முழக்கத்தில் முடங்கிய நாடாளுமன்றம்!

அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.

நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். அதே சமயம் ஆளும்கட்சி எம்.பி.க்களும் ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். சுமார் 10 நிமிடம் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அவையை ஒழுங்காக நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக் கொண்டார். ஆனாலும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் அவையை மாலை 6 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கரிடம் 12 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அதை தன்கர் நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார். மேலும் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே  2023-24ம் ஆண்டிற்கான மொத்த செலவீனமான ரூ.45 லட்சம் கோடியை ஒன்றிய பட்ஜெட்டுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டிற்கான, நிதி ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி கோரினார். அப்போது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிதிமசோதா நிறைவேறியது.

You might also like