பெண்களால் நடத்தப்படும் ‘தி ஸ்பிலைஸ்’ இசைக்குழு!

சக்சஸ் ஸ்டோரி 4:

சென்னையைச் சேர்ந்த இளம் பாடகரும் இசைக்கலைஞருமான தீபிகா தியாகராஜன், பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தி ஸ்பிலைஸ் என்ற இசைக்குழுவை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

தமிழ்த் திரையுலகின் பெருமைக்குரிய பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் பேத்திதான் தீபிகா. அவரது தந்தை டி.எல். தியாகராஜன் திரைப்படப் பாடகர். தாய் லதா பரதநாட்டிய கலைஞர்.

இசைக் குடும்பத்தில் பிறந்தவருக்கு இசை ஆர்வம் இல்லாமல் இருக்குமா? இசையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது தீபிகா, பிஎச்டி ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களின் மனநிலையை இசையால் மேம்படுத்துவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.

தன் கணவர் வினய் நாயருடன் சேர்ந்து ‘ஹேப்பி மைண்ட்ஸ் கஃபே’ என்ற மனநல ஆலோசனை மையத்தை நடத்திவரும் இவர், மனநலத்திற்கான சிகிச்சை முறையாக இசையையும் பயன்படுத்துகிறார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தந்தையுடன் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தியுள்ள தீபிகா, சமீபத்தில் ஆனந்தம் என்ற வெப் தொடருக்காகப் பாரதியார் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

‘ஊமை செந்நாய்’ என்ற படத்தில் ‘மழை வரும் வேளையில்’ என்ற பாடலின் குரல் இவருடையதுதான். சிவாவின் இசையமைப்பில் உருவான திருச்சி நகரின் அதிகாரப்பூர்வ ‘டக்கர் திருச்சி’ என்ற பாடலையும் அவர் பாடினார்.

நம்மிடம் பேசிய தீபிகா தியாகராஜன், “எங்கள் இசைக்குழுவின் டிரம்மராக இருப்பவர் ரினய் பிரசாத். அவர்தான் ‘தி ஸ்பிலைஸ்’ குழுவின் முதல் விதை. நான் மட்டும் தனியாக இந்த இசைக்குழுவைத் தொடங்கவில்லை.

ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கம்யூனிட்டியாக தொடங்கினோம். பெண்கள் இசைக் குழு பற்றிய எண்ணத்தை விதைத்தவர் ரினய் பிரசாத். அடுத்து தோழி பியானிஸ்ட் ஸ்டெர்லின் நித்யா, இந்த இசைக்குழு பற்றி விளக்கமளித்தார்.

அப்போது, “முதலில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே குழுவில் இருந்தோம். பிறகு எல்லோரும் எங்களுடன் இணைந்தார்கள். மார்ச் 8-ம் தேதியன்று தி ஸ்பிலைஸ் பேண்ட் தொடங்கினோம். அதற்குள் அதிக அளவில் நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்புகளைப் பெற்றோம். இரண்டு நாட்கள் தொடர்ந்து 5 மணி நேரம் இசை நிகழ்ச்சிகள் செய்தோம். இது சாதாரண விஷயமல்ல.

இசை நிகழ்ச்சிகளைத் தவிர, தனிப் பாடல்களை இயற்றி, இசையமைத்துத் தயாரிக்கும் முயற்சிகளில் இருக்கிறோம். இப்போது ஐந்து பேர் குழுவில் இருக்கிறோம். நான் குழுவில் இருந்தாலும், தனியாகவும் பாடல்களை எழுதி கம்போசிங் செய்துவருகிறேன். எனக்கு பியானோவும் வாசிக்கத் தெரியும்.

தமிழில் மட்டும் பாடாமல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் பாடுகிறோம். சில நிகழ்வுகளில் ஆங்கிலப் பாடல்களை மட்டுமே பாடுவோம். இப்படி பலரும் நிகழ்ச்சிகளைச் செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். சிலர் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களைக் கேட்கிறார்கள்.

பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பெண்கள் இசைக்குழுக்கள் இயங்குகின்றன.

ஆனால், சென்னையில் நாங்கள் மட்டும்தான் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். வருமானமும் மெல்ல உயர்ந்துவருவதில் மகிழ்ந்திருக்கிறோம்” என்றார்.

– எஸ். சங்கமி

You might also like