– அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்!
பரண் :
மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன.
நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆவணங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை திறப்பதற்கு முன்னால் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு மானியம் கொடுக்கப்பட்டிருப்பதைச் சொல்கிறது ”புதுக்கோட்டை வரலாறு ” என்கிற நூல்.
இப்படி எத்தனை கோட்டைகள் கட்டிமுடிக்கபடுவதற்கு முன் எத்தனை உயிர்கள் சடங்கின் பெயரால் கொல்லப்பட்டிருக்கும்?
இது மட்டுமல்ல, ஏரிகள் வெட்டப்படுவதற்கு முன்னால் கூட நரபலிகள் கொடுக்கப்பட்டிருப்பது இன்னும் கொடூரம்.
”விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் நாகலாபுரம் என்ற இடத்தில் வெட்டப்பட்ட புதிய ஏரிக்காக சிறைச்சாலையில் இருந்த கைதிகளை ஏரியின் முன்னால் அமைந்திருந்த கோவில் முன்னால் நிறுத்தி வெட்டியிருக்கிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் அருகில் உள்ள பாளையத்தில் ஏரி வெட்டும்போது ஒட்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம் சிறுமியைப் பலியிட்டிருக்கிறார்கள்,
நரபலி கொடுத்த அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு ” ஒட்டம்மன்’ என்று பெயரிட்டு இன்றும் வணங்கப்படுகிறது.
இந்தச் செய்தி சேலம் ஜில்லா கெஜட் 120 ஆம் பக்கத்தில் காணப்படுகிறது.”
– கோ இமய வரம்பன் எழுதியுள்ள ‘இந்திய வரலாற்றில் ‘நரபலி’-ஓர் ஆய்வு’ என்ற நூலில் இருந்து..