நலிந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரஜினி ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நன்றி தெரிவிக்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தபடவிருந்தது.

சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ம் தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவந்த நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்கமுடியாத சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அறிக்கையை வெளியிட்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.இரவி அவர்கள்.

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடும், வாழ்வாதாரமின்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்துதரப்பட்டது.

மேலும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட தேவையான ஊதுவத்தி தயாரிக்கும் இயந்திரம், இட்லி மாவு இயந்திரம், தையலியந்திரம் உள்ளிட்டவைகளும், மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டன.

You might also like