உதவுவதை நிறுத்தாமல் வாழ்ந்த வள்ளல் எம்ஜிஆர்!

– கவிஞர் முத்துலிங்கம்

புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

அதனால் தான் அவரது திரைப்படப் பாடல்கள் தலைமுறைகள் கடந்து இன்றைக்கும் பாடப்படுகிறது. கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்களால் சூழப்பட்ட எம்.ஜி.ஆரின் கவிதைத் தோட்டத்தில் பல புதிய திறமையாளர்களையும் வளர்த்தெடுக்க அவர் தவறவில்லை.

அந்த வரிசையில் வந்த மிக முக்கியமான கவிஞர் தான் முத்துலிங்கம். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக மேல்சபை உறுப்பினராகவும் அதன் பின்னர் தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் வகித்தவர் இவர்.

இந்த கௌரவமான பதவியில் கண்ணதாசன் உட்பட இதுவரை நான்கு கவிஞர்கள் மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் கவிஞர் முத்துலிங்கமும் ஒருவர். இந்தப் பதவியில் இருந்த கடைசிக் கவிஞரும் அவரே. எம்.ஜி.ஆர். உடனான தன் நீண்ட நெடிய பயணத்தில் இருந்து சில நினைவுகளை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்…

“தன் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு ஏன் கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்ற காரணத்தை ஒரு விழா மேடையில் எம்.ஜி.ஆரே சொன்னபோது தான் நானே தெரிந்து கொண்டேன்.

அது 1981ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருக்கிறார். எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது எம்.ஜி.ஆர். கைகளினால் வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் இப்படிப் பேசினார் தலைவர்.

“சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னர் கவிஞர் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர்.

1973ல் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுதினார். அதன் பிறகு கொஞ்ச நாளில் கொள்கை காரணமாக அவர் பத்திரிகை வேலையைவிட்டு விலகும்படியான சூழ்நிலை உருவானது.

அப்போது ஒரு நாள் என்னைப் பார்ப்பதற்காக தி.நகர் அலுவலகம் வந்திருந்தார். நான் வேறு சில முக்கியமான அலுவல்களில் இருந்ததால், வெளியில் இருந்தபடியே இன்டர்காமில் என்னுடன் பேசினார்.

“வேலையை விட்டுட்டீங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப சிரமமா இருக்குமே? கொஞ்சம் பணம் தரேன்… செலவுக்கு வச்சுக்குங்க” என்று நான் சொன்னதும், “பணமெல்லாம் வேண்டாம் பாட்டெழுதும் வேலை கொடுங்க” என்றார்.

“வேலையெல்லாம் அப்புறம் தர்றேன்… இந்தப் பணத்தை முதல்ல வாங்கிக்குங்க” என்றதற்கு, “பணம் வேண்டாம், வேலை கொடுங்க” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் படாரென நான் போனை வைத்துவிட்டேன்.

ஆனால் அந்தச் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. சினிமாத் துறையில் உள்ள பெரும்பாலான கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன். அதெல்லாம் அவர்களாகவே வந்து என்னிடம் கேட்டபோது தான் நான் செய்தேன். ஆனால் நானாக வலியப்போய் பண உதவி செய்தபோது அதை வேண்டாம் என்று மறுத்தவர் முத்துலிங்கம்.

உழைக்காமல் யாரிடத்திலும் எதையும் இனாமாக வாங்கக்கூடாது என்ற தன்மானம் மிக்க மனிதர் இவர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவருக்கு என் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்புகள் வழங்கத் தொடங்கினேன்.

கவிஞர் பாரதிதாசன் தன்மானத்துக்கு பேர்போனவர். அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை தன்மானம் மிக்க கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்காமல் வேறு யாருக்கு வழங்குவது” என்றார் எம்.ஜி.ஆர்.

இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்கிறார் முத்துலிங்கம். சொல்லும்போதே அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். எம்.ஜி.ஆர். அவர்களின் கொடைக் குணம் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவர், அவரது மனித நேயத்துக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்கு பாட்டெழுதிக் கொண்டிருந்தபோது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுப்போச்சு. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். என் கையில் இருந்ததோ ரெண்டு ரூபாய். எம்.ஜி.ஆரை பார்க்கப் போனேன்.

அப்போது அவர் சத்யா ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்தார். ஷூட்டிங் முடிந்து மேக்கப்பை கலைத்துவிட்டு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது மேக்கப் அறை வாசலில் தான் கார் வந்து நிற்கும். விறுவிறுவென வந்து அவர் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.

அப்போது நான் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி அருகில் அழைத்து என்னவென்று கேட்டார்.

நான் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்துக்கு நேற்று தான் சிச்சுவேஷன் சொன்னாங்க. நாளைக்கு தான் கம்போசிங். அதனால் பாட்டெழுதின பிறகு வாங்கப்போற பேமெண்ட்டை முன்பணமாக இன்றைக்கே கேட்டு வாங்கிக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன்.

சற்று யோசித்தவர், “வேண்டாம். அது நல்லா இருக்காது. நீ அந்தக் கம்பெனிக்கு இதுக்கு முன்ன பாட்டு எழுதினதில்ல. நான் தான் உன்னை சிபாரிசு செய்தேன். அதனால அவங்ககிட்ட கேட்டா அது அசிங்கம். அதுவும் நீ கேட்கவே கூடாது” என்று சொல்லிவிட்டு, அவரது உதவியாளர் மாணிக்கத்திடம் காரில் இருக்கும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்படி சொல்லிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் மேக்கப் அறைக்குள் நுழைந்தார்.

சூட்கேஸில் இருந்து 2000 ரூபாய் எடுத்துக் கொடுத்து, உடனே டாக்டரைப் போய் பாருங்க என்றார். பவுன் 400 ரூபாய் விற்ற காலம் அது. 2000 ரூபாய் என்பது இன்றைக்கு லட்ச ரூபாய்க்கு சமம். இதுதான் அவருடைய மனித நேயம். காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் மேக்கப் அறைக்கு திரும்ப மாட்டார்.

ஆனால் அன்றைக்கு என் நிலைமையைச் சொன்னபோது அவர் இறங்கி வந்தார் என்றால் அது எனக்காக என்றில்லை. என் நிலைமையில் அன்றைக்கு அவரிடம் யார் வந்து உதவி என்று நின்றிருந்தாலும் அவர் இதைத் தான் செய்திருப்பார். அப்பேற்பட்ட மனிதநேயம் மிக்க மாணிக்கம் அவர்” என்று சொல்லும்போதே முத்துலிங்கத்தின் கண்கள் கலங்கி இருந்தன.

அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார் என்பதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்.

“மீனவ நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வாங்க முத்துலிங்கம்… இந்தப் படத்துல நீங்க என்ன பாட்டு எழுதறீங்க?”என்று கேட்டார்.
“நான் எதுவும் எழுதலியே” என்றேன்.

“என்னது எழுதலியா? உங்களுக்கு ஒரு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே!” என்றார்.
“என்னை யாரும் கூப்பிடலியே!” என்றேன்.
உடனே ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்தார்.

“முத்துலிங்கத்துக்கு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே, ஏன் தரல?” என்றார்.
“நாங்க தேடும்போது அவர் ஊருல இல்லை” என்று பதில் வந்தது.

“ஊர்ல இல்லைனா ஏன் என்கிட்ட சொல்லல? என்ன… ஸ்ரீதர் படம்னு கொஞ்சம் சலுகை கொடுத்தா அதிகமா உரிமை எடுத்துக்கறீங்களா?” என்று கடுமையாக கோபித்துக் கொண்டவர் என்பக்கம் திரும்பி…

“கவிஞரே இனிமே ஊருக்கு போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போகணும் புரிஞ்சதா” என்று சொல்லிவிட்டு, “முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுக்க சொன்னேன்னு டைரக்டர்கிட்ட சொல்லு” என்றார்.

“சார்… படத்துல பாடலுக்கான அத்தனை சிச்சுவேஷனும் முடிஞ்சுட்டதா டைரக்டரும் ப்ரொட்யூசரும் நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க” என்றார் ப்ரொடக்ஷன் மேனேஜர்.

“அப்படியா…? அப்படின்னா டைரக்டரையும், ‘சானா’வையும் கூப்பிடு” என்றார்.
டைரக்டர் என்றால் ஸ்ரீதர். சானா என்றால் அந்தப் படத்தின் ப்ரொட்யூசர் சடையப்ப செட்டியார். இருவரும் வந்தனர்.

“இவர் தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வச்சு ஒரு டிரீம் ஸாங் போடுங்க. நல்லாருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ஸாங்குக்கான சிச்சுவேஷன் எல்லாமே முடிஞ்சிடுச்சே எங்க போடுறது?” என்று செட்டியாரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

“டிரீம் ஸாங்குக்கு என்ன சிச்சுவேஷன் வேண்டிக்கிடக்கு. சிச்சுவேஷன் இல்லாத ஒரு சிச்சுவேஷனை உருவாக்குறது தானே டிரீம் ஸாங். ஒரு ரிலாக்ஸூக்கு போடுறது தானே. சாப்பிடும்போது நினைச்சு பார்க்குற மாதிரியோ, இல்ல வேலை செய்யும்போது அசதியில கண் அசந்து கனவு காணுற மாதிரியோ போடலாமே.

‘அன்பே வா’ல போட்டமே, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…” அது என்ன சிச்சுவேஷன்? அது மாதிரி “விழியே கதை எழுது”ன்னு ‘உரிமைக்குரல்’ படத்துல போட்டீங்களே அது என்ன சிச்சுவேஷன்? அதமாதிரி ஒன்னு உருவாக்குங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.

அதற்கு அப்புறம் ஒரு டிரீம் சிச்சுவேஷனை உருவாக்கி போட்ட பாடல் தான் அந்தப் படத்துலயே பெரிய ஹிட் ஆச்சு. அதான் “தங்கத்தில் முகமெடுத்து… சந்தனத்தில் உடலெடுத்து”.

எல்லா பாடல்களும் முடிந்துவிட்ட நிலையிலும் எதற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கினார் என்றால், தன்னை நம்பி வந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான். அதனால் தான் அவர் மறைந்தும் மறையாமல் கோடாணுகோடி இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் பாடல்களை ஓ.கே. வாங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டை அவர் ஓ.கே. பண்றதுக்கு ஒரு மாசம் ஆச்சு.

அருண்சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடரிலிருந்து ஒரு பகுதி.

#கண்ணதாசன் #வாலி #எம்ஜிஆர் #கவிஞர் முத்துலிங்கம் #அதிமுக #கவிஞர்_பாரதிதாசன் #kannadhasan #vaali #mgr #kavignar_muthulingam #admk #bharathidhasan

You might also like