டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 2
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து தான் முத்துகாபட்டி.
அந்தக் கிராமம் எப்படிச் சுரண்டப்படுகிறது, அதற்கு எப்படி சிலர் வியூகம் வகுத்துச் செயல்படுகின்றனர் என்பது மட்டுமல்ல எவ்வளவு பொதுச் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டு ஆதிக்க சக்திகளிடம் இருக்கிறது.
அதன் கிராமத்திற்கு விளையும் தீங்குகள் என்ன என்பது அனைத்தும் தெரிந்தவராக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
தன்னை மட்டும் தயார் செய்யவில்லை, மக்களையும் சேர்த்து தயார் செய்ய மக்களிடம் உண்மை நிகழ்வுகளை ஆதாரத்துடன மக்களிடம் கொண்டு சேர்த்தது இவரின் ஆழமான பார்வைக்கு சான்றாக விளங்குகிறது.
அது மட்டுமல்ல தான் பொதுப்பணியில் பைசா பார்க்க வரவில்லை என்பதை ஊர் மக்களுக்கு மட்டும் ஓங்கிச் சொல்லவில்லை, அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் எடுத்துச் சென்றுவிட்டார்.
இந்த நிலைப்பாடு தனக்கு மட்டும் உரம் சேர்க்கவில்லை, தான் செய்கின்ற அத்தனை பணிகளுக்கும் உரம் சேர்ப்பதாக அமைந்தது.
எந்தச் செயலுக்கும், மக்கள் மத்தியில் ஓர் ஆதரவைத் திரட்டுவது என்பதை வியூகமாக வைத்திருந்தார்.
கிராமத்தின் குடிதண்ணீர் பிரச்சினை உள்ளது. அதே நேரத்தில் சிலர் அந்த ஊரில் உள்ள பொது நிலத்தை ஆக்கிரமித்து போர் போட்டு நிலத்தடி நீரை எடுத்து வணிகம் செய்து கொண்டிருந்தனர்.
இதை மக்களிடம் எடுத்துச் சென்று, எப்படி நம் கிராம வளம் சுரண்டப்பட்டு வணிகமாக நடைபெறுகிறது என்பதை விளக்கி மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டார்.
தன் பஞ்சாயத்தில் உதவித் தலைவர் பதவிக்கு அந்த ஊரில் உள்ள ஆதிக்க சக்தியாக விளங்கும் சாதியிலிருந்து மிக நேர்மையான ஒருவரை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டது, பஞ்சாயத்துச் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கு மிகவும் பேருதவியாய் இருக்கிறது என்பதை அந்த ஊருக்குச் சென்று பார்த்தால் மிக எளிதில் விளங்கிவிடும்.
பஞ்சாயத்துச் செயல்பாடுகள் என்பது கிராமத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக அனைத்துப் பகுதிகளுக்கும் நடைபெறும் நிகழ்வுகளாகும்.
இதில் சாதிக்கோ மதத்திற்கோ, கட்சிக்கோ, பகுதிக்கோ உரியது அல்ல. ஒட்டுமொத்த கிராமத்தை மேம்படுத்தத்தான் பஞ்சாயத்து செயல்பட வேண்டும்.
இந்த செயல்பாட்டால் அனைத்துப் பகுதிகளும், அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்.
இதை மீண்டும் மீண்டும் விவாதித்துப் பேசிப்பேசி மக்களை சாதியின் கண் கொண்டும், கட்சியின் கண் கொண்டும் பஞ்சாயத்துச் செயல்பாடுகளை பார்ப்பதிலிருந்து பொதுநலன், அனைவர் நலன், அனைத்துப் பகுதி நலன் என்ற மையப் புள்ளியை நோக்கி நகர தயார் செய்துவிட்டார்.
நம் ஒட்டுமொத்த அரசியல் சாதியை, மதத்தை பணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது இந்தப் பஞ்சாயத்தில் மக்களை இவைகளிலிருந்து விடுவித்து பொதுநலம் சார்ந்து சிந்திக்கப் பழக்கிவிட்டார்.
இந்தச் சாதனை என்பது இமாலயச் சாதனையாகவே பார்க்கத் தோன்றுகிறது.
எனவே ஆக்கிரமிப்பை எடுத்து அங்கு மக்களுக்கு குடிநீர் தர திட்டமிட்டு செயல்பட்டபோது ஜாதியின் மூலம் மக்களிடம் பிளவை ஏற்படுத்த முனைந்தது தோல்வியைச் சந்தித்தது.
இதன் மூலம் ஒரு புதுச் செய்தியை சமூகத்திற்கு அந்தப் பஞ்சாயத்துத் தந்துவிட்டது.
இனிமேல் சாதியை வைத்து அறியாமையில் இருந்த மக்களை பிளவுபடுத்தி சுரண்டும் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒரு சாகசச் செயல்பாடு.
இந்தச் செயல்பாட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் சாதியைப் புறம் தள்ளி, பஞ்சாயத்து பக்கம் நின்றது, மக்களின் உளவியலில் மாற்றம் வருவதை உணர்ந்து செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தார் பஞ்சாயத்துத் தலைவர்.
பஞ்சாயத்து தீவிரமாக பணித்தளத்தில் செயல்பட ஆரம்பித்தபோது அதே ஊரிலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ்மக்களில் தன் ஊர் அமைதிக்கு திரும்புகிறது,
மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஊழலில்லாமல் நடைபெறுகிறது, ஊருக்கு உழைக்க நல்ல தலைவரும், அவருடன் வார்டு உறுப்பினர்களும் வந்துவிட்டனர் என்பதை உணர்ந்து கொடையாளர்களாக மாறி நிதி தர ஆரம்பித்துவிட்டனர்.
அவை பெருமளவில் வரத்துவங்கியவுடன் அந்த கொடையினை வைத்து ஒரு அறக்கட்டளையை நிறுவ பஞ்சாயத்துத் தலைவர் முற்பட்டது ஒரு புதிய வெளிச்சத்தை பஞ்சாயத்து நிர்வாகத்தில் பாய்ச்சியது.
அது மட்டுமல்ல அந்த அறக்கட்டளையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களையும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினராகச் சேர்த்து செயல்பட வைத்தது மிகப்பெரிய நம்பிக்கை தரும் நிகழ்வாக மக்களால் பார்க்கப்பட்டது.
பஞ்சாயத்துத் தலைவர் எல்லோருக்குமானவர், எல்லாக் கட்சிகளுக்குமானவராக உருவாகிவிட்டார்.
பல பஞ்சாயத்துச் செயல்பாடுகளுக்கு பஞ்சாயத்து நிதி பற்றாத நிலையில், இந்த அறக்கட்டளை அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நிதி தந்து பஞ்சாயத்து நிர்வாகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டது.
இந்த பஞ்சாயத்தை அறக்கட்டளையிலிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு செயல்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்கிவிட்டார்.
எதைக் கேட்டாலும், இதை இவர் செய்தார், அவர் செய்தார் என்று ஒவ்வொருவரையும் கைகாண்பிக்கின்றார்.
தான் ஒரு பஞ்சாயத்தின் ஓடும் பிள்ளைபோல் உருவகப்படுத்தி செயல்படுவதை ஒரு பக்குவமாக பார்க்க முடிகிறது.
கிராமத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தியது, பொதுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எடுத்த நடவடிக்கைகள், கற்றல் திறனை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு புது நம்பிக்கையைத் தந்தது.
பள்ளியில் மாணவர்களுக்கு உடல் நலம், மனநலம் பேண செயல்படும் திட்டங்களுக்கு இந்த அறக்கட்டளை நிதியளிப்பு என்பது அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைத் தந்தது.
அடுத்து குப்பைகளை உரமாக்கிட ஒரு புதிய திட்டத்தை துவங்கி செயல்படுத்தியது, செயல்பாட்டின் வேகத்தைத் தூண்டியது.
மாற்றங்கள் வருவதைக் கண்ட மக்கள் அளவு கடந்து பஞ்சாயத்தின்மேல் நம்பிக்கையை வைக்க ஆரம்பித்தனர்.
அடுத்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைச் செய்ய வேண்டி களத்தில் இறங்கினார் பஞ்சாயத்துத் தலைவர்.
½ ஏக்கர் நிலத்தில் கல்குவாரிக்கு அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்கி அந்த இடத்தில் உள்ள 14 ஏக்கர் நிலத்திலும் குவாரி தோண்டி கல் எடுக்கப்பட்டு அந்த இடமோ குண்டும் குழியுமாக இருந்தது.
அதனைக் கண்டுபிடித்து அந்த இடத்தை பஞ்சாயத்து எடுத்து கொடையாளர்களின் நிதியுதவியுடன் மிகப்பெரிய களத்தை உருவாக்கி குப்பை மேலாண்மை செய்துவருவது அடுத்த மைல் கல்லாக பார்க்கப்படுகிறது கிராமப் பஞ்சாயத்தின் செயல்பாட்டில்.
இதன் மூலம் ஏறத்தாழ 10 கோடி ரூபாய் உள்ள சொத்து பஞ்சாயத்துக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது ஒரு வரலாற்று சாதனையாகும்.
தான் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும் என எண்ணி தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருப்பது ஒரு வித்தியாசமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
பேரிடர் காலத்தில் பஞ்சாயத்து பொறுப்பேற்று மக்களை வெளியேற விடாமல் பாதுகாத்து, உணவு வழங்கி எந்த இறப்பும் இன்றி செயல்பட்டது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.
எல்லோருக்கும் முகக்கவசம் கொடுப்பது, பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது, இல்லம் தேடி உணவுப் பொருள்கள் தந்தது, துப்புரவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்தும் தாய்மை அரசு செயல்படுவதைப் போல் செயல்பட்டுள்ளது பஞ்சாயத்து.
– டாக்டர் க.பழனித்துரை
– (தொடரும்)