒரு சருமக் குறைபாடு அவ்வளவுதான், இதனால் ஆரோக்கியத்தில் வேறு எந்தப் பிரச்னையும் ஏற்படப்போவதில்லை’ என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

– தொகுப்பு : மா.அருந்ததி
நன்றி: அவள் விகடன்

You might also like